
“சொக்கர் கடம்பில் வருநாடு – சோம
சுந்தரர் ஆண்ட தமிழ்நாடு
மிக்குநயர் கன்னிவளநாடு – அம்மை
மீனாள் ஆண்ட தமிழ்நாடு”
எனத் தொடங்கும் “செந்தமிழ்நாட்டுச் சிறப்பு” எனும் பாடலை, 1925ஆம் ஆண்டே இயற்றியவர்தான், குகமணிவாசக சரணாலய சுவாமிகள் எனப் பின்னாளில் போற்றப்பட்ட தற்போதைய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேப்பங்குளம் மதுரகவி ஆண்டவர்.
இவரது வற்றாத கவித்திறனும், வளமான தமிழறிவும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர் பலரையும் ஈர்க்கக் கூடியதாக இருந்துள்ளது.
குமரக் கடவுள் குடியிருக்கும் குன்றக்குடி மலைக் கோவிலின் கருவறை வாசலில் இப்போதும் இடம்பெற்றிருக்கும் –
“முடியானை மணிபதித்த முடியானைக் கருமைநிற முகிலார்
குன்றக் குடியானை அடியர்மனக் குடியானை மாறாது கொடுக்கும்
அன்னக் கொடியானை பொருசேவற் கொடியானை குகன்என்றே
குவியார் நெஞ்சம் படியானை ஏழேழுபடியானை அனுதினமும் பரவி வாழ்வாம்”

என்ற மதுரகவி ஆண்டவரின் பாடல் இடம்பெற்றிருப்பதே, அவரது பெருமை மிகு தமிழ்த்தவ வாழ்வுக்கு அழியாத சான்று.
இத்தகைய தமிழாய்ந்த பெருந்தகை, தருமமே கருமமாய் கொண்டு வாழ்ந்த தவசீலர், சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளம் மண்ணில் பிறந்தவர் என்பது, அந்த மண்ணுக்கும், மக்களுக்கும் மட்டுமின்றி, தமிழ்ச் சமூகத்திற்கே அழியாத பெருமையைத் தரக் கூடிய பெரும் பேறாகும்.
பழங்கால முறைப்படி குன்னங்கோட்டை நாடு என அழைக்கப்படும் அப்பகுதியின் பெருமைக்கான அடையாளமாகத் திகழும் கல்லல் பெருந்தேரை உருவாக்கித் தந்த மதுரகவி ஆண்டவர் சுவாமிகளின் வரலாறு, அறவாழ்வில் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் ஊக்கம் தரக்கூடிய ஒன்று.
சிவகங்கை மாவட்டத்தின் சின்னக்கொழும்பு என அழைக்கப்பட்ட வேப்பங்குளம் கிராமத்தில் சின்னையா எனும் சின்மய தேசிகர் மகன் சோணைமுத்து – இலக்குமி தம்பதியருக்கு மகனாக 1885ம் ஆண்டு, ஆகஸ்ட் திங்கள் 23 ஆம் நாள் (பார்த்திப ஆண்டு ஆவணித் திங்கள் 6 ஆம் நாள்) பிறந்தார் அந்தப் பெருமகனார். பெற்றோர் அவருக்கு ஆண்டவன் என்ற பெயரைச் சூட்டினர்.
ஆண்டவன் அவர்களின் பாட்டனார், சின்மய தேசிகர் வேதாந்த நூல்களையும், கம்பராமாயணம் முதலிய காவியங்களையும் கற்றுணர்ந்த ஞானியாகத் திகழ்ந்துள்ளார். நாநாசீவ வாதக்கட்டளை நூலை ஆனந்தக் களிப்பு மெட்டில் இயற்றும் ஆற்றலைப் பெற்ற அருந்தமிழ்க் கவியாகவும் விளங்கியுள்ளார். இதனால், அவர் சின்மய தேசிகர் எனப் பழங்காலத் தமிழ்ச்சான்றோர்களால் அழைக்கப்பட்டுள்ளார்.
தக்க பருவத்தில் வெற்றியூர் எரணப்பன் என்பாரது மகள் காளியம்மையை ஆண்டவனாருக்கு உற்றமும், சுற்றமும் இருந்து வெகு சிறப்பாகத் திருமணம் செய்து வைத்தனர்.

வாழ்வில் வசந்தம் தவழ்ந்தது. ஆண்டவன் – காளியம்மை தம்பதிக்கு ஆண் மகவு பிறந்தது. அந்த மகனுக்கு நாகுசாமி எனப் பெயர் சூட்டினர். நாகுசாமிக்கு ஆறு வயதாகும் போது அவனைப் பர்மா அழைத்துச் சென்றுவிட்டார் ஆண்டவனார். அங்கு, தன் மகன் நாகுசாமிக்குத் தமிழ் அறிஞர்களை வைத்து முறைப்படி தமிழ் பயிற்றுவித்தார். அவனும் தன்னைப் போலவே தமிழாய்ந்தவனாக வருதல் வேண்டும் என்ற விருப்பமே அவரை அவ்வாறு செய்ய உந்தி இருக்க வேண்டும். காலச்சக்கரம் சுழன்றது. ஆண்டவனார் மதுரகவி ஆண்டவர் என அழைக்கப்படும் அளவுக்குத் தமிழ் கூறும் நல்லுலகு அறிந்த பெருங்கவியானார். மகன் நாகுசாமியும் அவருடனேயே தமிழ் பயின்று வளர்ந்தான். மதுரகவி ஆண்டவர் வாழ்வில் விழுந்த முதல் பேரிடியாக அந்தச் செய்தி வந்தது. மனைவி காளியம்மை உயிரிழந்தார். 6 வயதில் தாயைப் பிரிந்த நாகுசாமி, 20 வயதைக் கடக்கும் இளைஞனாக தந்தை மதுரகவி ஆண்டவருடன் தாய்நாடு திரும்பினான். ஆனால், அப்போது தாய்தான் இல்லை.
