நெல்லை பல்கலை முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் காலமானார்…

 

நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை முன்னாள் துணைவேந்தரும், முதுபெரும் தமிழறிஞருமான க.ப.அறவாணன் காலமானார். அவருக்கு வயது 77. சென்னை அமைந்தகரையில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 5 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது.

 

பேராசிரியர் க.ப.அறவாணன் 09.08.1941 இல் தஞ்சை மாவட்டம் கடலங்குடியில் பிறந்தவர்.  பெற்றோர் பெயர்  பழநியப்பன், தங்கப்பாப்பு அம்மையார். க.ப. அறவாணனின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி எனவும், அருணாசலம் எனவும் அமைந்திருந்தன. பின்னாளில் அறவாணன் என்று மாற்றிக்கொண்டார். பிறந்த ஊரில் ஐந்தாம் வகுப்பு வரையில் பயின்றவர். அருகில் உள்ள விஷ்ணுபுரம் என்ற ஊரில் பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் (1959) பட்டத்திற்கும், பி.ஒ.எல்(1963) பட்டத்திற்கும் பயின்றவர். முதுகலைப் பட்டத்தைக் கேரளப் பல்கலைக்கழகத்தில்(1965-1967) பயின்றவர்.

 

21.04.1969 இல் பேராசிரியர் தாயம்மாளைத் திருமணம் செய்துகொண்டு இவர்களின் இல்லறப் பயனாய் அறிவாளன், அருள்செங்கோர் என்னும் இரு மக்கட்செல்வங்களைப் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுமேற்கொண்டு, முனைவர் பட்டம் பெற்றவர். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் தம் ஆசிரியப் பணியைத் தொடங்கி, பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் முதல்வர் பணி ஏற்றவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணியாற்றியவர் (1970). தென்னாப்பிரிக்கா – செனகால் நாட்டுத் தக்கார் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் ஆய்வாளராக 1977-82 வரை பணிபுரிந்தவர். 1982 முதல் 1987 வரை சென்னை இலயோலா கல்லூரியிலும், 1987 முதல் , புதுவைப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 1998-2001 வரை துணைவேந்தராகப் பணிபுரிந்தவர். இவர்தம் பணிக்காலத்தில் சமுதாயவியல் கல்லூரி என்பதை நிறுவி, அடித்தட்டு நிலையில் உள்ள மாணவர்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றிய பெருமைக்குரியவர்.

 

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் என்ற அமைப்பு தொய்வுற்று இருந்த நிலையில் அதனை மிகப்பெரிய நிலைக்கு உயர்த்தி, தமிழாய்வுகள் சிறக்க வழிசெய்தவர். அறிவியல் தமிழியம், தேடல், முடியும், கொங்கு உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியராக இருந்து நடத்தியவர்.

 

மூத்த பேராசிரியர்கள் வ.ஐ.சுப்பிரமணியம், ச.வே.சுப்பிரமணியன் ஆகியோரின் அன்பிற்குரிய மாணவராகத் திகழ்ந்தவர். அவர்களின் வழியில் கடுமையாக உழைத்து வாழ்வின் உயர்நிலையை அடைந்தவர். அறுபதிற்கும் மேற்பட்ட அரிய ஆய்வு நூல்களை வெளியிட்டவர். சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு, படைப்பு இலக்கியம் என்பன இவர் பங்களித்துள்ள துறைகளாகும்.  தமிழர்மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள், சைனர்களின் தமிழிலக்கண நன்கொடை, தொல்காப்பியக் களஞ்சியம், கவிதை கிழக்கும் மேற்கும், அற்றைய நாள் காதலும் வீரமும், தமிழரின் தாயகம், தமிழ்ச் சமுதாய வரலாறு, தமிழ் மக்கள் வரலாறு, அற இலக்கியக் களஞ்சியம் என்பன இவரின் குறிப்பிடத்தக்க நூல்களாகும். இவரின் படைப்பு நூல்களாக “அவள் அவன் அது’, “தென்னைமரத் தீவுகளும் தீவோர மனிதர்களும்”. “செதுக்காத  சிற்பங்கள்”, “சொல்ல முடிந்த சோகங்கள்”, “நல்லவங்க இன்னும்  இருக்காங்க”, “கண்ணீரில் மிதக்கும் கதைகள்” என்பனவற்றைக் குறிப்பிடலாம்.

 

 தமிழ்நாட்டரசின் திருவள்ளுவர் விருது, தமிழர் தந்தை சி.ப. ஆதித்தனார் இலக்கியப் பரிசு உள்ளிட்ட விருதுகளையும் பரிசுகளையும் பெற்றவர். உலக நாடுகளுக்குப் பயணம் செய்து தமிழ், தமிழர் குறித்து உரையாற்றிய சிறப்பிற்குரியவர்.