முக்கிய செய்திகள்

மலேசிய அரசு பொதுமன்னிப்பு: சட்டவிரோதமாக தங்கியுள்ள தமிழர்கள் வெளியேறுவார்களா?

மலேசியாவில் சட்ட விரோதமாகத் தங்கியுள்ள தமிழர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் தண்டனை ஏதும் இன்றி வெளியேற ஏதுவாக மீண்டும் ஒருமுறை பொது மன்னிப்பு என்ற சலுகையை அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு.

எதிர்வரும் ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்து டிசம்பர் 31ஆம் தேதி வரை இந்தப் பொதுமன்னிப்புத் திட்டம் அமலில் இருக்கும் என மலேசிய உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அறிவித்துள்ளார்.

இந்தப் புதிய திட்டத்தின் கீழ், முறையான ஆவணங்கள் வைத்திராத சட்டவிரோதக் குடியேறிகள் 700 மலேசிய ரிங்கிட் (இந்திய ரூபாயில் சுமார் ரூ.12 ஆயிரம்) அபராதம் செலுத்தினால் தண்டனை ஏதுமின்றி தாய் நாடு திரும்பலாம்.

இவர்களுடைய பயணச் செலவை சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்கள் ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்கள்,

குறிப்பாக தமிழர்கள் தண்டனையின்றி தமிழகம் திரும்புவார்களா அல்லது கிடைப்பது அரை ஊதியம் தான் என்றாலும்,

குடும்பச் சூழ்நிலை காரணமாக தொடர்ந்து சட்ட விரோதமாக மலேசியாவிலேயே தங்குவது என முடிவெடுப்பார்களா எனும் கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன.

லட்சக்கணக்கான சட்டவிரோத குடியேறிகள்

மலைநாடு எனப்படும் மலேசியாவில் சுமார் ஒன்றரை மில்லியனுக்கும் மேலான வெளிநாட்டு தொழிலாளர்கள் இருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு இணையாக சட்டவிரோத குடியேறிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தோனீசியா, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 15 நாடுகளில் இருந்துதான் அதிகளவிலான தொழிலாளர்கள் மலேசியா வருகின்றனர்.

இவர்களில் பெரும்பான்மையானோர் இந்தோனீசியர்கள். இந்தியர்களின் எண்ணிக்கை 1.2 லட்சம் எனப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

அரசாங்கம், பொது அமைப்புகள் அவ்வப்போது வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் உரிய ஆவணங்கள் இன்றி மலேசியாவில் தங்கியிருப்பதாகக் கருதப்படுகிறது.

இது தொடர்பாக அரசாங்கத்திடமே துல்லியமான கணக்கு இல்லை என்கிறார் உள்துறை அமைச்சர் மொகிதீன் யாசின்.
“சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை எனக்கும் தெரியாது.

எனினும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தாய்நாடு திரும்புவது நல்லது. அவர்கள் மீண்டும் மலேசியா வரக் கூடாது,” என்று கூறியுள்ளார் மொகிதீன் யாசின்.

இதன் மூலம் பொது மன்னிப்பின் கீழ் நாடு திரும்புகிறவர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு பொது மன்னிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டபோது சுமார் 8 லட்சத்து 40 ஆயிரம் சட்டவிரோத குடியேறிகள் தாய்நாடு திரும்பினர். அவர்களிடம் இருந்து அபராதத் தொகையாக மட்டும் 400 மில்லியன் மலேசிய ரிங்கிட் திரண்டது

இம்முறை குறைந்தபட்சம் 2 லட்சம் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்ற முடியும் என நம்புவதாக மலேசிய குடிநுழைவுத் துறையின் இயக்குநர் ஜெனரல் டத்தோ கைருல் டாட் தெரிவித்துள்ளார்.