இதற்கிடையே, குன்னங்கோட்டை நாட்டுக்கென பெருந்தேர் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற நாட்டின் தலைவரான பட்டத்து ஐயாவின் விருப்பத்தை, ஏற்கனவே ஆலம்பட்டு அரி.பெரி. ஆதப்பன் என்பார், மதுரகவி ஆண்டவருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.
அப்பகுதி மக்கள் உதவியுடன், தமது சொந்தப் பணம் ரூ.33,000 யைக் கொண்டு, மதுரகவி ஆண்டவர் கல்லலில் திருத்தேர் செய்யும் பணியைத் தொடங்கினார். பிற பகுதிகளைச் சேர்ந்த ஒக்கூர் பூங்குடி இராமையா, பாகனேரி பில்லப்பா – உடையப்பா சகோதரர்கள் எனப் பலரும் தேர்ப்பணிக்கு உதவினர். இந்தக் காலக்கட்டத்தில், தேர்த்திருப்பணியை ஒட்டி கல்லலில் திருமடம் ஒன்றை நிறுவி அதற்கு மணிவாசக நிலையம் எனப் பெயரிட்டார் மதுரகவி ஆண்டவர்.

திருவாசகம் இயற்றிய மணிவாசகர் மீது மட்டிலா பற்றும், பெரும் ஈடுபாடும் கொண்டவராக இருந்துள்ளார் மதுரகவி ஆண்டவர். மாணிக்கவாசகரின் திருவாசகத்தையும், திருக்கோவையாரையும் அன்றாடம் பாராயணம் செய்த பின்னரே உணவருந்துவதை வழக்கமாகக் வைத்திருந்துள்ளார். அவரது வாழ்நாள் முழுவதும் இந்த வழக்கம் தொடர்ந்துள்ளது.
இடைப்பட்ட காலத்தில், ஆத்திசூடி விருத்தியுரை ஆசிரியர் வைத்தியலிங்கம் பிள்ளை, நாவலர் ந.மு.வெ..வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் உள்ளிட்ட பல சமகால தமிழ்ச் சான்றோர்களுடன், ஆழ்ந்த நட்பையும், அருந்தமிழ் உறவையும் மதுரகவி ஆண்டவர் பேணி வந்துள்ளார். தனது “கள்ளர் சரித்திரம்” நூலில் நா.மு.வேங்கடசாமி நாட்டார் மதுரகவி ஆண்டவர் எனும் மணிவாசக சரணாலயரின் பெருமைகளை விரிவாகக் கூறியுள்ளார்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1956 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள தமிழ்ப் புலவர் வரிசை (பதினான்காம் புத்தகம்) என்ற நூலில், மணிவாசக சரணாலய அடிகள் என்ற தலைப்பில் மதுரகவி ஆண்டவர் சுவாமிகளின் வரலாறு இடம்பெற்றுள்ளது. அதில் மணிவாசக சரணாலய அடிகள் இயற்றிய 26 நூல்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அவையாவன:
1.திருப்பரங்குன்றப் பதிகம்
2.திருச்செந்தூர்ப் பதிகம்
3. திருப்பழநிப் பதிகம்
4. திருவேரகப் பதிகம்
5. பழமுதிர்சோலைப் பதிகம்
6. குன்றுதோறாடற் பதிகம்
7. குன்றக்குடிப் பதிகம்
8. குமரமலைப் பதிகம்
9. விராலிமலைப் பதிகம்
10. கொடுமளூர்ப் பதிகம்
11. கழுகுமலைப் பதிகம்
12. கழகுமுலைப் பதிகம்
13. எட்டிகுடிப் பதிகம்
14. திருச்சிக் கற்பதிகம்
15. புள்ளிருக்கும் வேளூர்ப் பதிகம்
16. திருத்தணிகாசலப் பதிகம்
17. செந்தமிழ்நாட்டுச் சிறப்பு
18. சேவகத் தேவர் பதிகம்
19. தவம்பெற்றநாயகி பதிகம்
20. திருக்கண்ணீர்ப் பதிகம்
21. அழகியநாயகி பதிகம்
22. எக்கலாதேவி பதிகம்
23. முருகக்கடவுள் விண்ணப்பம்
24. அன்னபூரணி அட்டப்பிரபந்தம்
25. முருகக்கடவுள் விண்ணப்பம்
26. இயன்மொழி வாழ்த்து
குன்றக்குடியில் தமிழ்க் கலாசாலை அமைக்க வேண்டும் என்பது மதுரகவி ஆண்டவரின் பெரும் கனவு. அதற்காக குன்றக்குடியில் இடமும் வாங்கி உள்ளார். ஆனால், அவரது அந்தக் கனவு இறுதிவரை நிறைவேறாமலேயே போய்விட்டது. கல்லல் மடத்தை நிர்வகிப்பதற்காக பல ஊர்களிலும் நிலம் வாங்கிப்போட்டுள்ளார்.
இதனிடையே, பங்காளிகள் மற்றும் பெரியோர் வற்புறுத்தலால் வேப்பங்குளம் ஆறுமுகம் என்பார் மகள் தெய்வானையை இரண்டாவதாக மணந்தார் மதுரகவி ஆண்டவர். இவர்களுக்கு சௌந்தரநாயகி என்ற மகள் பிறந்தாள். உருவில் ஆண்டவனாரையே உரித்துவைத்தாற் போல் இருப்பதாக உற்றார் உறவினர் மகிழ்ந்தனர்.

தேர்த்திருப்பணி முடித்து, தன் இளம் வயது மனைவியை, பெண்குழந்தையுடன் வேப்பங்குளத்தில் விட்டுவிட்டு, மகன் நாகுசாமியுடன் மீண்டும் ரங்கூன் சென்றார் மதுரகவி ஆண்டவர்.
பகலில் தொழில், இரவில் தமிழ் என தந்தையும், மகனும் தங்களது வாழ்வைச் சிறப்புற நடத்தி வந்தனர். தன் தங்கை சௌந்தரநாயகிக்கு, நாகுசாமி பட்டுப்பாவாடையும், சட்டையும் ரங்கூனில் இருந்து அனுப்பிவைத்தான்.
