முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயை இலங்கையின் உண்மையான நண்பன் என வர்ணித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தின்போது இலங்கைக்கு வாஜ்பாய் உதவிபுரிந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்று வாஜ்பாய்க்கான அனுதாப குறிப்பேட்டில் பதிவு செய்த பின்னர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
வாஜ்பாய் மிகச்சிறந்த பிரதமர்களில் ஒருவர் அவர் இலங்கையின் உண்மையான நண்பன், இலங்கைக்காக எப்போதும் துணைநின்றவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பிரதமராக நான் முன்னர் பதவி வகித்தவேளை இந்திய பிரதமராக வாஜ்பாய் பதவி வகித்தார். அவ்வேளை எங்கள் பொருளாதாரம் மிகவும் பலவீனமாநிலையிலிருந்தது,வாஜ்பாய் எங்கள் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வற்கு உதவினார் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்
.வாஜ்பாய் அரசாங்கத்தின் காலத்தில் எங்கள் படையினரிற்கு வழங்கப்பட்ட பயிற்சி காரணமாகவே எங்களால் விடுதலைப்புலிகளின் கடற்புலிகளை தோற்கடிக்க முடிந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாஜ்பாயை 1975 இல் முதன் முதலில் சந்தித்தேன் 77 இல் அவர் வெளிவிவகார அமைச்சரான வேளை நான் பிரதிவெளிவிவகார அமைச்சராகயிருந்ததால் எங்கள் மத்தியில் நட்புறவு காணப்பட்டது அவர் பிரதமரானதும் தனது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தை எனக்கு வழங்கினார் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.