முக்கிய செய்திகள்

மத்திய அரசுக்கு எதிரான மம்தாவின் போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு: தொலைபேசி மூலமாக ஆதரவு தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின்

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் இயங்கி வந்த சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் நிறுவனங்களின் மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இரு வழக்குகள் தொடர்பாக மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே நேற்று இரவு சிட்பண்ட் மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் விசாரணை நடத்தச்சென்ற சிபிஐ அதிகாரிகள் 5 பேரை மேற்கு வங்க போலீசார் கைது செய்தனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய  அரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் மம்தா பானர்ஜி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.  இதனிடையே நேற்றிரவு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரடியாக போலீஸ் கமிஷனரின் வீட்டுக்கு வந்தார்.  இதைத்தொடர்ந்து அவர் மத்திய அரசை கண்டித்தும், அரசியல் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. சிபிஐயை கண்டித்து திரிணாமுல் காங்கிரசார் மாநிலத்தின் பல பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மம்தாவின் தர்ணா போராட்டம் 2-வது நாளாக நீடித்து வருகிறது.

மம்தாவுக்கு காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, திமுக, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன. காங்கிரஸ் தலைவர் ராகுல் விடுத்துள்ள டிவிட்டர் பதிவில் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்று திரளவேண்டும், மத்திய அரசின் பாசிசப் போக்கிற்கு எதிரான மம்தாவின் போராட்டத்திற்கு காங்கிரஸ் தோளோடு தோள் நின்று ஆதரவு தெரிவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, மம்தா பாணர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், நேற்றிரவு முதல் அவர் நடந்த்திவரும் போராட்டம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார். மாநில சுயாட்சிக்கு ஆதரவான போராட்டங்களுக்கு தி.மு.க என்றும் ஆதரவாக இருக்கும் என்றும் ஸ்டாலின் அப்போது உறுதியளித்தார்.