ஆனால், மதுரகவி ஆண்டவரின் வாழ்வில், அமைதியும், மகிழ்ச்சியும் நீடிக்கவில்லை. திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மகன் நாகுசாமி எதிர்பாராமல் மரணமடைந்தான். எதிர்பாராமல் வீசிய அந்தச் சூறாவளியில் திசைதப்பித் தத்தளிக்கும் படகைப்போல நிலை குலைந்தார் மதுரகவி.
தனது வாழ்நாள் கனவுகள் அனைத்தையும் மகன் நாகுசாமி வடிவில் கண்டு மகிழ்ந்திருந்த மதுரகவியை, அவனது மரணம் ஆற்றவும், தேற்றவும் முடியாத பெருந்துயரக் கடலுக்குள் மூழ்கடித்துவிட்டது. மகன் இறந்து மூன்று நாட்கள் கழித்தே மதுரகவி ஆண்டவர் சுயநினைவுக்கு வந்துள்ளார்.
மகன் நாகுசாமி இறந்து பதினாறு நாட்கள் முடியும் வரை ரங்கூனில் இருந்த மதுரகவி ஆண்டவர், பின்னர் பர்மாவில் (மியான்மரில்) இருந்த தனது நிலபுலன்கள் உள்ளிட்ட அனைத்துச் சொத்துகளையும் விற்று விட்டு, சென்னை வந்து சேர்ந்தார்.
சென்னை திருவொற்றியூர் பட்டினத்தார் சமாதிக்கு சென்ற மதுரகவி ஆண்டவர், அங்கு குன்றக்குடி மேலமடத்து கணபதி சாமிகளிடம் சிவதீட்சையும், சந்நியாசமும் பெற்றுள்ளார். அன்று முதல் மணிவசாக சரணாலய சுவாமிகள் என அழைக்கப்படலானார்.
இதையடுத்து, குன்றக்குடி மேலமடத்தில் கணபதி சாமிகளுடன் மணிவாசக சரணாலயன் சுவாமிகள் தங்கி இருப்பதை அறிந்த பங்காளிகள் அவரைச் சென்று சந்திக்கின்றனர். மகனை இழந்த துயரத்தில் மூழ்கி இருந்த அவரிடம், ஆண் வாரிசு இல்லாமல் போனதால், சொத்துகளை பங்காளி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைத் தத்தெடுத்து அவர் பெயருக்கு எழுதி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதன்படி பங்காளி ஒருவரின் மகனான சோ.காளிமுத்து என்பாரைத் தமது தந்தைக்கு சுவீகார புத்திரராகவும், தமக்கு சகோதரராகவும் தத்து எடுத்து, சொத்துகளையும் அவர் பெயருக்கு எழுதி வைத்தார். மதுரகவி ஆண்டவரின் சுவீகார சகோதரர் சோ.காளிமுத்துவின் மகன்கள்தான், பின்னாளில் மடாலயத்தை நிர்வகித்து வந்த கா.அருணாசலம் , கா.சோணைமுத்து ஆகிய சகோதரர்கள் இருவரும் ஆவர்.
துறவுக் கோலம் பூண்ட பின்னர் மணிவாசக சரணாலய சுவாமிகள், கல்லலில் தாம் நிறுவிய மணிவாசக நிலையம் என்ற மடாலயத்திற்கு வந்து சில காலம் தங்கி இருந்தார். இந்த மடத்தில், தாம் பெரிதும் ஈடுபாடு கொண்ட மாணிக்கவாசகருக்கு குருபூஜை நடத்தி வந்தார். சுவாமிகளுக்கு பின்னர் மடத்தை நிர்வகித்து வந்த பண்டித சித. நாராயண சாமி அவர்கள், மாணிக்க வாசகருக்கும், மணிவாசக சரணாலய சுவாமிகளுக்கும் ஆண்டுக்கு இரண்டு குருபூஜைகளை நடத்தி வந்தார்கள். பண்டித சித.நாராயண சாமி மறைந்த பின்னர், மாணிக்க வாசகர், மதுரகவி ஆண்டவர் என்ற மணிவாசக சரணாலய சுவாமிகள், பண்டித சித.நாராயண சாமி ஆகிய மூவருக்கும் குருபூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆண்டவர் சுவாமிகளின் வாரிசுகள் மற்றும் ஈடுபாடு கொண்ட மெய்யன்பர்கள் அனைவரும் சேர்ந்து மூன்று குருபூஜைகளையும் நடத்தி வருகின்றனர்.
துறவுக்குப் பின் கல்லல் மணிவாசக நிலையம் மடாலயத்தில் வந்து தங்கி இருந்து மணிவாசக சரணாலய சுவாமிகள், 5 வயதே ஆன தனது மகள் சௌந்தரநாயகியை வரவழைத்து பார்த்துள்ளார். “என்னுடைய சொத்து எதுவும் உனக்கு இல்லை என்று எண்ணி எப்போதும் வருந்தாதே…” என்று கூறி அப்போது தன் மகளான சிறுமி சௌந்தரநாயகியிடம் மணிவாசக சரணாலய சுவாமிகள் கண்கலங்கி உள்ளார். தன் தந்தையுடன் நிகழ்ந்த அந்த நெகிழ்ச்சி மிகு சந்திப்பை, தன் இறுதிக் காலம் வரை சௌந்தரநாயகி அம்மாள் அவரது பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்திகளிடம் நினைவு கூர்வார். 21 வயதில் மகளுடன் தனித்து விடப்பட்ட மணிவாசக சரணாலய சுவாமிகளின் மனைவியான தெய்வானை அம்மாள், நூறு வயதுவரை கணவர் நினைவாகவே வாழ்ந்து மறைந்தார். ஏறத்தாழ 80 ஆண்டுகள் கற்புத் தெய்வமாக நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்த தெய்வானை அம்மாளை, மதுரகவி ஆண்டவர் எனும் மணிவாசக சரணாலய சுவாமிகளின் வாரிசுகள் அனைவரும் தங்களது குலதெய்வமாகவே தற்போதும் வணங்கி வருகின்றனர்.
