முக்கிய செய்திகள்

தமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)

தமிழகத்தில் பாஜகவின் வலிமை அதிகரித்து வருவதாக கூறப்படுவதைக் கேட்டால் தமக்கு சிரிப்பு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி இந்து ஆங்கில இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பாஜகவின் ஒரே நாடு, ஓரே கட்சி, ஒரே தலைவர் மோடி என்ற கருத்தாக்கத்தை எதிர்த்து திமுக தொடர்ந்து போராடும் என்றும் கூறியுள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில் இருந்து..

கேள்வி: திமுகவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்று எவற்றைக் கருதுகிறீர்கள்…?

பதி்ல்: அண்ணா மறைவுக்குப் பிறகு, கலைஞர் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அண்ணாவின் இதயத்தை இரவலாக பெற்றதாக கூறும் கலைஞரிடம் பயிற்சி பெற்றவன் நான். இந்த சமூகத்திற்காகவும், கட்சியின் கொள்கைகளை நிலை நிறுத்துவதற்காகவும் தொடர்ந்து பணியாற்றி வந்திருக்கிறேன். கடுமையாக உழைப்பவன் என என்னை கலைஞர் பாராட்டி  இருக்கிறார். கட்சியின் தலைவராக கடுமையான உழைப்பை செலுத்துவதுடன், எத்தகைய சவால்களையும் எதிர் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை கட்சி எனக்கு தற்போது அளித்திருக்கிறது. 

கேள்வி: கருணாநிதி, ஜெயலலிதா மறைவால் தமிழகத்தில் பெரிய அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. நடிகர்கள் தலைமையில் புதிய கட்சிகள் உதயமாகி வருகின்றன. இந்த சூழலில் திமுகவின் வேலைத்திட்டம் என்னவாக இருக்கிறது?

பதில்: வெற்றிடம் ஏற்படும் போது அது உடனடியாக நிரப்பப்பட்டு விடும் என்கிறது அறிவியல். திமுகவைப் பொறுத்தவரை வெற்றிடம் எதுவுமில்லை. அது குறித்த ஊகங்களுக்கு கலைஞர் இடம்வைக்கவில்லை. அதிமுகவிற்கு அந்தக் கூற்று பொருந்தக் கூடும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியே இரண்டாக பிரிந்து விட்டது. புதிய கட்சிகள் தொடங்கப்படுவதைப் பற்றிக் கேட்கிறீர்கள். ஜனநாயக நாட்டில் யார்வேண்டுமானாலும் அரசியலுக்குள் வரலாம். அதைத் தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. மக்களின் ஆதரவுடன் திமுக எப்போதும் தலைநிமிர்ந்து நிற்கும். தனது கொள்கை வழியில் தொடர்ந்து பயணிக்கும். அத்துடன் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்தும். மக்களை ஒருங்கிணைப்பதற்கான முழக்கங்களை திமுக உருவாக்கிக் கொண்டே இருக்கும். மக்கள் விரோத பாஜக, அதிமுக அரசுகளுக்கு எதிரான போராட்டக் களத்தில் திமுக எப்போதும் முன்னணியில் நிற்கும். மக்கள் விரோத அரசுகளுக்கு முதல் அடி கொடுக்கும் கட்சியாக திமுகதான் இருக்கும். கடைசி அடி கொடுக்கும் இயக்கமாகவும் திமுகவே இருக்கும். திமுக வரலாற்றில் எப்போதுமே இது நிரூபணமாகி உள்ளது.

கேள்வி: திமுக வரலாற்றில் முதல் முறையாக கடவுள் பற்றிய நிலைப்பாட்டை பொதுக்குழுவில் தெளிவு படுத்தி இருக்கிறீர்கள். தமிழகத்தில் மதம் மற்றும் கடவுளுக்கு எதிராக பிரச்சாரம் செய்வது கடினம் என்று கருதியதே இதற்குக் காரணமா? குறிப்பாக  திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என தமிழகத்தில் வளர்ந்து வரும் பாஜக மேற்கொண்டு  வரும் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறீர்களா?

