இந்தியாவை முற்றிலும் கண்காணிப்புக்கு உள்ளான நாடாக பிரதமர் மோடி மாற்றி விட்டதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
1993 ஆம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்த 13 பேர் கொல்லப்பட்டதை நினைவு கூரும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆண்டுதோறும் ஜூலை 21 ஆம் நாள் தியாகிகள் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட நிலையில், இந்த ஆண்டு தியாகிகள் நாளை வெகு சிறப்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கொண்டாடியது.
இதற்காக கொல்கத்தா மட்டுமின்றி, டெல்லி, குஜராத் உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களின் தலைநகரிலும் இதற்கான பேரணி நடத்தப்பட்டது. இந்நிகழ்வின் நிறைவாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி உரையாற்றினார். அவரது டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அகன்ற திரையில் நேரலையாக ஒளிபரப்பப் பட்டது. இந்த உரையில் பிரதமர் பெகாசஸ் விவகாரத்தை மையமாக வைத்து பிரதமர் மோடியையும், அவர் தலைமையிலான அரசையும் மம்தா கடுமையாகச் சாடினார்.
“இந்திய ஜனநாயகத்தை ஊடகங்கள், நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகிய இம்மூன்று அமைப்புகளும்தான் காத்து வருகின்றன. ஆனால், இந்த மூன்று அமைப்புகளும் இப்போது பெகாசஸ் என்ற உளவு அமைப்பு கைப்பற்றி விட்டது. இஸ்ரேலிய ராணுவத்தின் தகுதியைக் கொண்ட இந்த உளவு மென்பொருள் மிக அபாயகரமானது. எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்படுகிறது. சரத்பவார், டெல்லி முதலமைச்சர், கோவா முதலமைச்சர் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கூட நான் பேச முடியாது. பிரதமர் மோடியைத் தனிப்பட்ட முறையில் நான் தாக்கிப் பேசவில்லை. ஆனால், அவரும், உள்துறை அமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவர்களை உளவு பார்க்க தனி அமைப்புகளை நிறுவியுள்ளனர். அவற்றைத் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஜனநாயகத்திற்கு வந்துள்ள இந்த ஆபத்தில் இருந்து நாட்டை நீதித்துறைதான் காப்பாற்ற வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதை, நீதித்துறை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும். அதற்கென தனியாக விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும்.
மக்கள் பல்வேறு பிரச்சினைகளில் தவித்து வரும் போது, அவற்றைத் தீர்க்காமல், உளவு பார்ப்பதற்காக ஒன்றிய அரசு பணத்தைச் செலவிட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் வரி வருவாய் மூலம் மட்டும் 3,7 லட்சம் கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்குக் கிடைக்கிறது. அந்தப் பணமெல்லாம் எங்கே போகிறது? மக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கவில்லை. ஆனால், நீதிபதிகள், அரசியல் தலைவர்கள், ஊடகத்தைச் சேர்ந்தவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க பெரும் பணத்தைச் செலவிடுகிறார்கள்.
சுதந்திரமான சுகாதாரமான வாழ்க்கை, நல்ல கல்வி, வேலைவாய்ப்பு இவைதான் மக்களுக்குத் தேவைப்படுகிறது. ஆனால், பிரித்தாளும் அரசியல், மோதல்கள், மக்கள் மத்தியில் பரஸ்பர அவநம்பிக்கையை ஏற்படுத்துவது இவற்றில்தான் மோடியின் ஒன்றிய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.
மேற்குவங்க மக்கள் வளர்ச்சியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். எனவே அவர்கள் மோடியை ஒரு போதும் ஆதரிக்க மாட்டார்கள். இந்தியா மட்டுமின்றி, உலகமே மேற்குவங்கத் தேர்தல்களை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறது.
ஜனநாயகத்துக்கு ஆபத்து வந்துள்ள நிலையில், மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும். வரும் 27, 28 தேதிகளில் டெல்லி செல்கிறேன். அங்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றால் அதில் பங்கேற்பேன்.” என்று ஆவேசமாகப் பேசிய மம்தா அதே வேகத்துடன், மோடி அரசுக்கு எதிராக அடுத்தடுத்த காய்களையும் நகர்த்தி வருகிறார்.
தியாகிகள் நாள் பேரணியை மேற்கு வங்கத்தில் மட்டுமின்றி, டெல்லி மற்றும் குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் சில மாநிலங்களிலும் அவர் பிரம்மாண்டமாக நடத்தியதற்கு பின்னணியில் வேறு ஒரு முக்கிய நோக்கம் இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மோடிக்கு எதிரான பிரதமர் வேட்பாளராக தம்மை முன்னிறுத்திக் கொள்ளவதற்கான தொடக்கமாகவே, தியாகிகள் நாளை இத்தனை விரிவாக அவர் நடத்தி இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். முக்கிய நகரங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட மம்தாவின் ஆவேசப் பேச்சை, சரத்பவார் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆர்வத்துடன் கேட்டுள்ளனர். மம்தா கூறியது போல், வரும் 27, 28 ஆம் தேதிகளில் இதன் விளைவுகள் வெளிப்படக் கூடும். பார்க்கலாம்.