உள்ளாட்சி அமைப்புகளை முடக்கிவிட்டு சொத்துவரியை உயர்த்துவதா?: மா.சுப்பிரமணியன்

உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத அதிமுக அரசு, அதே உயர்நீதிமன்றத்தின் உத்தரவைக் காரணம் காட்டி சொத்துவரியை உயர்த்தி இருப்பதாக திமுக எம்எல்ஏவும் முன்னாள் சென்னை மாநகராட்சி மேயருமான மா.சுப்பிரமணியன் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தேர்தலை நடத்தாமல் உள்ளாட்சி அமைப்புகளை தனி அதிகாரிகளின் நிர்வாகத்தில் முடக்கி வைத்திருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு இப்போது மாநகராட்சி முதல் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தியிருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அக்டோபர் 2016-லிருந்து உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை கூட தீர்த்து வைக்க முடியாமல் ஊராட்சி முதல் மாநகராட்சி வரை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் செயலிழந்து போய் கிடக்கின்றன. உயர்நீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் “வார்டு மறு சீரமைப்பு” என்றும், கதைக்கு உதவாத காரணங்களைச் சொல்லியும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் உன்னத நோக்கத்தையே இந்த அரசு பாழ்படுத்தி வருகிறது. உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லை,உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பதால் மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய 3500 கோடிக்கும் மேற்பட்ட நிதி இன்னமும் பெறப்படாமல் உள்ளது. மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் துரையின் அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் என்பவர் அதிமுக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தாதலினால்தான் இத்தொகை விடுவிக்க முடியவில்லை என்று வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகள் என்று எல்லா அமைப்புகளிலும் டெண்டர் ஊழல் சிரிப்பாய் சிரிக்கிறது. ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சிகள் நிர்வாகத்துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் விடப்படும் டெண்டர்களில் எல்லாம் “கமிஷன்” தலைவிரித்தாடுகிறது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை ஊழல்கள்தான் அனைத்து துறைகளையும் விஞ்சி நிற்கிறது. அதை தடுக்கும் திராணி இல்லாத அமைச்சரும், மாண்புமிகு முதலமைச்சரும் சொத்து வரியை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தியிருப்பது மக்கள் விரோத நடவடிக்கை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த போது “அது கொள்கை முடிவு” என்று எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தடை பெற்றது அதிமுக அரசு. 31.12.2016க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடியுங்கள் என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இன்றுவரை மதிக்காத அதிமுக அரசு, சொத்து வரி விவகாரத்தில் மட்டும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை காரணம் காட்டி இப்படி விண்ணைத் தொடும் அளவிற்கு சொத்துவரியை உயர்த்தி ஏழை எளிய நடுத்தர மக்களை துயரத்தில் ஆழ்த்தியிருப்பது பொறுப்பற்ற, நிர்வாத திறமையற்ற ஒரு அரசின் லட்சணத்தை வெளிப்படுத்துகிறது.சொத்து வரி உயர்த்தப்பட்டவுடன் உடனடியாக மாநகர மற்றும் நகர பகுதிகளில் பாதிக்கப்படஇருப்போர் வாடகை குடியிருப்புதாரர்கள்தான் என்பதை அனைவரும் நன்கறிவர். மாநகராட்சி பகுதிகளோடு புதிதாக இணைக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு எந்த விதமான புதிய வசதிகளையும் ஏற்படுத்தாமல் மாநகர் பகுதிகளுக்கு இணையாக சொத்து வரியினை மட்டும் உயர்த்தப்படும்போது மிகப்பெரிய அளவிலான பாதிப்புக்குள்ளாவார்கள். உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்தி மத்திய அரசின் மானிய உதவி தொகைகளை பெற்று உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தாமல் சொத்துவரியை மட்டும் உயர்த்தி மக்களை வஞ்சிக்கும் அதிமுக அரசின் கையாலாகாததானத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

மின் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம், சொத்து வரி என்று எதுவாக இருந்தாலும் செங்குத்தாக உயர்த்தும் அதிமுக அரசுக்கு மீண்டும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டு, இப்படியொரு மக்கள் விரோத அரசு நீண்ட நாட்கள் நீடிக்க முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு மா.சுப்பிரமணியன் அதில் தெரிவித்துள்ளார்.

 

Ma.Subramaniyan Condemned Hike of property tax

 

 

தமிழகம் புதுச்சேரியி்ல மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வரலாற்றில் இல்லாத துன்பத்தை அனுபவிக்க நேரிடும்: ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

Recent Posts