இந்தப் பொதுமன்னிப்பு திட்டத்துக்கு (B4G – Back 4 Good) ‘திரும்புவது நல்லதற்கே’ என்று பெயரிட்டுள்ளனர்.
இதற்கிடையே பொது மன்னிப்பு வழங்குவது தவறான நடவடிக்கை எனும் எதிர்ப்புக் குரல்களும் எழுந்துள்ளன.

பொது மன்னிப்பு என்பது சட்டவிரோத குடியேறிகளுக்கு ஊக்கம் அளிக்கும் அறிவிப்பாகவே அமையும் என்று ‘சென்பெட்’ (Cenbet-Centre for a Better Tomorrow)எனப்படும் நலமான நாளைய தினத்துக்கான மையம் தெரிவித்துள்ளது.

“உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எனப் பொது மன்னிப்பு திட்டம் அறிவிப்பது பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது.

எப்படியும் நமக்கேற்ற தீர்வு கிடைக்கும் எனும் எதிர்பார்ப்புதான் அத்தகையவர்களுக்கு அதிகரிக்குமே தவிர சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை குறையாது,” என்று சென்பெட் கூறியுள்ளது.

“ஒவ்வொரு முறையும் பொதுமன்னிப்புத் திட்டம் அறிவிக்கப்படும் போதும், “இதுவே கடைசி வாய்ப்பு,” என்று அரசுத் தரப்பில் கூறப்படுவதை இம்மையத்தின் கூட்டுத் தலைவர் கான் பிங் சியு (PIC-GAN.JPG) அதிருப்தியுடன் சுட்டிக்காட்டி உள்ளார்.

இதற்கிடையே மலேசிய பிரதமர் துறை முன்னாள் துணையமைச்சர் டத்தோ முருகையா அரசாங்கத்தின் இந்நடவடிக்கையை வரவேற்பதாகக் கூறியுள்ளார்.

அதேசமயம், சட்டவிரோத குடியேறிகளை நாட்டை விட்டு வெளியேற்றினால், பல்வேறு துறைகளில் பணிகளைக் கவனிக்க ஆள் பற்றாக்குறை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

700 ரிங்கிட் அபராதம் விதிப்பதற்குப் பதிலாக, அத்தொகையைப் பெற்று சட்டவிரோத குடியேறிகளுக்கு முறையான விசா அளிக்கலாம்.

அதன் மூலம் அவர்கள் மலேசியாவிலேயே தொடர்ந்து தங்கியிருந்து சட்டப்பூர்வமாகப் பணியாற்ற வழிவகுக்கலாம் என்பது டத்தோ முருகையாக முன்வைக்கும் கருத்தாக உள்ளது.

இவர் எதிர்க்கட்சிக் கூட்டணியில் இந்தியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் லகையில் இடம்பெற்றுள்ள மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் ஆவார்.

“கட்டுமானம், தோட்டப்புறங்கள், உணவகங்கள், பாதுகாவலர் பணி எனப் பல்வேறு துறைகள் சார்ந்த பணிகளைச் செய்ய உள்நாட்டில் போதுமான ஊழியர்கள் கிடைப்பதில்லை.

ஆள் பற்றாக்குறையைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், பலரை வெளியேற்றினால் நிலைமை மேலும் சிக்கலாகும்,” என்கிறார் டத்தோ முருகையா.

மலேசியாவில் ஆயிரக்கணக்கான சட்டவிரோத இந்திய தொழிலாளர்களில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளதாக நம்பப்படுகிறது. காரணம், இங்குள்ள 1.2 லட்சம் இந்தியர்களில், பெரும்பாலானவர்கள் தமிழர்களாக உள்ளனர். குறிப்பாக,

சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருவதாகக் கூறப்படுகிறது

இதேபோல் வங்க தேசம், மியான்மர், இந்தோனீசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்புக்காக மலேசியா வருகின்றனர்.

நிறைய சம்பாதிக்கலாம் என்ற கனவில் விவசாய நிலங்களையும், மனைவி குழந்தைகளின் நகைகளையும் விற்று, கடனும் பெற்று,

போலி முகவர்களிடம் (ஏஜென்ட்) குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி மலேசியாவுக்கு வரும் எண்ணற்ற தமிழக இளைஞர்களுக்கு, மிகத் தாமதமாகவே அது தவறான முடிவு எனப் புரிகிறது.

