சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், விடைத்தாள் மறுமதிப்பீடு மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் துணை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உட்பட 4 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட பருவத் தேர்வு மற்றும் 2018ம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதம் நடத்தப்பட்ட அரியர் தேர்வுகளில் விடைத்தாள் மதிப்பீட்டில் மோசடி நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் பேராசிரியர்கள் ஆய்வு செய்ததில், 20 அரியர்கள் வைத்திருந்த மாணவர்கள் சிலர் ஒரே முயற்சியில் அனைத்து பாடங்களிலும் சிறப்பான மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருந்ததை கண்டுபிடித்தனர்.
இதனால் விடைத்தாள் திருத்துவதில் மோசடி நடத்திருப்பதாக பேராசிரியர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட மூத்த பேராசிரியர்கள் அடங்கிய ஒரு உயர்நிலை விசாரணைக் குழு,
100க்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரு விடைத்தாளுக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தி, விடைத்தாள்களை மாற்றி, மோசடியில் ஈடுபட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
அதற்கு உடந்தையாக இருந்ததாக 37 தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட 137 மாணவர்களின் பட்டமும் ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இந்த மோசடியில் தொடர்புடையதாக முன்னாள் துணை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஸ்ரீநிவாசலு(srinivasalu), பேராசிரியர்கள் செல்வமணி, குலோத்துங்கன் மற்றும் புகழேந்தி சுகுமாறன் ஆகிய 4 பேராசிரியர்களை பல்கலைக்கழக பதிவாளர் குமார் பணிஇடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.