மேற்கு வங்கத்தில் பழமையான மேம்பாலம் இடிந்து விழுந்தது: மீட்புப் பணிகள் தீவிரம்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மாஜேர்ஹட் பகுதியில் உள்ள மேம்பாலம் இடிந்து விழுந்ததது. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருப்பதால் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

மேம்பாலத்தின் ஒரு பகுதி பிற்பகலில் திடீரென இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் பாலத்தில் சென்ற கார்கள், இருசக்கர வாகனங்களும் விபத்தில் சிக்கி நசுங்கின. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பழமையான அந்த பாலத்தின் அருகில் புதிய பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ராணுவம், காவல்துறை, தீயணைப்புதுறை, தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் உள்ளூர் மக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அந்த பாலத்தை நோக்கி செல்லும் சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. பாலத்திற்கு அடியில் ரயில் பாதை செல்வதால் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஃபிரிஹத் ஹக்கிம் விபத்து நடத் இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாலை நேரத்தில் வழக்கமாக போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் அந்த பாலம், அலுவலக நேரம் முடிவதற்கு சற்று முன்னதாகவே இடிந்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டிருப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

பழமையான அந்த பாலம் கனமழை காரணமாக வலுவிழந்து விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். முதலில் மீட்புப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை முடுக்கி விட்டிருப்பதாகவும் மம்தா கூறியுள்ளார். மேம்பால விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

 ​

Majerhat bridge in South Kolkata has collapsed