மலேசிய பிரதமர் மகாதீர் முகமது ராஜினாமா..

மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தன்து பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடித்த்தை மன்னருக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2018 -ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இரண்டாவது முறையாக மகாதீர் முகமது பதவியேற்றார்.

மலேசிய அரசியல் களத்தில் திடீர் திருப்பமாக எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து புதிய ஆட்சியை அமைக்க பிரதமர் மகாதீர் மொஹம்மத் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நேற்று காலை தகவல் வெளியானது. இதையடுத்து நிகழ்ந்த சம்பவங்களால் அரசியல் களத்தில் பரபரப்பு நிலவுகிறது.

நாட்டின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்கும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த அன்வார் தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமது சொந்தக் கட்சியை சேர்ந்த சிலரும், பிரதமர் மகாதீர் சார்ந்துள்ள பெர்சாத்து கட்சியும் தமக்கு துரோகம் இழைத்துள்ளதாக அவர் சாடியுள்ளார்.

“புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவது தெரியும். திங்கட்கிழமைக்குள் புதிய அமைச்சரவை அமையக்கூடும்.

“இது நிச்சயமாக அதிர்ச்சி அளிக்கிறது. ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதாக அளிக்ககப்பட்ட வாக்குறுதி உள்ளது. அதையும் மீறி துரோகம் இழைக்கப்பட்டுள்ளது,” என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சிதைய யார் காரணம்?
அன்வாரின் பிகேஆர் கட்சியில் துணைத் தலைவராக இருந்த அஸ்மின் அலிதான் இந்த ஆட்சி மாற்றத்துக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்ததாக அன்வார் ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறி வந்தனர்.

ஆட்சிக்காலம் முடியும் வரை மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் என்றும், அதுவே நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் என்றும் பல மாதங்களுக்கு முன்பே வெளிப்படையாகக் கருத்துரைத்தார் மலேசியாவின் நடப்பு பொருளாதார விவகார அமைச்சருமான அஸ்மின் அலி.

ஆளும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி அமைந்தது முதல் பிகேஆர் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அன்வாரை விட்டு விலகியே இருந்த அஸ்மின் அலி, சில மாதங்களுக்கு முன்பு எதிர்க்கட்சியான அம்னோவைச் சேர்ந்த எம்பிக்கள் சிலரை ரகசியமாக சந்தித்ததாக ஒரு தகவல் வெளியானது.

அப்போதே பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை உடைப்பதற்கான ஏற்பாடுகளை அவர் துவங்கிவிட்டதாக அன்வார் ஆதரவாளர்கள் குரல் எழுப்பினர். அப்படியொரு எண்ணம் தமக்கு இல்லை என அவர் மறுத்தார்.

எனினும் அன்வார் ஆதரவாளர்கள் சொன்னபடியும் பயந்தபடியும் தான் அனைத்தும் நடந்தேறியுள்ளன என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

பிகேஆர் கட்சியிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான எம்பிக்களுடன் அஸ்மின் அலி கட்சி தாவி, பிரதமர் மகாதீருக்கு ஆதரவளித்திருப்பதாகத் தெரிகிறது.

இதேபோல் எதிர்க்கட்சியான அம்னோவின் முக்கிய தலைவர்களையும் அவ்வப்போது தொடர்புகொண்டு பேசி, புதிய ஆட்சி அமைய அவர் தன் பங்கை ஆற்றியிருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.