எதிர்க்கட்சிகளை தேர்தல் பிரச்சாரம் செய்யவிடாமல் முடக்க மோடி அரசு சதி: மம்தா குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகளை தேர்தல் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுப்பதற்கு மோடி அரசு பல்வேறு தந்திரங்களையும் செய்து வருவதால், அனைத்து கட்சிகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.

கொல்கத்தாவில் 3 நாளாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை மம்தா பானர்ஜி முடித்துக் கொண்டார். மம்தாவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக வருகை தந்திருந்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு  முன்னிலையிலேயே போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

அப்போது, மம்தா பானர்ஜி கூறியதாவது:

அரசியல் அமைப்பைக் காப்பாற்றுவதற்கான போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. அதனால் இத்துடன் போராட்டத்தை முடித்துக் கொள்கிறோம். தேர்தல் பிரச்சாரத்திற்காக எங்களது திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு ஹெலிகாப்டர்கள் வாங்க முடிவு செய்து, ஜனவரி 15ம் தேதி அதற்காக ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தமும் கையெழுத்தானது. இதற்கான பணமும் கட்சியில் இருந்து கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால், பிப்ரவரி 1ம் தேதி தங்களால் ஹெலிகாப்டர்கள் வழங்க முடியாது என அந்நிறுவனம் கைவிரித்து விட்டது. அரசியல் அழுத்தம் காரணமாகவே ஹெலிகாப்டர்களை வழங்க முடியவில்லை எனவும் அந்நிறுவனம் கூறிவிட்டது. இதை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு நாங்கள் கொண்டு செல்வோம். இதுபோல் எப்போதும் நடந்ததில்லை. எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதைத் தடுக்க மோடி அரசு இத்தகைய சதிகளைச் செய்து வருகிறது. எனவே அனைத்து அரசியல் கட்சிகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

சாரதா சிட்பண்ட் நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்தவும், வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை பெறவும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது அவர்கள் உள்ளூர் போலீசாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டு காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதும், பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனிடையே, முதல்வர் மம்தா பானர்ஜி காவல்துறை ஆணையரின் வீட்டுக்கு நேரில் சென்றதோடு, மத்திய அரசை கண்டித்தும், அரசியல் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஞாயிறு இரவு 8 மணிக்கு கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி போராட்டத்தை தொடங்கினார். சுமார் 47 மணி நேரமாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றார். மேலும் போராட்டக் களத்திலேயே அமைச்சரவைக் கூட்டம் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.