கல்லல் மடத்தில் சில காலம் தங்கி இருந்த மணிவாசக சரணாலய சுவாமிகள், பிறந்த மண்ணின் பந்தத்தை முற்றிலும் அறுத்து அங்கிருந்து புறப்பட்டார். அதன் பின்னர் தமிழகம் முழுவதும் அவர் மேற்கொண்ட பயணங்கள், ஒரு துறவியின் பயணமாக மட்டுமின்றி, சைவமும், தமிழும் தழைப்பதற்கான அறம் பரப்பும் அறிவார் பயணமாகவே இருந்துள்ளது. தென்காசி, பழனி, திருச்சி அருகே பழுவூர், சிதம்பரம், பொள்ளாச்சி என சுவாமிகளின் சைவத் தமிழ்ப் பயணம் முடிவற்று நீண்டது. சைவச் சொற்பொழிவு, தமிழ் பயிற்று வித்தல் ஆகியவையே அவர்தம் பயணத்தின் போது மேற்கொண்ட முக்கியப்பணிகளாக இருந்துள்ளன. அவரது பெரும்பான்மையான சொற்பொழிவுகள் ‘தமிழும் சைவமும்’ என்ற வகையிலேயே அமைந்துள்ளன.
இத்தகைய காலச்சுழற்சிக்கு இடையே, மேலப்பூங்குடி பட்டத்து ஐயா பரம்பரையைச் சேர்ந்த தமிழறிஞரும், சிறந்த வேதாந்தியுமான வெள்ளாடைத் துறவி பண்டித. சித. நாரயணசாமி, மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து தமிழ் பயில, மணிவாசக சரணாலய சுவாமிகள் உதவியுள்ளார்.
மணிவாசக சரணாலய சுவாமிகள் துறவு பூண்ட காலம் முதல், அவருக்கு நாராயண சாமி, ஆத்ம நண்பராகவும், சீடராகவும் பலவகையிலும் உறுதுணையாக இருந்து வந்துள்ளார். இதனால், தனது காலத்திற்குப் பின்னர் மடாலய நிர்வாகத்தை மணிவாசக சரணாலய சுவாமிகள், பண்டித சித. நாராயணசாமியிடமே ஒப்படைத்துள்ளார்.
மணிவாசக சரணாலய சுவாமிகள் வாழ்க்கைக் குறிப்புகளின் அடிப்படையில் பார்த்தால், ஏறத்தாழ பத்து ஆண்டுகள் இத்தகைய அறநெறிப் பயணத்தை அவர் மேற்கொண்டிருந்ததை அறிய முடிகிறது. வயது அறுபதை நெருங்கும் காலத்தில், அன்பர்கள் விரும்பி அழைத்ததன் பேரில் பெரம்பலூர் சென்ற சுவாமிகள் அங்கு பச்சைமுத்து உடையார் வீட்டில் தங்கி, அப்பகுதி குழந்தைகளுக்கு திருவாசகம், தேவாரம் கற்பித்துள்ளார். மதுரகவி ஆண்டவர் சுவாமிகளின் தன்னலமற்ற தமிழ்த் தொண்டாலும், அவரிடம் வேண்டி திருநீறு வாங்கி அணிந்த பலருக்கு தங்களது குறைகள் நீங்கியதாலும், அவரது புகழ் அப்பகுதி எங்கும் பரவலாயிற்று. பெரம்பலூர் பகுதியில் உள்ள சன்னனூர், ரெட்டியூர் உள்ளிட்ட பல ஊர்களுக்கும் சென்று மணிவாசக சரணாலய சுவாமிகள் தனது தமிழ்த் தொண்டைச் செய்துள்ளார்.
இந்நிலையில், முருக்கன்குடி கிராமத்தில் வசித்த ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த ராமசாமி – மீனாம்பாள் தம்பதியர், மணிவாசக சரணாலய சுவாமிகளின் பெருமைகளைக் கேள்விப்பட்டு தனது பிள்ளைகள், வெங்கடாசலம், பங்காரு அம்மாள், விருத்தாசலம், ரங்கநாயகி ஆகியோருடன் சென்று சந்தித்து வணங்கி உள்ளனர். அவர்கள் வற்புறுத்தி அழைத்ததன் பேரில், சுவாமிகள் முருக்கன்குடி சென்றுள்ளார். அங்கு, மீனாம்பாள் அம்மையார் இல்லத்தில், அவர்கள் வணங்கிய சிவகாம சுந்தரி அம்பாளுக்கு, சுவாமிகளின் முன்னிலையில் 32 முறை அபிஷேக ஆராதனைகள் செய்துள்ளனர். மீனாம்பாள் அம்மையார் குடும்பத்தினர் வேண்டுகோளை ஏற்று மீண்டும் இரண்டுமுறை சுவாமிகள் முருக்கன்குடி சென்றுள்ளார். மூன்றாவது முறை அந்த ஊர்மக்களும் சேர்ந்து வற்புறுத்தவே மணிவாசக சரணாலய சுவாமிகள் அங்கேயே தங்கி விட்டார். இங்குதான் மணிவாசக சரணாலய சுவாமிகள் தனது வாழ்நாளின் இறுதிப்பகுதியைக் கழித்துள்ளார்.
சுவாமிகளின் பால் பெரும் பக்தி கொண்ட மீனாம்பிகை அம்மையாரின் குடும்பத்தினர் பெரும் சிரத்தையுடன் அவரைக் கவனித்து பரிபாலித்து வந்துள்ளனர். மீனாம்பிகையின் மகள்கள், ரங்கநாயகி, பங்காரு அம்மாள் ஆகிய இருவரும் சுவாமிகளின் இறுதித் தருணம் வரை அவருக்குப் பெரும் தொண்டு புரிந்துள்ளனர்.

அந்தப் பகுதி மக்கள் மணிவாசக சரணாலய சுவாமிகளிடம் வந்து, சைவத் தமிழ் பருகி, மனம் உருகி வணங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி, தங்கள் குழந்தைகளை சுவாமிகளிடம் அனுப்பி தமிழ் பயிலச் செய்துள்ளனர்.
