திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள், நிச்சயதார்த்தம், ஒன்றுகூடல்கள், சமய நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சமூக நிகழ்வுகளை ஜூலை முதல் தேதியிலிருந்து நடத்த மலேசியா அனுமதி அளித்துள்ளது.
ஆனால், அத்தகைய நிகழ்வுகளில் பங்கேற்போரின் எண்ணிக்கை 250க்கு மிகாமல் இருக்க வேண்டும். நிகழ்ச்சியில் பாதுகாப்பான இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும்;
வருகையாளர்களின் தகவல்கள் பதிவு செய்யப்படும் என்பன போன்ற விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று பாதுகாப்பு மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று (ஜூன் 24) கூறினார்.
அத்தகைய நிகழ்வுகள் 3 முதல் 5 மணி நேரத்துக்குள்ளாக முடிக்கப்பட வேண்டும்.
உணவு பரிமாற ஆட்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் வருகையாளர்கள் தாங்களாகவே உணவு எடுத்துக்கொள்ளக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிகளில் பங்கேற்போருக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்க வேண்டும்.
அதே வேளையில் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளைக் கொண்டிருப்போர் சமூக நிகழ்வுகளைத் தவிர்க்கவும் கோரப்பட்டுள்ளனர்.
விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை போலிசார் கண்காணிப்பர் என்று குறிப்பிட்ட திரு சப்ரி யாக்கோப், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் எதிர்பார்க்கப்பட்டால், அத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தாமல் இருப்பது நல்லது என்றார்.
இருப்பினும், வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியப் பணியாளர்களுக்கு மலேசியா திரும்ப இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. தக்க சமயத்தில் அவர்கள் அனுமதிக்கப்படுவர் என்றார் திரு யாக்கோப்.