மலேசியாவில் முகக்கவசம் கட்டாயமாகலாம் : பிரதமர் முகைதீன் யாசின் …

பிரதமர் முகைதீன் யாசின் தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்

பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயப்படுத்துவது குறித்து மலேசிய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அந்நாட்டுப் பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி, சமூக ஊடகத் தளங்கள் வழியாக நாட்டு மக்களிடம் நேற்று உரையாற்றிய அவர், இது குறித்த மேல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

மலேசியாவில் இம்மாதம் 13 புதிய கிருமித்தொற்றுக் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பிரதமர் முகைதீனின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா கிருமித்தொற்று இன்னமும் ஓயவில்லை என்றபோதும், மலேசியர்கள் சிலர் பொறுப்பற்ற, அலட்சியப் போக்குடன் நடந்துகொள்வது கவலை அளிப்பதாக அவர் சொன்னார்.

“மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நடப்பில் இருக்கும் காலகட்டத்தில் ஒவ்வொரு தனிநபர், குடும்பம், சமூகம் என அனைத்து தரப்பும் முதல்நிலையில் பங்காற்றுகின்றன.

“வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பிள்ளைகளுக்குப் பெற்றோர் நினைவூட்ட வேண்டும்,” என்று பிரதமர் முகைதீன் அறிவுறுத்தினார்.

“எனக்கு என்ன கவலை தருகிறது என்றால், கடந்த சில நாட்களாக கொவிட்-19 சம்பவங்கள் மீண்டும் இரட்டை இலக்க அடிப்படையில் பதிவாகின்றன.

இந்த நிலை குறித்து நாம் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது. கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்தால் அரசாங்கம் மீண்டும் முடக்கநிலையை அறிவிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும்,” என்றார் அவர்.

கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 18ஆம் தேதி மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அன்றாடம் பதிவான புதிய சம்பவங்கள் படிப்படியாக குறைந்ததை அடுத்து, கடந்த ஜூன் 10ஆம் தேதியிலிருந்து மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையை மலேசிய அரசாங்கம் பிறப்பித்தது.

இதன் மூலம் பெரும்பாலான வர்த்தகங்கள், வழிபாட்டுத் தலங்கள், விளையாட்டுகள் மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது.

மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அண்மையில் மெல்ல அதிகரித்து வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து நாள் ஒன்றுக்கு சராசரியாக 14 புதிய சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

மலேசியாவில் நேற்று முன்தின நிலவரப்படி, கிருமித்தொற்று கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,779ஆக இருந்தது. பாதிக்கப்பட்டவர்களில் 97 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் குணம் அடைந்து வசிப்பிடம் திரும்பிவிட்டனர்.

மலேசியாவில் கிருமித்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123ஆக உள்ளது.

இந்நிலையில், இம்மாதம் கண்டுபிடிக்கப்பட்ட 13 புதிய கிருமித்தொற்றுக் குழுமங்கள் குறித்து பிரதமர் முகைதீன் விவரித்தார்.

அவற்றில் இரண்டு குழுமங்கள், தலைநகர் கோலாலம்பூரில் உள்ள உணவகம், சராவாக்கில் உள்ள ஈரச்சந்தை ஆகியவற்றுடன் தொடர்புடையவை. எஞ்சிய குழுமங்கள், வெளிநாடுகளிலிருந்து மலேசியா திரும்பியவர்களுடன் தொடர்புடையவை.

மற்ற நாடுகளுடன் ஒப்புநோக்க, மலேசியாவில் பதிவாகியுள்ள கிருமித்தொற்றுச் சம்பவங்கள் குறைவாக இருந்தபோதிலும், மலேசியர்கள் மெத்தனமாக இருந்துவிட வேண்டாம் என்று பிரதமர் முகைதீன் கேட்டுக்கொண்டார்.

“மூன்று மாதங்களாக நாடு முடக்கப்பட்டிருந்தது போதும். நாட்டின் பொருளியல் மோசமாக பாதிக்கப்பட்டது, வர்த்தகங்களுக்கு இழப்பு ஏற்பட்டது, மக்கள் வேலை இழந்தனர். கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்து, அரசாங்கம் முடக்கநிலையை மீண்டும் செயல்படுத்த நேரிட்டால், மலேசியாவுக்கு தினந்தோறும் 2 பில்லியன் ரிங்கிட் (S$650 மில்லியன்) இழப்பு ஏற்படும்.

“2.75 மில்லியன் வேலைகளைக் காப்பாற்றுவது உட்பட அரசாங்கத்தின் ஏராளமான முயற்சிகள் வீணாகிவிடும்,” என்று அவர் எச்சரித்தார்.

மலேசியாவில் தற்போது வேலையின்மை விகிதம் 5.3 விழுக்காட்டை எட்டியுள்ளது.

1980களுக்குப் பிறகு அந்நாட்டில் வேலையின்மை விகிதம் இந்த அளவை எட்டியிருப்பது இதுவே முதன்முறை.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் அமல்படுத்தப்பட்டால், வர்த்தகங்கள் மூடப்பட வேண்டியிருக்கும் என்ற பிரதமர் முகைதீன், இதனால் வேலையின்மை விகிதம் 5.3 விழுக்காட்டைத் தாண்டிவிடும் என்றும் எச்சரித்தார். இந்த நிலை ஏற்படுவதை மலேசியர்கள் தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மின்கட்டணம் எவ்வளவு வந்திருக்கிறது என்று ஒவ்வொரு குடும்பத்துக்குமே தெரியும்.: கனிமொழி எம்பி பேட்டி

நமஸ்தே ட்ரம்ப், ராஜஸ்தான் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி- கரோனா காலத்தில் மோடி அரசின் சாதனைகள்: ராகுல் கிண்டல்…

Recent Posts