முருக்கன்குடியைச் சேர்ந்த பகுத்தறிவுச் சிந்தனையாளரான பெரியவர் வே.ஆனைமுத்து அவர்கள், மணிவாசக சரணாலய சுவாமிகளிடம் தாம் தமிழ் பயின்ற அனுபவத்தை, அவரது பெயரன் வேப்பங்குளம் புலவர் மெய்யாண்டவரை வந்து நேரில் சந்தித்துக் கூறி நெகிழ்ந்துள்ளார். இப்படி சைவமும், தமிழும் தனது வாழ்வு முழுமைக்கும் கமழ வாழ்ந்த மணிவாசக சரணாலய சுவாமிகள், 1944-ஆம் ஆண்டு, செப்டம்பர் திங்கள் 8-ஆம் நாள் (தாரண ஆண்டு ஆடித் திங்கள் 24ம் தேதி) தன் உடலுக்கு ஏதோ போல இருப்பதாகக் கூறி தியானத்தில் அமர்ந்துள்ளார். அதற்கு முன்னர் தமக்கு முன் தீபத்தை ஏற்றி வைத்து அதை அணையாமல் பாதுகாக்குமாறும், தலைக்குமேல் வீசிக்கொண்டே இருக்குமாறும் கூறியுள்ளார். அத்துடன், தமக்கு ஏதேனும் முடிவு நேர்ந்தால் தெரிவிக்கும் படி கல்லலில் உள்ள பண்டித. சித. நாராயணசாமியின் முகவரியையும் எழுதிக் கொடுத்துள்ளார். பின்னர் சில மணித்துளிகள் தியானத்தில் அமர்ந்திருந்த மணிவாசக சரணாலய சுவாமிகள், “சிவகாம சுந்தரி” என மூன்று முறை மெல்ல உச்சரித்தபடி சமாதி நிலையை அடைந்துள்ளார். ஆம்; சிவகங்கைச் சீமையின், வேப்பங்குளம் மண்ணில் பிறந்து, சோ. ஆண்டவன் அம்பலம் என்ற பெயர் விளங்க, மன்னரைப் போல் கம்பீரமாக தனது வாழ்வைத் தொடங்கிய அந்த மாமனிதர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், மணிவாசக சரணாலயன் சுவாமிகள் என்ற தவக்கோலத்தில் தமது இக வாழ்வை நிறைவு செய்தார்.
மணிவாசக சரணாலய சுவாமிகளின் உடலை, முருக்கன் குடியில் உள்ள மீனாம்பிகை அம்மாள் குடும்பத்தினரது நிலத்தின் ஒரு பகுதியிலேயே நல்லடக்கம் செய்து, சமாதி அமைத்தனர். மணிவாசக சரணாலய சுவாமிகள் எனும் மதுரகவி ஆண்டவர் அடங்கிய (சமாதி ஆன) போது, அவரது மகள் சௌந்தரநாயகிக்கு திருமணம் ஆகி இருந்தது. சௌந்தரநாயகி அம்மாளின் கணவரும், சுவாமிகளின் மாப்பிள்ளையுமான வேப்பங்குளம் ஆறு. மெய்யப்பனார் நேரடியாக முருக்கன்குடி சென்று இந்த இறுதி நிகழ்வில் பங்கேற்றார். அந்த நேரத்தில், சௌந்தரநாயகி அம்மாளின் வயிற்றில் கருவாக இருந்து பிறந்த அவர்களது மூத்த மகள் அன்னபூரணி, பின்னாளில் தமது அய்யாவைப் போலவே துறவு பூண்டார். இவர் தற்போது ஈஸ்வரப்பிரியா என்ற பெயர் தாங்கி, சேலம் சாரதா மடத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
முருக்கன்குடியில், மணிவாசக சரணாலய சுவாமிகளின் சமாதியை தற்போதும் மீனாம்பிகை அம்மையாரின் வாரிசுகள் அன்றாடம் பூசை செய்து வழிபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, அந்த சமாதியுள்ள இரண்டு ஏக்கர் நன்செய் நிலத்தையும் ஆண்டவர் சுவாமிகள் பெயருக்கே எழுதி வைத்து, அதில் இருந்து வந்த வருவாயைக் கொண்டு நினைவாலயம் ஒன்றையும் எழுப்பி உள்ளனர். அந்த நினைவாலயக் கட்டடத்தை நிறைவு செய்து குடமுழுக்கு செய்யும் முயற்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
வேப்பங்குளத்தில் பிறந்து வேந்தரைப் போல் வாழ்வைத் தொடங்கிய போது அவர் ஆண்டவனார். கல்லல் சோமசுந்தரேஸ்வரர் – சவுந்தரநாயகி அம்மன் கோவிலுக்கான திருத்தேரைத் திருத்தமுற அமைத்திட்ட போது அவர் மதுரகவி ஆண்டவர். அளவற்ற செல்வத்தையும், பெறற்கரிய உறவுகளையும் துறந்த போது அவர் மணிவாசக சரணாலய சுவாமிகள். இப்படி, சராசரி மனித வாழ்வில் எண்ணிப் பார்க்க முடியாத எத்தனையோ திருப்பங்களைக் கொண்ட மதுரகவி ஆண்டவர் சுவாமிகளின் வாழ்க்கை, வெறும் வரலாறு மட்டுமன்று; பெரும் காவியம்.
கல்லலில் நிமிர்ந்து நிற்கும் சோமசுந்தரேஸ்வரர் – சவுந்தரநாயகி அம்மன் கோவில் திருத்தேரும், மணிவாசக நிலையம் எனும் திருமடமும் மதுரகவி ஆண்டவர் சுவாமிகளின் தேமதுரப் புகழை என்றென்றும் பறைசாற்றி நிற்கும்.
