மலேசியாவின் 16-வது மன்னராக சுல்தான் அப்துல்லா இப்னி சுல்தான் அஹ்மது ஷா அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், ஜனவரி 31-ம் தேதி அதிகாரபூர்வமாக சுல்தான் அப்துல்லா மன்னராக முடிசூட்டிக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய மன்னராக கடந்த 2016-ம் ஆண்டு இறுதியில் பதவியேற்ற மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மது,
தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே கடந்த ஜனவரி 6-ம் தேதி பதவி விலகினார். ரஷ்ய அழகியை அவர் திருமணம் செய்துகொண்டதால்தான் ராஜினாமா செய்ததாகத் தகவல்கள் வெளியாகின.
ஆனால் இதுகுறித்து அரண்மனை கருத்து தெரிவிக்கவில்லை.
ஆண்டாண்டு காலமாக இஸ்லாமிய மன்னர்களால் ஆளப்படும் மலேசியாவில், 9 மாநிலங்களில் அரச பரம்பரையினர் ஆட்சி செய்கின்றனர்.
இந்த மாநிலங்களில் உள்ள மன்னர் குடும்பத்தில் உள்ளவர்கள், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுவர். அவர் மன்னராக முடிசூட்டப்படுவார்.
அந்த வகையில், பஹாங் மாநிலத்தின் தலைவரான 59 வயது சுல்தான் அப்துல்லா, புதிய மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட சுல்தான் அப்துல்லா, ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளார். உலகக் கால்பந்து அமைப்பான ஃபிஃபாவிலும் சுல்தான் உறுப்பினராக உள்ளார்.
மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவராகவும் சுல்தான் பொறுப்பு வகித்துள்ளார்.