முக்கிய செய்திகள்

அவதூறு பிரசாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் : மன்மோகன் சிங் வலியுறுத்தல்..


குஜராத் மாநிலத்தில் இரண்டாம்கட்ட தேர்தலை சந்திக்கவுள்ள பனஸ்கந்தா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.

அகமது பட்டேலை குஜராத் முதல் மந்திரியாக்க முன்னர் பாகிஸ்தான் உளவுத்துறையில் மிக உயர்ந்த பதவிகளை வகித்தவர்கள் பரிந்துரை கடிதம் எழுதி வருவது ஏன்? என்னை இழிபிறவி என்று கூறியதன் மூலம் குஜராத் மக்களை அவமதித்த மணி சங்கர் அய்யர் பாகிஸ்தான் தூதருடன் ரகசியமாக சந்தித்தது ஏன்? என்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.

என்னை இழிபிறவி என்று கூறியதற்கு முன்நாள் மணி சங்கர் அய்யர் வீட்டில் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற ரகசிய கூட்டத்தில் பாகிஸ்தான் உயர் தூதர், பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்புக்கு பின்னர் மறுநாள் மணி சங்கர் அய்யர் என்னையும், குஜராத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, ஏழை மக்களையும் தரக்குறைவாக பேசியுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் உங்களுக்கு சந்தேகத்தை எழுப்பவில்லையா? என்று அவர் கூறினார்.

பிரதமரின் இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், குஜராத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த பாகிஸ்தான் உளவு அமைப்புடன் சதி செய்ததாக அவதூறான வகையில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று வலியுறுத்தியுள்ளார்.