பதில்: இதற்கு விரிவாகவே பதிலளிக்க விரும்புகிறேன். திமுகவைத் தொடங்கிய அண்ணா ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கருத்தை வலியுறுத்தினார். “நான் பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன், பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன்” என்றார். அண்ணாவின் இந்தக் கருத்தை கலைஞர் பலமுறை எடுத்துக் கூறியிருக்கிறார். ஆனால், ஒரு சிலர் இந்த உண்மைகளை மறைத்து திமுக ஒரு நாத்திகக் கட்சி மற்றும் இந்து எதிர்ப்புக் கட்சி என்ற தோற்றத்தை உருவாக்க பார்க்கின்றனர். அண்ணா கடவுளைப் பற்றி பேசும் போது “ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்”  என்ற பாரதி வரிகளை எடு்த்தாண்டிருக்கிறார். கலைஞர் எப்போதுமே கட்சி பேதம் பாராத அணுகுமுறையை கடைப்பிடித்து வந்தவர். அவருடைய கருத்துகளையோ, நம்பிக்கைகளையோ மற்றவர்கள் மீது எப்போதுமே திணிக்க மாட்டார். மதம் மற்றும் கடவுள் நம்பிக்கைகளுக்கு அவர் எதிரானவர் அல்ல. அப்படி இருந்திருந்தால் அவர் ஏன் கபாலீஸ்வரர் கோவில் குளத்தை தூர்வார வேண்டும். திருவண்ணாமலை கோவிலின் ஒரு பகுதி பழுதடைந்த போது அதை ஏன் சீரமைக்க வேண்டும்? 20 ஆண்டுகளாக ஓடாமல் கிடந்த திருவாரூர் தேரை ஓடவைக்க 1969ல் நவடிக்கை எடுத்ததுடன், அப்போது அமைச்சராக இருந்த மன்னை நாராயணசாமியை ஏன் பங்கேற்கச் செய்ய வேண்டும்?

பொதுக்குழுவில் கடவுளைப் பற்றி நான் பேசும்போது அண்ணா, கலைஞர் ஆகியோரது கருத்துகளை மனதில் எண்ணிக் கொண்டேன். நீங்கள் நினைப்பதைப் போல திமுக ஒருபோதும் கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை கொண்டோரைப் புண்படுத்திப் பேசியதில்லை.

திமுகவின் சமூக, பொருளாதார, அரசியல் கொள்கைகளுக்கு நேரடியாக முகம் கொடுத்து எதிர்த்து நிற்க முடியாதோர், இதுபோன்ற தவறான பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர். மதவாதம், அடிப்படை வாதம், நாட்டின் பன்முகத் தன்மையை அழிக்க நினைக்கும் சக்திகள் இவற்றுக்கு எதிராக திமுக இதுவரை போராடி வந்திருக்கிறது. இனியும் தொடர்ந்து போராடும்.

பாஜக தமிழகத்தில் வளர்ந்து வருகிறது என்பதைக் கேட்டால் எனக்கு சிரிப்புத் தான் வருகிறது. தமிழகத்தில் பாஜக வளர்கிறதா, அல்லது தேய்ந்து வருகிறதா என்பதை பொதுவானவர்களிடம் கேட்டுப்பாருங்கள், தெரியும்.

கேள்வி: கலைஞர் நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்ட பிற மாநிலத் தலைவர்கள், தேசிய அரசியலில் நீங்கள் வகிக்க வேண்டிய பங்கைச் சுட்டிக்காட்டி, தலைமை தாங்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். உங்களுக்கான அந்த பங்களி்ப்பை எப்படிச் செயல்படுத்தப் போகிறீர்கள். காங்கிரஸ் இதன் மூலம் வலிமை பெறக் கூடும் எனக் கருதுகிறீர்களா?

