முக்கிய செய்திகள்

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்., துணை முதல்வர் பதவி, காங்., சபாநாயகர் பதவி?..

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவியும், காங்கிரஸுக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனை – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கவுள்ளன.

இந்தக் கூட்டணியின் தலைவராகவும், மகாராஷ்டிர முதல்வராகவும் சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான இந்த அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கலாம் என பேசப்பட்டு வந்தது.

அதேபோல் தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி மற்றும் 13 அமைச்சர்கள் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிவசேனைக்கு முதல்வர் பதவி தவிர 15 அமைச்சர்கள் பதவி ஒதுக்கப்படவுள்ளது. இதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவியும் 13 அமைச்சர்கள் பதவியும் வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, உத்தவ் தாக்கரே நாளை முதல்வராகப் பதவியேற்கும்போது அவருடன் இணைந்து 40 அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.