முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறிய குற்றச்சாட்டு மோசமான முன்உதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் முதன் முறையாக ராகுல் காந்தி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் வீட்டில் நடந்த விருந்தில் பாகிஸ்தான் தூதர் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சேர்ந்து குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க தேச விரோத ஆலோசனையில் ஈடுபட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி உள்ளார். இதற்கு மன்மோகன் சிங்கும் தகுந்த விளக்கம் அளித்து உள்ளார். மன்மோகன் சிங் குறித்து மோடி கூறிய கருத்து ஏற்கத்தக்கதல்ல. மோடியின் இந்த குற்றச்சாட்டு மோசமான முன்உதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமித்ஷா மகனின் தொழில் முறைகேடு, ரபேல் போர் விமான ஊழல் போன்ற குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காமல் மோடி மவுனமாக இருக்கிறார். தன்னுடைய சொந்த மாநிலத்தில் நடைபெறும் ஊழல் குறித்தும், விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்தும் பேச மறுக்கிறார்.
குஜராத் கோவிலுக்கு நான் சென்றதை அனைவரும் ஆர்வத்துடன் பார்க்கின்றனர். கோவிலுக்கு செல்வது தவறா? இந்த மாநில மக்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்வது குற்றமா?
ஆனால் அதே சமயம் தண்ணீரில் மிதக்கும் விமானத்தில் சென்று அங்குள்ள கோவிலில் மோடி வழிபட்டது ஒன்றும் குற்றம் கிடையாது. இது மக்களின் பிரச்சினைகளை திசைதிருப்பும் செயல் ஆகும்.
கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற உடன் என்னுடைய முதல் இலக்கு கட்சியை பலப்படுத்துவது தான். அதை இந்த தேர்தலில் நீங்கள் பார்ப்பீர்கள். குஜராத் தேர்தலில் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். எங்களுக்கு அந்த நம்பிக்கை அதிகமாகவே உள்ளது.
மேலும், அரசியலில் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி வீசுவது போல கடும் சொற்களை பேசுவதையும் நான் மாற்றி காட்டி உதாரணமாக இருப்பேன். என் மீது மோடி எந்தவிதமான கடும் சொற்களை பேசினாலும் அதற்கு நான் மரியாதையாக தான் பதிலடி கொடுப்பேன். ஏனெனில் பிரதமர் பதவி என்பதற்கு ஒரு மரியாதை இருக்கிறது.
பிரதமர் குறித்து மணிசங்கர் அய்யர் கூறியது தவறான வார்த்தை. இது போன்ற வார்த்தைகளை பொறுத்துக்கொள்ள முடியாது.
தேர்தல் பிரசாரத்தின் போது குஜராத் மக்கள் அளித்த அன்பையும், ஆதரவையும் என் வாழ்நாளில் என்றும் மறக்க மாட்டேன். இந்த மாநில மக்கள் மிகவும் புத்திசாலிகள். பிரசாரத்தின் போது மாநிலத்தில் நடைபெறும் ஊழல் குறித்து மோடி பேசாததை அவர்கள் உணர்ந்து இருப்பார்கள்.
இந்த தேர்தலில் பாஜக அசுர பலத்துடன் எங்களை எதிர்த்து போட்டியிடும் என நான் நினைத்தேன். ஆனால் அவர்கள் அவ்வாறு இல்லாதது எனக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.