பதில்: மத்தியில் ஆளும் மதவாத பாஜகவை ஒழிக்க மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும். இதில், முந்தைய காலங்களில் கலைஞர் கையாண்ட வெற்றிகரமான வழிமுறைகளையே நானும் பின்பற்றுவேன். நாட்டின் பன்முகத் தன்மையைக் காக்கவும், மாநில உரிமைகள் மற்றும் மொழிகளைக் காக்கவும், பாஜகவைத் தோற்கடிப்போம், பாசிசத்தை வேரறுப்போம் என்ற முழக்கத்தின் அடிப்படையில் ஒத்த கருத்துள்ள கட்சிகளை ஓரணியில் திரட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.

கேள்வி: ஒருபக்கம் பாஜகவை எதிர்க்கிறீர்கள். மற்றொரு பக்கம் கலைஞர் மறைவுக்கான அஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்க பாஜக தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கிறீர்கள். இதன் மூலம் பாஜகவுக்கான கதவுகளைத் திறந்தே வைக்கிறீர்கள் எனக் கொள்ளலாமா?

பதில்: அஞ்சலிக் கூட்டத்தில் பாஜக தலைவர்கள் பங்கேற்றதை வைத்து அக்கட்சிக்கான கதவுகளை திமுக திறந்தே வைத்திருக்கிறது எனக் கூறுவதை ஏற்க முடியாது. கலைஞர் உடல் நலம் குன்றியிருந்த போது, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வந்து பார்த்துச் சென்றார். கலைஞர் மறைவின் போது பிரதமர் மோடி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அதனால், அஞ்சலிக் கூட்டத்திற்கு அவர்களுக்கும் அழைப்பு விடுத்தோம். அது நமது பண்பாடு. அதற்கு அரசியல் சாயம் பூசி சிறுமைப் படுத்தக் கூடாது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்த போது, நான் டெல்லி சென்று அஞ்சலி செலுத்தினேன். என்னுடன், கனிமொழி, டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் வந்திருந்தனர். ஆர்.எஸ்.பாரதி வாஜ்பாய் மறைவை ஒட்டி நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்றார். இதில் சிறிதளவும் அரசியல் நோக்கம் இல்லை.

சிலர் ஏதோ பாஜகவுடன் திமுக நெருங்குவதாக கற்பனையான கதைகளை எழுதி ஊடகங்களில் உலவ விட்டனர். ஒரு போதும் அது உண்மையாகாது. பாஜகவின் மதவாத, பாசிச அணுகுமுறையை எதிர்ப்பதில் திமுக எப்போதுமே உறுதியாக இருக்கும்.

கேள்வி: தற்போதைய அதிமுக அரசு அதன் முழு ஆட்சிக் காலத்தை நிறைவு செய்யும் என நினைக்கிறீர்களா

பதில்: தமிழகத்தில் ஓர் அரசு இருப்பதாகவே யாரும் கருதவில்லை. பினாமி நிறுவனங்களை உருவாக்கி, பணத்தை ஈட்டுவதற்காக செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்துவது போல் நடத்தி வருகிறார்கள். அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த அரசு அகல வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.

கேள்வி: உங்கள் மகன் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்குள் வந்து விட்டாரா? அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: அவர் இப்போது புதிதாக அரசியலுக்குள் வரவில்லை. அவர் எப்போதுமே அரசியலில் தான் இருக்கிறார். திமுகவில் ஒருவர் இருந்தால் அவரது குடும்பம் மொத்தமும் திமுகவாகத்தான் இருக்கும். இப்படி லட்சக்கணக்கான குடும்பங்களைக் கொண்டது திமுக. திமுகவினரின் குடும்பத்தை நீங்கள் கூர்ந்து கவனித்தால், அவர்கள் தாத்தா காலத்தில் இருந்து திமுகவில் இருப்பது தெரியும். வாழையடி வாழையாக அடுத்த தலைமுறைகளையும் திமுகவுக்கு அந்தக் குடும்பங்கள் வழங்கி வருகின்றன. எனவே, தந்தையும், மகனும் இந்தக் கட்சியில் இருப்பதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

கேள்வி: தமிழ்த்தேசிய இயக்கத்தினர் திராவிட இயக்கத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்களே..