அந்த இளைஞர்களைக் கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன. சுற்றுலா விசாவில் மலேசியா சென்றுவிட்டால்,

பிறகு அங்கு வேலை செய்வதற்கான விசா பெற்றுத் தரப்படும் என்பதும் அத்தகைய வாக்குறுதிகளில் ஒன்று.

அது சாத்தியமில்லை என்று தெரிய வருவதற்குள்ளாகவே சம்பந்தப்பட்ட நபர் உரிய விசா இன்றி மலேசியாவில் அதிக காலம் தங்கிய குற்றச்சாட்டுக்கு ஆளாகும் சட்டவிரோத குடியேறி ஆகிவிடுகிறார்.

“அதன் பிறகு பயந்து பயந்து வாழ வேண்டிய நிலைக்கு ஆட்படுகிறார்கள். குடும்பத்தைப் பிரிந்த சோகம், எதிர்பார்த்த சம்பாத்தியம் இல்லாததால் விரக்தி,

எப்போது அதிகாரிகளிடம் பிடிபடுவோமோ? என்ற அச்சம் என எல்லாம் சேர்ந்து அவர்களை நிலைகுலையச் செய்துவிடும்.

“அப்படிப்பட்ட சிலர் பொது மன்னிப்பு பெற்று நாடு திரும்பியதை நான் அறிவேன். முறையாக விசா பெற்று வந்தால் இவ்வாறு வேதனை அனுபவிக்கத் தேவை இல்லை,” என்கிறார் உரிய விசாவுடன் கோலாலம்பூரில் பணியாற்றும் அறந்தாங்கியைச் சேர்ந்த ஆனந்தன்.

எங்களுக்கும் எண்ணிக்கை தெரியாது: இந்திய ஹைகமிஷன்

மலேசிய அரசைப் போலவே இந்தியாவைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை குறித்து தங்களுக்கும் துல்லியமாகத் தெரியாது என்கிறது கோலாலம்பூரில் உள்ள இந்திய ஹைகமிஷன் அலுவலகம்.

இது தொடர்பாக தூதரக அதிகாரி நிஷித் குமார் உஜ்வலை தொடர்பு கொண்டு பேசிய போது, தங்களை அணுகும் ஒவ்வொரு இந்தியருக்கும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு ஏற்ப உதவி அளிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

“மலேசிய அரசின் பொது மன்னிப்பை ஏற்று எத்தனை இந்தியர்கள் நாடு திரும்புவார்கள் என்பது குறித்து துல்லியமாகத் தெரியவில்லை. எனினும் அவ்வாறு அணுகுபவர்களுக்கு தக்க உதவிகள் வழங்கப்படும்” என்றார் நிஷித் குமார் உஜ்வல்.

இந்தப் பொது மன்னிப்பு திட்டத்துக்கு மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள தமிழக, இந்தியத் தொழிலாளர்கள் மத்தியில் எந்தளவு வரவேற்பு இருக்கும் என்பது அடுத்து வரும் நாட்களில் தெரிய வரும்.

முகாம்களில் தடுத்து வைப்பது, சிறைத்தண்டனை, பெரும் அபராதத் தொகை என ஏதுமின்றி 700 மலேசிய ரிங்கிட்டை அபராதமாகச் செலுத்திவிட்டு நாடு திரும்புவதுதான் நல்லது என ஒரு தரப்பில் அறிவுறுத்தப்படும் நிலையில்,

அபராதம் எனும் சுமையை சட்டவிரோத குடியேறிகளால் தாங்க இயலாது என்றும் மற்றொரு தரப்பு சுட்டிக்காட்டுகிறது.