அத்தகைய மதுரகவி ஆண்டவர் சுவாமிகள், பாரதியாரின் ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ பாடலைப் போன்றே, ‘செந்தமிழ் நாட்டுச் சிறப்பு’ எனும் சிறு கவிதை நூலை வடித்துள்ளார். ஆனால், பாரதியாரின் ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ பாடல் அளவிலும், பாடுபொருளிலும் குறுகிய பரப்பைக் கொண்டதாகவே இருக்கிறது.
1925ல் அச்சாகி வெளிவந்துள்ள மதுரகவியின் ‘செந்தமிழ்நாட்டுச் சிறப்பு’ எனும் கவிதை நூலோ, தமிழ், தமிழர்கள், தமிழ் நிலம் என அனைத்து வரலாற்றுச் செழுமைகளையும் கும்மிப் பாட்டுக்கான சந்த ஓசை சிறிதும் பிறழாமல் ஒரே மூச்சில் விவரித்துச் செல்கிறது. அகத்தியம், தொல்காப்பியம், நன்னூல், பதினென்கீழ்க் கணக்கு, பத்துப்பாட்டு ஐங்குறு நூறு, ஔவை, வள்ளுவர், கம்பர், திருவாசகம், திருப்புகழ், கம்பன், காளமேகம், சித்தர்கள் எனப் பயணித்து, விவேகானந்தரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த பாஸ்கர சேதுபதி வரை எதையும் மதுரகவி விட்டுவைக்கவில்லை. அவரது விரிந்து பறந்த வரலாற்று அறிவுக்கும், தமிழ் இலக்கியத்தில் இருந்த ஆழமான தோய்வுக்கும், ஆன்மீகத்தில் திளைத்த அவரது பெரும் ஞானத்திற்கும் இந்த ஒரு நூலே போதுமான சான்று. நூல் சிறிதுதான். ஆனால், அதனுள் அடங்கி இருக்கும் செய்திகளும், செய்நேர்த்தியும் பெரிதினும் பெரிது. தமிழ்ப் பெருமக்கள் ஒவ்வொருவரும் படித்துப் பாதுகாக்க வேண்டிய தமிழ்ச் சமூகத்திற்கான கையேடு என்றே மதுரகவி ஆண்டவர் சுவாமிகளின் ‘செந்தமிழ் நாட்டுச் சிறப்பு’ நூலைக் கூறலாம்.
இதோ உங்கள் கருத்துக்கு விருந்தாக ‘செந்தமிழ் நாட்டுச் சிறப்பு’

சுந்தரராண்ட தமிழ்நாடு
மிக்குயர் கன்னி வளநாடு – அம்மை
மீனாளாண்ட தமிழ்நாடு
முருகனாண்ட தமிழ்நாடு – கும்ப
முனிவன் வாழ்ந்த தமிழ்நாடு
பெருகு தென்றல் வளர்நாடு – அறம்
பேணிப் புரியும் தமிழ்நாடு
சங்கம் வளர்ந்த தமிழ்நாடு – சைவ
சாத்திரமோங்கும் தமிழ்நாடு
மங்களமான தமிழ்நாடு – தவம்
வாய்த்துப் பலிக்கும் தமிழ்நாடு
போற்றும் சங்கந்தனின் புல்லும் பொய்யா – மொழிப்
புலவர் நாற்பதி னென்மரொடும்
ஏற்ற முறுஞ்சோம சுந்தர – நாதனார்
இறைமை பெற்ற தமிழ்நாடு
முத்தி யளிக்கும் தமிழ்நாடு – திரி
மூர்த்தி வணங்கும் தமிழ்நாடு
பத்தி யளிக்கும் தமிழ்நாடு – மிக்க
பாவத்தைப் போக்கும் தமிழ்நாடு
வீரந் தழைக்கும் தமிழ்நாடு – கலி
வெந்நிடுங் கீர்த்தித் தமிழ்நாடு
ஆரம் தழைக்கும் கடற் – றண்டுரைகொண்
டழகாய்த் திகழும் தமிழ்நாடு
சம்பந்தர் வந்த தமிழ்நாடு – திருத்
தாண்டக வேளர் வளர்நாடு
நம்பியாரூரர் வருநாடு – எங்கள்
நல்வாதவூரர் திகழ்நாடு
மெய்கண்டார் வந்த தமிழ்நாடு – சிவ
மேவரு ணந்தி வளர்நாடு
கைகண்டதோர் மறைஞான – சம்பந்தர்
கருதும் உமாபதி வாழ்நாடு
தொண்டறுபான் மூவர் தந்நாடு – மேற்
றொகை யடியார்கள் வருநாடு
பண்டிசைப் பாவோது மொன்பதிமர் – மிகு
பத்தியாய் வாழ்ந்த தமிழ்நாடு
பாக்கியம் நான் செய்த பான்மையினால் – இந்தப்
பாரினிற் கீர்த்தி மிகுந்தோங்கும்
ஆக்கியோனாக்கிய சேக்கிழார் – பெருமான்
அன்பாய் வளர்ந்த தமிழ்நாடு
வண்சிரஞ் சோதிதமைக் காணும் – தவ
மன்னியே எங்கள் தமைப்பேணும்
தண்பரஞ்சோதி மாமுனிவர் – வந்து
தானேயுதித்த தமிழ்நாடு
பட்டினத்தார் வந்த நன்னாடு – உயர்
பத்ரகிரி வளர் பொன்னாடு
சிட்டர் குமரகுருபரரும் – நல்
சிவப்ரகாசர் வரு நன்னாடு
தாயுமானவர் வாழ்நாடு – அவர்
தந்திடும் பாடல் வளர்நாடு
தூயரான பல தொண்டர்கள் – கூட்டம்
தொகுத்து வளர்ந்த தமிழ்நாடு
நற்சிவ வாக்கியர் வாழ்நாடு – தவம்