பதில்: தமிழ்த் தேசியம், திராவிட தேசியம் குறித்து இவர்களது புரிதல் என்ன என்பது எனக்குத் தெரியவில்லை. இரண்டும் ஒன்றுதான் என்பதற்கு என்னிடம் போதிய காரணங்கள் இருக்கின்றன. திராவிடம், தமிழ் இரண்டையும் ஒரே பொருளில்  பெரியார் மாற்றிப் பயன்படுத்தி வந்திருக்கிறார். இரண்டும் ஒரே கருத்தைக் குறிப்பன என்பதை ஆய்வாளர்களும் தெளிவு படுத்தி உள்ளனர். தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை முதலில் முன்வைத்தது திமுக தான். மதராஸ் மாகாணத்தை தமிழ்நாடு அரசு என மாற்றியது திமுகதான். தட்சிண பிரதேசம் என்ற பகுதியை உருவாக்க வேண்டும் என்ற தென்மாநிலங்களின் முயற்சிக்கு திமுக எதிர்ப்புத் தெரிவித்தது. தமிழ்த்தேசிய வாதிகளால் ஏற்றுக் கொள்ளப்படும் ஆதித்தனார், திமுகவில் சேர்ந்து அமைச்சராகவும், சபாநாயகராகவும் பதவி வகித்தார்.  ம.பொ.சி. சட்ட மேலவைத் தலைவராக இருந்து வந்தார். இவையெல்லாம் தமிழ்த் தேசியம் பேசுவோருக்கு தெரியாதா?

ராமாயணமும், மகாபாரதமும் பேசப்பட்டு வந்த காலத்தில் அண்ணாவும் ,கலைஞரும் சங்கத் தமிழையும், திருக்குறளையும் தமிழர்கள் மத்தியில் பரப்பினர். தலைநகரில் வள்ளுவருக்கு கோட்டம் கட்டினார் கலைஞர். குமரியிலே வள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டது. தமிழர் உரிமை பேசும் இயக்கமாக தமிழ் மக்களால்  அங்கீகரிக்கப்பட்டு, தமிழகத்தில் செழித்தோங்கி வளர்ந்து நிலை பெற்றிருப்பது திமுக. அதே பாதையில் திமுக தொடர்ந்து வெற்றிநடை போடும். திராவிட இயக்கத்திற்கு மாற்றாக வேறொரு சக்தி தமிழகத்தில் இல்லை. எத்தகைய சவால்களையும் சந்திக்கும் ஆற்றலும், திராணியும் திமுகவுக்கு உண்டு .அதற்கு மாற்றான சக்தி இனித்தான் பிறக்க வேண்டும்.

திராவிடக் கட்சிகள் என்று எந்த இயக்கங்களை மனதில் வைத்துப் பேசுகிறீர்கள் எனத் தெரியவில்லை. அதிமுகவை திராவிட இயக்கமாக கருத முடியாது. அது திராவிட இயக்க சித்தாந்திற்கு முற்றிலும் முரண்பட்ட ஒரு கட்சி. திராவிட இயக்க கொள்கைகளுக்கு எதிரானதும் கூட. திமுகவில் இருந்து வெளியேறிய எம்ஜிஆர், அந்த இயக்கத்தை எதிர்ப்பதற்காக அப்போதைய சூழலைப் பயன்படுத்தி ஒரு புதிய கட்சியைத் தொடங்கினார். அது அவருக்கென்று ஓர் அரசியல் வடிவத்தையும், செல்வாக்கையும் வழங்கியது. அவ்வளவுதான்.      

ஆங்கிலத்தில் பேட்டி  : மூத்த பத்திரிகையாளர் கோலப்பன்

நன்றி: தி இந்து, 24.09.2018       

தமிழில்: மேனா.உலகநாதன்