இது தொடர்பாக நீண்ட காலமாக பயண நிறுவனம் நடத்தி வருபவரும், மலேசிய இந்தியர் ஒற்றுமை அமைப்பின் ஆலோசகருமான கே.பி. சாமியுடன் பேசினோம்.

அரசாங்கம் அறிவித்துள்ள இந்தப் பொது மன்னிப்பு திட்டம் சட்டவிரோத குடியேறிகள் நாட்டை விட்டு வெளியேற மிக நல்ல வாய்ப்பு என்றார் கே.பி. சாமி.

“கடந்த காலங்களில் நாடு திரும்ப விரும்பிய சட்டவிரோத குடியேறிகளுக்கு 2 அல்லது 3 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், 2 ஆண்டுகளுக்கும் மேலாக விசா, ஆவணங்கள் இன்றி தங்கியவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். இதனால் நாடு திரும்ப வேண்டும் எனும் ஆசை இருந்தாலும், சிறைத்தண்டனையை நினைத்து பலர் அஞ்சினர்.

“இப்போது புதிய அரசாங்கம் புது பொது மன்னிப்பு திட்டத்தை, மிகக் குறைந்த அபராதத் தொகையுடன் கொண்டு வந்துள்ளது. எனவே இது ஒரு சிறந்த வாய்ப்பு.

“அதேசமயம் கடந்த முறை அபராதம் செலுத்திய பிறகோ அல்லது தாமாக முன்வந்து நாடு திரும்ப விரும்புவதாக கூறிய பிறகோ, சிறையில் அடைக்கப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்,” என்கிறார் கே.பி. சாமி.
‘முகவர்கள் அதிக தொகை கேட்கிறார்கள்’

இதற்கிடையே நேரடியாகச் சென்று பொது மன்னிப்புக்கு விண்ணப்பித்தால் ஏதேனும் பிரச்சினை ஏற்படுமோ என அஞ்சும் தொழிலாளர்கள் பலர்,

முகவர்கள் மூலம் செல்வது நல்லது எனக் கருதுகிறார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிலர் சட்டவிரோத குடியேறிகளிடம் 1800 மலேசிய ரிங்கிட் (ரூ.30 ஆயிரம்) கட்டணம் விதிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

இத்தகைய சூழலில் இந்தியாவில் இருந்து வந்து மலேசியாவில் பணியாற்றும் தமிழர்கள், மலேசிய வாழ் வெளிநாட்டு தமிழர் சங்கத்தை நிறுவியுள்ளனர்.

இதன் மூலம் தங்களை அணுகும் தமிழகத் தொழிலாளர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வதாகச் சொல்கிறார் சங்க நிர்வாகிகளில் ஒருவரான ராஜா.

அண்மையில் சென்னையை சேர்ந்த ஒருவர் அழகு நிலையத்தில் பணியாற்றுவதற்காக கோலாலம்பூர் வந்ததாகவும், அதன் பிறகே தனக்கு வேலைக்குரிய விசா, அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை எனத் தெரிய வந்ததாகவும் கூறியுள்ளார்.

“அந்தப் பெண்மணிக்கு உரிய உதவிகளைச் செய்து வருகிறோம். விரைவில் அவர் நாடு திரும்புவார்,” என்கிறார் ராஜா.
இப்படிப்பட்ட சங்கங்கள்,

அமைப்புகளின் நிர்வாகிகள், தன்னார்வலர்கள் சிலரும் தமிழகத்தில் இருந்து வந்து சிக்கலை எதிர்கொள்பவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு புதுடெல்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசினார் மலேசிய மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன்.

அப்போது மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும்படி சுஷ்மா ஸ்வராஜ் கோரியதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாகச் சொல்கிறார் மலேசிய மூத்த ஊடகவியலாளர் பி.ஆர். ராஜன். இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேம்பட இந்நடவடிக்கை உதவும் என்றார் அவர்.

“இந்திய அரசின் கோரிக்கைக்கு மதிப்பளித்தது, மலேசிய அரசு பொது மன்னிப்பு என அறிவித்துள்ளது. மாறாக, மலேசிய அரசின் கரிசனையை பலவீனமாகக் கருதிவிடக் கூடாது.

