மலேசிய நாடாளுமன்ற தேர்தல் : எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி..


கோலாலம்பூர் : மலேசியாவில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டமைப்பான நம்பிக்கை கூட்டணி வெற்றிபெற்றது. கூட்டணியின் வேட்பாளரான முன்னாள் பிரதமர் மஹாதீர் முகமது (93) புதிய பிரதமராக இன்று பதவியேற்கிறார். சுதந்திரமடைந்து 61 ஆண்டுகளுக்கு பின், மலேசியாவில் முதன்முறையாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் பிரதமர் நஜீப் ரசாக் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.

இந்த நிலையில், பிரதமருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

இந்த தேர்தலில் 92 வயது நிறைந்த முன்னாள் பிரதமரான மஹாதீர் முகமது மீண்டும் போட்டியில் இறங்கினார். கடந்த 1964ம் ஆண்டு அரசியலுக்கு வந்த அவர் அதன்பின் ஆட்சியை கைப்பற்றி மலேசிய நாட்டில் 22 வருடங்கள் ஆட்சி புரிந்துள்ளார்.

இந்நிலையில், 64 வயது ரசாக்கின் மீதுள்ள நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளால் மலேசியாவின் மதிப்பு சர்வதேச அளவில் சீர்குலைந்து உள்ளது. இதனால் அவரை எதிர்த்து போட்டியிடும் முடிவில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் முகமது களமிறங்கியுள்ளார்.

தேர்தல் நடைமுறையின்படி ரசாக்கின் கூட்டணி வெற்றி பெற கூடும் என விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், ரசாக் அரசானது பொதுமக்களின் வாக்கை இழந்து தோல்வி அடையும் என அரசியல் நிபுணர்கள் கணிப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.

இதில், முகமது வெற்றி பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உலகின் மிக மூத்த பிரதமர் என்ற பெருமையை முகமது பெற்றுள்ளார். இந்த வெற்றியினால் ஒரு கட்சியின் 60 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.