இன்று நடந்த தேர்தலில் மத்தியப்பிரதேத்தில் 65.5 சதவீதமும், மிசோரமில் 73 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் சத்தீஸ்கரில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து மத்திய பிரதேசம் மற்றும் மிசோரமில் இன்று தேர்தல் நடைபெற்றது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடந்தது. இதில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள 3 தொகுதிகளுக்கு மட்டும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இங்கு மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. மற்ற 227 தொகுதிகளுக்குக் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6:00 மணிவரை நடைபெற்றது.
வாக்குப்பதிவின் போது ஏதேனும் இடையூறுகள் ஏற்படாத வகையில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெண்கள் மட்டுமே நிர்வகிக்கக் கூடிய வகையில் 500 பிங்க் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இங்கு 65.5 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் முதல்கட்டமாக அறிவித்துள்ளது.
அதேபோல 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது.
மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் மொத்தம் 209 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரஸ், பாஜக, என்என்எப் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.
மாலை நிலவரப்படி மொத்தம் 73 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக முதல்கட்டத் தகவல் தெரிவிக்கிறது.
5 மாநிலங்களிலும் தேர்தல் முடிந்து பிறகு, டிசம்பர் 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.