நாடிடைக் காடர் வளர்நாடு
பொற்புறு வள்ளுவர் வாழ்நாடு – கலைப்
பூவையாம் ஔவை தமிழ்நாடு
சிற்றம்பலம் கொன்ட நன்னாடு – சிவம்
தாண்டவ மாடுந் திருநாடு
கொற்ற முடனறு பத்துநா – லாடல்
குழகம் புரிந்த தமிழ்நாடு
தேவார மோங்கும் தமிழ்நாடு – திரு
வாசகம் வீசும் தமிழ்நாடு
நாவாரருங் கலனாந் திருத் – தொண்டர்கள்
நல்ல புராணம் வளர்நாடு
பத்தித் திருவிளையாடல் – புராணம்
பரவி வளரும் தமிழ்நாடு
நித்தியங் கந்தப் புராண – படனம்
நிகழும் சைவத் தமிழ்நாடு
மன்னும் சிவஞான போதமுஞ் சித்தியும்
வழிச் சிவப்ர காசமற்றும்
பன்னும் பதினான்கு சாத்திரஞ் – சைவப்
பயிரை வளர்க்கும் தமிழ்நாடு
சீரார் கச்சியப்ப சிவாச் – சாரியார்
சீர்த்தியாய் வந்த தமிழ்நாடு
ஏராருஞ் சிவ ஞான – முனிவரர்
இன்பமாய் வாழ்ந்த தமிழ்நாடு
மன்னுந் திருமுறை பன்னிரண்டு – மோங்கி
மங்கள மேறுந் தமிழ்நாடு
பின்னும் பலநூற்றொகுதிகளும் – எழில்
பிறங்கத் திகழும் தமிழ்நாடு
வேதம் திகழும் தமிழ்நாடு – மிக்க
மேன்மை யுடைய தமிழ்நாடு
பாதங்க ணாலும் தருமுயர் – ஆகமம்
பன்புட னோங்கும் தமிழ்நாடு
மன்னரு பாய னபயகுல – சோழன்
வந்தெமைக் காத்த தமிழ்நாடு
மின்னு மனுநீதி கண்டதோர் – சோழனார்
மேவி வளரும் தமிழ்நாடு
தெய்வ முசுகுந்த மன்ன – னரசு
சிறக்கப் புரிந்த தமிழ்நாடு
சைவத் திருமுறை தந்த நம்பி – யாண்டர்
நம்பி வளர்ந்த தமிழ்நாடு
பகரும் வைதிக சைவ – சித்தாந்தம்
பரவியே ஓங்கும் தமிழ்நாடு
புக ரில்லாத சிவ – னடியார்கள்
பொலிந்து வளரும் தமிழ்நாடு
சேரனுஞ் சோழனும் பாண்டியன் – மூவரும்
செங்கோல் ஓச்சும் தமிழ்நாடு
பாரறியத் தெய்வ நன் மணம் – வீசியே
பத்தி வளருந் தமிழ்நாடு
மன்னிடுஞ் சைவ சமயம் – வளாவே
பன்முனி வோர்கள் வரும்நாடு
மின்னுஞ் சிவமணம் வீசிக்கதித் – தென்றும்
மேலாய் விளங்கும் தமிழ்நாடு
இன்பம் விளையும் தமிழ்நாடு – நிக
ரின்றியே யோங்கும் தமிழ்நாடு
துன்ப மொழியும் தமிழ்நாடு – பரி
சுத்த மதாக்கும் தமிழ்நாடு
சந்தத் திருப்புகழ் சந்ததம் – ஓங்கியே
தானே தழைக்கும் தமிழ்நாடு
கந்தர லங்காரம் கந்த – ரனுபூதி
கந்தரந்தாதி வளர்நாடு
எங்கள ருணகிரிநாத – ரென்றும்
இன்பமா யோங்கும் தமிழ்நாடு
பொங்கி விளங்குறும் பூதிசா – தனத்தை
போற்றி வளரும் தமிழ்நாடு
முத்திப் பதிகள் திகழ்நாடு – சீவன்
முத்தர்கள் வாழுந் தமிழ்நாடு
சத்திய மோங்கி வளர்நாடு – சிவன்
தானே தெய்வ மெனும்நாடு
காவிரி யோங்கி வரும்நாடு – சைவம்
காட்டிய வைகை வளர்நாடு
மேலும் பொருநை வளப்ப – மிகுந்து
விளங்கித் திகழுந் தமிழ்நாடு
தென்பரங் குன்றங் கொடுங்குன்றங் – குற்றாலத்
தென் பொதிகாசலம் வாழ்நாடு
மின் பரனா ரருள் வேலனறு – படை
வீடு திகழுந் தமிழ்நாடு
குன்றை முதற்பல குன்றுகளில் – கந்தன்
கோயில் கண்ட தமிழ்நாடு
என்றைக்குமே முரு கேசன் – தமிழ்நாட்
டிறையென ஓங்கும் தமிழ்நாடு
கொல்லி மலையோடு நேரி – மலையுங்
குலவியே யோங்கும் தமிழ்நாடு
வல்லியம் பாம்பெனு மாமுனி – வோர்களு
மாநடங் கண்ட தமிழ்நாடு
சிரீ ராமானுசர் வாழ்நாடு – திரு
ஆழ்வார் பன் னிருவர்நாடு
ஏரார் நாலாயிரப் பிரபந்தம்
இலங்கித் திகழும் தமிழ்நாடு
பாரதம் பாகவதமி – ராமாயணம்
பண்புட னோங்கும் தமிழ்நாடு
பாரத மாதா தனக்கிருக்கை – எனப்
பற்றி வளரும் தமிழ்நாடு
ஆயிரத் தெட்டுச் சிவாலய – மோங்கி
அழகாய் வளரும் தமிழ்நாடு
மாயவனாருறும் நூற்றெட்டுப் – பதிகள்
மன்னி வளரும் தமிழ்நாடு
கம்பன் பிறந்த தமிழ்நாடு – வசைக்
காளமேகம் வந்த நன்னாடு
உம்பர் புகழும் புகழேந்தி – யம்பி
காபதி யோங்கித் திகழ்நாடு
கீர்த்தி யுடை ஒட்டக் கூத்தனா – ரோங்கிக்
