திரையுலகில் இமயத்திற்கு நிகரான பெயரைப் பெற்றவர்: இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்..

தமிழ் திரைப்படத்துறைக்கு பெருமை சேர்த்த இயக்குநர் என, இயக்குநர் மகேந்திரனின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’ உள்ளிட்ட தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ் திரையுலக இயக்குநர்களில் ‘கதாநாயகராக’ விளங்கிய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல இயக்குநர் மகேந்திரன்

தனது 79 ஆவது வயதில் சென்னையில் மறைந்து விட்டார் என்று சோகச்செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்குள்ளானேன். அவரது மறைவுக்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்நாள் முழுவதும் எளிமைக்கு ‘இலக்கணமாக’ விளங்கிய அவர் ஒரு ‘யாதார்த்த சினிமா இயக்குநர்’ என்று திரையுலகில் இமயத்திற்கு நிகரான பெயரைப் பெற்றவர்.

தமிழ் உலகின் தலைசிறந்த கதாநாயகர்களுக்கு எல்லாம் திரைக்கதை, வசனம் எழுதி தனி முத்திரை பதித்தவர்!

மகேந்திரன் கதை, வசனம் எழுதி, இயக்கிய ரஜினி நடித்த ‘முள்ளும் மலரும்’ திரைப்படம் இன்றைக்கும் ‘அண்ணன் – தங்கை பாசத்திற்கு’ அடையாளமாகவும், அத்தாட்சியாகவும் திகழ்வதை நாம் காண்கிறோம்.

அழகப்பா கல்லூரியில் படித்த காலத்திலேயே கையெழுத்துப் பத்திரிகை நடத்தி மாணவர்கள் மத்தியில் பிரபலமானவர் மட்டுமல்ல ‘துக்ளக்’ போன்ற பத்திரிகையில் சினிமா விமர்சனமும் எழுதியவர்.

இளம் இயக்குநர்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த உதாரணமாகவும் – எதிர்காலத் தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்த அவர் உதிரிப்பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை, மட்டுமின்றி லேட்டஸ்டாக வெளிவந்த தெறி,

பேட்ட படங்களிலும் தனி முத்திரை பதித்து தமிழ் திரைப்படத்துறைக்கு பெருமை சேர்த்த இயக்குநர்களில் மிக முக்கியமானவர்.

பத்திரிகையாசிரியர், திரைப்பட வசனகர்த்தா, இயக்குநர், நடிகர் என்று பன்முகத்திறமை கொண்ட அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், தமிழ் திரையுலகிற்கும் எனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என, மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.