‛மையம் விசில்’ ஆப் அறிமுகம் செய்தார் கமல்…


நடிகர் கமல்ஹாசனின் 63-வது பிறந்தநாளான இன்று, புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய செயலி பற்றி விவரித்துப் பேசிய கமல், ’இது வெறும் ஆப் மட்டும் அல்ல; இது, பொது அரங்கம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
விழாவுக்குத் தாமதமாக வந்ததற்கு செய்தியாளர்களிடம் மன்னிப்புக் கோரி பேசத் தொடங்கிய கமல், அரசியல் கட்சி தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள்குறித்துப் பேசினார்.
’காலம் வந்துவிட்டது…!’
‘அரசியலில் ஈடுபடுவதற்காக முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்துகொண்டிருக்கிறேன். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அனைத்துத் தரப்பு மக்களைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிவுசெய்திருக்கிறேன். சில ஆரம்பகட்ட பணிகளை மேற்கொண்டு வருவதால் அரசியல் கட்சி அறிவிப்பு தாமதமாகிறது. ஜனவரி மாதத்துக்கு பின் அனைத்து அறிவிப்புகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரும். எனது அரசியல் அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும். எனவே, அறிஞர்களுடன் கலந்து பேசிக்கொண்டிருக்கிறேன். ஒரு சினிமா எடுக்கவே ஆறு மாதம் தேவைப்படுகிறது. அரசியல் என்பது பெரிய பணி. எனவே அரசியலில் கால் பதிக்க முதலில் என்னை தயார் செய்துகொண்டு பின்னர் தேர்தலில் நிற்பேன். தமிழகத்தை இயக்கவேண்டிய சக்கரங்கள் பழுந்தடைந்துள்ளன. நான் பிறந்ததற்கான காரணத்தை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது’ என்றார்.
’மக்களுக்கான டிஜிட்டல் அரங்கம்…!
மக்கள் பிரச்னைகளைப் பேச ’MAIAMWHISTLE’ என்ற பெயரில் புதிய ஆப் குறித்து அறிவித்த கமல், #theditheerpomvaa, #virtuouscycles, #maiamwhistle என்ற பெயரில் ஹேஷ்டேக்குகளையும் அறிமுகம்செய்தார். ’மக்கள் தங்கள் பிரச்னைகளை பற்றி இந்த ஹேஷ்டேக்கின் கீழ் பேசலாம்’ என்று தெரிவித்துள்ளார். புதிய செயலி பற்றி பேசிய அவர், ’தீயவை நடக்கும்போது பயன்படும் ஒரு கருவியாக நான் உருவாக்கியுள்ள ஆப் இருக்கும். நான் வெளியிட இருப்பது வெறும் செயலி மட்டும் அல்ல, அது ஒரு பொது அரங்கம்’ என்றார்.