“மேலும், தமிழகத்தில் இருந்து மலேசியாவுக்கு என்ன காரணத்துக்காகப் பயணம் செய்கிறார்கள் என்பதை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதற்குரிய வழிமுறைகளை இந்திய அரசு கண்டறிய வேண்டும்,” என்றும் பி.ஆர். ராஜன் வலியுறுத்துகிறார்.

மன்னிப்பு என்பது தற்காலிக தீர்வு: அபராதம் கூடாது

மலேசியாவில் வெளியாகும் தமிழ் மலர் நாளேட்டின் தலைமை ஆசிரியர் எம். ராஜன் கூறுகையில், பொது மன்னிப்பு என்பது தமக்கு ஒரு நிரந்தரத் தீர்வாகத் தெரியவில்லை என்கிறார்.

“பொது மன்னிப்பு அளிப்பதால் அனைவரும் நாடு திரும்பப் போவதில்லை. இது நீண்ட காலமாக நிலவும் பிரச்சினை. தமிழகத்தில் இருந்து வந்து இங்கு சுரண்டப்படும், துன்பங்களுக்கு ஆளாகும், தேவையற்ற சிக்கல்களில் சிக்கி கொத்தடிமைகளாக மாறும் தமிழர்களை நினைக்கும் போது வேதனையாக உள்ளது.

“இப்பிரச்சினையைக் களைய அடிப்படை ஆவணங்கள் சரியாக இருக்க வேண்டும் என்பதை இருதரப்பு அரசுகளும் உறுதி செய்ய வேண்டும். மலேசியாவைப் பொறுத்தவரை முன்பிருந்த, தற்போதுள்ள அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மன்னிப்பு என்பது தற்காலிக தீர்வாகவே படுகிறது.

“இந்நிலையில் அவர்கள் 700 ரிங்கிட் அபராதம் பெறுவது என்பது சரியல்ல. அதை செலுத்த மிகவும் சிரமப்படுவார்கள். நாடு திரும்புவோர்க்கு அளிக்கப்படும் மிகப் பெரிய தண்டனையே அவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது நிரந்தரமாக மலேசியா வரமுடியாது என்பது தான்.

“எனவே மனிதாபிமான அடிப்படையில் அபராதத் தொகையை குறைக்க வேண்டும் அல்லது அறவே ரத்து செய்ய வேண்டும். அவர்கள் நாட்டுக்குள் வரும்போதே ஸ்கிரீனிங் (SCREENING) செய்யும் நடைமுறையை மேலும் துல்லியமாக்க வேண்டும்.

வலுவான அமலாக்க நடவடிக்கையே தேவை

அரசியல் ஆய்வாளர் முத்தரசன் கூறுகையில், பொது மன்னிப்பு என்பது ஒருபக்கம் இருந்தாலும், சட்டவிரோத குடியேறிகளை தடுப்பதற்கு வலுவான அமலாக்க நடவடிக்கையே தேவை என்கிறார்.

“பல ஆண்டுகளாக சட்டவிரோத குடியேறிகள் பிரச்சனை இருந்து வருகிறது. அவர்கள் குறிப்பிட்ட ஒரு பகுதியில் இருந்தால் நடவடிக்கை எடுப்பது சுலபம். ஆனால் நாடு முழுவதும் உள்ள சந்துபொந்துகளில் எல்லாம் அவர்கள் நிறைந்துள்ளனர்.

“எனவே மலேசிய அரசிடம் உள்ள ஆள்பலத்தைக் கொண்டு அனைவரையும் பிடிப்பது என்பது கடினமான பணி. எனவேதான் இதற்கென உள்ள , அல்லது கொண்டுவரப்படுகின்றன சட்டதிட்டங்களை வலுவாக அமலாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார் முத்தரசன்.

நன்றி

பிபிசி தமிழ் இணையதளம்