முக்கிய செய்திகள்

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 1.40 லட்சம் தொழிலாளர்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப முடிவு..


மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 1.40 லட்சம் தொழிலாளர்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட இருப்பதாக மலேசிய குடிவரவுத் துறையின் இயக்குனர் ஜெனரல் தடுக் செரி முஸ்தபர் அலி தெரிவித்துள்ளார்.

மலேசியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த அல்லது அனுமதி காலத்தை கடந்து தங்கியிருந்த ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவரவர் நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட இருப்பதாக மலேசிய குடிவரவுத் துறையின் இயக்குனர் ஜெனரல் தடுக் செரி முஸ்தபர் அலி தெரிவித்திருக்கிறார்.

இந்த நடவடிக்கையின் ஓர் அங்கமாக வரும் 30-ந்தேதி வரை இத்தொழிலாளர்கள் சரணடைவதற்கான காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

“இந்த திட்டத்தின் கீழ் திரும்புகிறவர்கள் அபராதமாக 300 மலேசிய ரிங்கட்டும் (இந்திய மதிப்பில் சுமார் 5000 ரூபாய்) அவரவர் நாட்டுக்கு திரும்புவதற்கான சிறப்பு அனுமதியை பெற 100 மலேசிய ரிங்கட்டும் (சுமார் 1600 ரூபாய்) செலுத்த வேண்டும்.

அவர்களால் அந்த தொகையை செலுத்த முடியவில்லையெனில் அவர்கள் நாட்டு தூதரகமோ அல்லது சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களோ அத்தொகையை செலுத்த வேண்டும்”.

தற்போது, இத்திட்டத்தின் கீழ் சொந்த நாடு திரும்ப விண்ணப்பித்துள்ள 57 சதவீத வெளிநாட்டினர் அனுமதி காலத்தை கடந்து தங்கியுள்ளனர். மற்ற அனைவரும் முறையான அனுமதியின்றி சட்ட விரோதமாக மலேசியாவில் வேலை செய்து வந்துள்ளனர்.

வருகிற 31-ந்தேதி முதல் பெரிய அளவிலான தேடுதல் வேட்டை நடத்தப்பட இருப்பதாக எச்சரித்துள்ள முஸ்தபர் அலி, “மலேசிய விடுதலை அடைந்த நாளான ஆகஸ்ட 31 அன்று தேடுதல் வேட்டை நடத்தப்பட இருப்பது தற்செயலாக அமைந்துள்ளது.

ஆகவே, அந்நாளை பயன் படுத்திக் கொண்டு சட்ட விரோதமாக குடியேறியவர்களிடமிருந்து இந்நாட்டை விடுதலை அடையச் செய்யும் முயற்சிகளை மேற் கொள்ள இருக்கிறோம்” என முஸ்தபர் அலி கூறியிருக்கிறார்.

அதே சமயம், இந்நடவடிக்கைகளினால் பதிவு செய்யாத தொழிலாளர்கள் மட்டுமின்றி, பதிவு செய்த தொழிலாளர்களும் அகதிகளும் கூட குற்றவாளிகள் போல் நடத்தப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதிலும் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் ஆபத்தில் உள்ளதாக மலேசிய தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஆண்டு முதல் வெளிநாட்டுத் தொழிலாளர்களை முறைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மலேசிய அரசு, முறையாக பதியாத தொழிலாளர்களை நாடுகடத்தும் அல்லது திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.