மம்தா ஊழல் கறைபடிந்த அதிகாரியைக் காக்க முயல்கிறார் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு..

மேற்குவங்கத்தின் மம்தா பானர்ஜி அரசு வெளிநாட்டு ஊடுருவல்காரர்களை வரவேற்பதாகவும், பாஜக தலைவர்களைத் தடுப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜல்பைகுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாலகட்டா – சல்சலபாரி இடையே 42கிலோமீட்டர் தொலைவுக்கு நால்வழிச்சாலை அமைப்பதற்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் ஜல்பைகுரி கிளையையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

அதன்பின் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் ஆகியவை வடக்கு வங்க மக்களின் நலன்களைக் கண்டுகொள்வதில்லை எனத் தெரிவித்தார்.

இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், தொழில்வளர்ச்சி பின்தங்கியுள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார்.

வடக்கு வங்கம் தேயிலை, மரம், சுற்றுலா ஆகியவற்றுக்குப் பெயர்பெற்றது என்றும் இருப்பினும் இப்பகுதியில் நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்த மாநில அரசு அக்கறை காட்டவில்லை என மோடி தெரிவித்தார்.

ஊழல் கறைபடிந்த அதிகாரியைக் காக்க மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தியதாகத் தெரிவித்தார்.

மம்தா பானர்ஜி அரசு ஊடுருவல்காரர்களை வரவேற்பதாகவும், பாஜக தலைவர்களைத் தடுப்பதாகவும் மோடி குற்றஞ்சாட்டினார்.