முக்கிய செய்திகள்

மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்…


ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வியால் பின்னடைவு இல்லை எனத் தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், உறுதியுடன் பயணிக்க வருமாறு தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஜனநாயகத் தேர்தல் களத்தை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு சந்தித்த திமுக, ஜனநாயக நெறிகள், கோட்பாடுகளை பின்பற்றி செயல்பட்டதற்கு கிடைத்த பரிசே ஆர்.கே.நகரில் கிடைத்துள்ள பின்னடைவு என குறிப்பிட்டுள்ளார்.

திமுகவின் தோல்வியை பார்த்து ஏளனம் செய்பவர்கள், ஆர்.கே.நகர் தேர்தலில் நடந்த அத்துமீறல்களை மறைக்க நேரடியாகவோ-மறைமுகமாகவோ துணைபோகிறார்கள் என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

ஓட்டுக்கு ரூ.6,000 வழங்கிய பினாமி ஆட்சியாளர்களையும், ரூ.20 டோக்கன் கொடுத்து வாக்களித்தபின் ரூ.10,000 டெபாசிட் செய்த ஹவாலா அரசியல்வாதிகளையும் தேர்தல் ஆணையம் சிறிதும் கண்டுகொள்ளவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இப்போதும்கூட சில கட்சியினர், தாங்கள் அடைந்துள்ள படுதோல்வியை மறைத்துக்கொண்டு, திமுகவின் தோல்வி குறித்து பேசி சிலாகிக்கும் நிலையில், மன உறுதியுடன் செயல்படவேண்டியது அவசியம் என ஸ்டாலின் தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இடைத்தேர்தல் எனும் தற்காலிக தோல்வியை கடந்து 2ஜி எனும் பொய் வழக்கை தவிடுபொடியாக்கி நீதியின் கரங்கள் அளித்த நிரந்தர வெற்றியை தமிழகம் எங்கும் கொண்டாடுவோம் என்றும் ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.