கிளர்ந்து வளர்ந்த தமிழ்நாடு
சீர்த்திற னேறுமி ரட்டைப் – புலவர்கள்
சேர்ந்து வளர்ந்த தமிழ்நாடு
வில்லி புத்தூரர் வரும் நாடு – கலி
வெல்படிக் காசு வளர்நாடு
அல்லும் பகலுமே யாவர்களும் – சிவனடியைப்
போற்றும் தமிழ்நாடு
காட்டு மியலா மகத்தியத்தோடு – தொல்
காப்பிய மோங்கும் தமிழ்நாடு
நாட்டிய பன்னூலும் பின்னூ – லாக்கிடும்
நன்னூ லோங்கும் தமிழ்நாடு
மற்று மிலக்கணக் கொத்துடனே – பல
வாய விலக்கண நூல்களுமே
உற்றுத் திகழ்ந்து வளர்ந்தோங்கு – நல்
லுயர்வையே தந்த தமிழ்நாடு
சிலப்பதிகாரஞ் சிந்தாமணி – மேகலை
சீரிதா யோங்கும் தமிழ்நாடு
பலப்படுங் குண்டல கேசி வளையா
பதியும் வளரும் தமிழ்நாடு
சிறிய வைம்பெருங் காப்பியமும் – பின்னுஞ்
சேரும் பலவா மிலக்கியமும்
நறிய செந்தமி ழங்கங்க – ளாகவே
நாளும் வளரும் தமிழ்நாடு
எட்டுத் தொகை பத்துப் பாட்டுடனே – பதி
னெண்ணள வாயதோர் கீழ்க்கணக்கும்
மட்டிலாக் கோவையார் கல்லாட – மிவை
மன்னி யோங்கும் தமிழ்நாடு
சாற்று மகம் புறம் – நானூறும்
தக்கதோ ரைங்குறு நூறுடனே
ஏற்ற முறும் பலவான – விலக்கிய
மின்ப மளிக்கும் தமிழ்நாடு
ஐந்தமிழ் சூடிடும் செந்தமிழ்ச் – செல்விக்
கரங்க மதாகும் தமிழ்நாடு
மைந்துற லாய புலவர்பெரு – மக்கள்
மல்கியே வாழும் தமிழ்நாடு
நாலடி யீரடி யான – குறளுமே
நன்மை யளிக்கும் தமிழ்நாடு
சீவநல் லாத்திசூடி கொன்றை வேந்தன்
சிறப்பைப் பெற்றோங்குந் தமிழ்நாடு
நல்வழி நன்னெறி மூதுரையோடு – மெய்
நாட்டு நறுந்தொகை யாதியவாம்
பல்வழி காட்டிடும் நீதித் – தொகுதிகள்
பற்றி விளங்கும் தமிழ்நாடு
நச்சினார்க் கினியர் சேனா – வரையர்
நம்மிளம் பூரணர் தம்முடனே
அச்ச மகற்றும் பரிமேலழகர் – பே
ராசிரியர் வளர் நன்னாடு
மற்று மடியார்க்கு நல் – லாசிரியரும்
மன்னும் சிதம்பர மாமுனியும்
கொற்றமுறும் பல வாசிரியர் – தங்கள்
கூட்டங்க ளோங்கும் தமிழ்நாடு
மின்னு மௌலி யிளங்கோவடி – மன்னன்
மேவிப் பிறந்த தமிழ்நாடு
மன்ன னதிவீர ராமன்வர – துங்க
வள்ளலு மோங்கும் தமிழ்நாடு
விவேகா னந்த மகாமுனி – சென்றுமே
மேனாட்டிற் றன்கொடி நாட்டச்
செவே போகவிடை தந்தநம் – பாற்கர
சேதுபதி வளர் நன்னாடு
சீமான் பாண்டித் துறை பிறந்தே – யெங்கள்
செந்தமிழ் போற்றிடும் தென்னாடு
பூமான் செந்தமிழ் போற்றும் – ராசாளியார்
பூரித்து வந்த தமிழ்நாடு
அரந்தைதீரக் கரந்தைத் தமிழ்ச் – சங்க
மன்புடன் றானே நிறுவி வைத்த
கிரந்திக ழெங்கள் ராதா – கிட்டினச்
செம்மல் வளர்ந்த தமிழ்நாடு
சித்தர்கள் வாழும் தமிழ்நாடு – இட்ட
சித்திகள் காட்டும் தமிழ்நாடு
பத்தர்கள் வாழும் தமிழ்நாடு – கலைப்
பாக்கிய மோங்கும் தமிழ்நாடு
செங்கமல மங்கை வாழ்நாடு – கவிச்
சிங்கங்க ளோங்கும் தமிழ்நாடு
வெண்கமல் மங்கை தமிழ்நாடு – ஞான
வித்தக ரோங்கும் தமிழ்நாடு
சோப மில்லாத தமிழ்நாடு – மற்றைத்
துர்ப்பய மில்லாத் தமிழ்நாடு
பாப மில்லாத தமிழ்நாடு – சிவம்
பழுத்த மேன்மைத் தமிழ்நாடு
ஆகமத்தார் வுறும் நம் – பரமேசுரன்
ஐந்தெழுத் தோங்கும் தமிழ்நாடு
மாகம தோங்கிடும் தேவரும் – வந்திங்கு
வாழ விரும்புந் தமிழ்நாடு
வாழிய வாழிய தென்னாடு – தினம்
மங்கள மோங்கும் தமிழ்நாடு
வாழிய வாழிய விந்நாடு – புகழ்
மல்குந் திருத்தமிழ் நாடிதுவே.
– மனோலயன்
(27.07.2021 அன்று மதுரகவி ஆண்டவர் சுவாமிகளின் 78 ஆவது நினைவு நாள். ஆண்டுதோறும் அவர் மறைந்த ஆடித் திங்கள் சதயம் நட்சத்திர தினத்தன்று அவரால் நிறுவப்பட்ட கல்லல் மணிவாசகநிலையம் – ஞானவாணி விலாசம் எனும் குன்னங்கோட்டை நாட்டார் மடத்தில் அவருக்கு குருபூஜை நடத்தப்பட்டு வருகிறது )