முக்கிய செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு லட்டு …

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனத்திற்கு வரும் அனைவருக்கும் தலா ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் தமிழகத்தில் மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வர்.

சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை

இந்த கோவில் 1,600 ஆண்டுகால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று.
பல இடங்களில் இடது கால் தூக்கி ஆடிய சிவபெருமான் மதுரையில் பாண்டிய மன்னனுக்காக வலது கால் தூக்கி ஆடினார்.
மதுரை மாநகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு மொத்தம் நான்கு நுழைவு வாயில்கள் உள்ளன.
பழங்கால தமிழ் நூல்களின் சான்றுகளின்படி  இக்கோவில் மதுரையின் மத்தியிலும் கோவிலை சுற்றி உள்ள தெருக்கள் தாமரை இதழ்கள் வடிவிலும் அமைக்கப்பட்டது.
இந்த கோவிலில் மொத்தம் 12 கோபுரங்கள் உள்ளன. அதில் நான்கு கோபுரங்கள் 4 திசைகளை நோக்கி உள்ள நுழைவுவாயில்கள்.
இந்த 12 கோபுரங்களுள் தெற்கு கோபுரம் மிக உயரமானது. 9 அடுக்குகளை உடைய தெற்கு கோபுரத்தின் உயரம் 52 மீட்டர்.
இங்குள்ள கோபுரங்கள் பல்வேறு மன்னர்களால் பல்வேறு காலங்களில் கட்டப்பட்டவை. கடைசியில் தேவக்கோட்டை நகரத்தாரால் பழுது பார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.
மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியார் என்பவரால் கி.பி.1570-ல் கட்டப்பட்டு 1963-ம் ஆண்டு சிவகங்கை அரசர் சண்முகத்தால் புதுப்பிக்கப்பட்டது.
சுவாமி கோபுரம் கி.பி.1570-ம் ஆண்டு கட்டப்பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் பழுதுபார்க்கப்பட்டது.
மேலும் மூவருக்காக இரண்டு கோபுரங்கள் உள்ளன. அவை இரண்டும் தங்கத்தால் வேயப்பட்டது.
இங்கு பொற்றாமரை குளமும் உள்ளது. இந்த குளத்தில் தங்க தாமரை உள்ளது.
முன்னர் சிவபெருமான் ஒரு நாரைக்கு இங்கு கடல்வாழ் உயிரினங்கள் வாழாது என்று வாக்கு அளித்ததால் இந்த குளத்தில் மீன்கள் கூட வாழ்வது இல்லை.
மேலும் இந்த குளம் நல்ல நூல்களை தேர்ந்தெடுக்கும் சக்தி படைத்தது என்றும் நம்புகிறார்கள். நூல்கள், ஓலைச்சுவடிகளை இந்த குளத்தில் போட வேண்டும்.
அவை நல்ல நூல்கள் என்றால் மிதக்கும். இல்லையென்றால் மூழ்கிவிடும்.  இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் 985 தூண்களும் நடுவில் நடராஜர் சிலையும் உள்ளது.
இதை மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் அமைச்சர் அரியநாத முதலியார் கட்டினார்.
ஆயிரங்கால் மண்டபத்தில் பல ஒலிகளை தரும் சிலைகள் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. வடக்கு கோபுரத்திற்கு அருகில் 5 இசைத்தூண்கள் உள்ளன.
அஷ்ட சக்தி மண்டபத்தில் கலைநயமிக்க எட்டு அம்மன் சிலைகள் உள்ளன. இதுமட்டுமல்லாமல் கோவில் கோபுரங்கள், தூண்கள் பலவற்றிலும் பாண்டிய சிற்பிகளின் சிற்பக்கலையை காணமுடியும்.
கிழக்கு கோபுரத்திற்கு அருகில் உள்ள புதுமண்டபத்தில் தலவரலாற்றை விளக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
சுவாமி சன்னதியை சுற்றியுள்ள பிரகாரத்தில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் சிற்பங்களாக காட்சியளிக்கின்றன.
இந்தியாவில் உள்ள பத்து சிறந்த தலங்களில் இரண்டாவது சிறந்த தலமாக மீனாட்சி அம்மன் கோவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள்.
வடமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருவதால் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி கும்பிட கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனத்திற்கு வரும் அனைவருக்கும், தலா ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நடைமுறை வரும் தீபாவளி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக கோவில்  தக்கார் கருமுத்து கண்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பசும்பால், சுடுதண்ணீர் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.