முக்கிய செய்திகள்

மாற்றம் என்னிலிருந்து- சிறுகதை..( ராஜஇந்திரன் அழகப்பன் )

மாற்றம் என்னிலிருந்து- சிறுகதை..(ராஜஇந்திரன் அழகப்பன்)


அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் நீண்ட நேரம் துாங்கினான் அன்பழகன், அவனது துாக்கத்தை கலைக்கும் விதமாக

“என்னங்க. எந்திரிங்க மணி 9 ஆச்சு” “லீவுனா விடிஞ்சு இவ்வளவு நேரம் துாங்குவாங்களா” என்று சத்தமாக மனைவி கவிதா அழைத்தாள்.

புரண்டுபடுத்த அன்பழகன் “அசதியாக இருக்கு இன்னும் பத்து நிமிஷம் பிளீஸ்” என்று மனைவிடம் கொஞ்சும் குரலில் கெஞ்சினான்.

“உங்களைத் திருத்தவே முடியாது “ என்று கூறி சீக்கிரமாக எழுந்திருங்கள் என்றாள். அப்போது அன்பழகனின் செல்போன் ஒலித்தது. “என்னங்க … போனை எடுத்து பேசுங்க” என்றாள்.

“ஒரு நாள் லீவுக்கு கூட நிம்மதியா இந்த வீட்டில் துாங்க விடமாட்டாங்களே” என்று கூறியபடி செல் போனைப் பார்த்தான்.

அழைப்பவரின் பெயரைப்பார்த்தவுடன் படபடப்புடன் போனை எடுத்து “ஐயா நல்லாயிருக்கிகளா” என்றான். எதிர் முனையில் “நல்லாயிருக்கேன் , வீட்டில, எல்லாம் சவுக்கியமா” என விசாரித்தார் வயிரவன்.

“நல்லாயிருக்காங்க ஐயா“ என்றான். எதிர் முனையில் வயிரவன் “சென்னையிலதான் இருக்கேன்.. சாயங்காலமா உன்னை பார்க்க வீட்டுக்கு வரவா…. வீட்டில் இருப்பாயா” என்றார்.

உடனே அன்பழகன் “ஐயா வீட்டிலேதான் இருக்கேன்., நீங்கள் எங்கே இருக்கீங்க நான் கூப்பிட வரவா” என உரிமையோடு அழைத்தான். “பரவாயில்லை தம்பி நானே வர்ரேன்” என்றார். ஆனால் அன்பு விடாப்பிடியாக தானே வந்து அழைத்து வருவதாக சொன்னான்.

“சரி 3 மணிக்கெல்லாம் ஆழ்வார் பேட்டைக்கு வந்துருப்பா”. “ ஐயா அக்காவீட்டில் இருக்கீங்களா அக்கா, மச்சான், குழந்தைகள் நலமா” என விசாரித்தான் .“நல்லாயிருக்காங்க நீ நேரில் வந்து பார்த்துக் கொள்“ என்றார்.

“சரி ”என்று கூறி போனை அணைத்தான்.உடனே மனைவி “யாருங்க” என்றாள் .“ஊரிலிருந்து வயிரவ ஐயா வந்திருக்கிறாராம்” வீட்டுக்கு வர்ரேன்னாரு ”. “நான் 3 மணிக்கு அழைக்க வரேன்னு சொல்லியிருக்கேன்” என்றான்.

வயிரவன் எப்போது வீட்டுக்கு வந்தாலும் ஒரு காபியோடு போவது போல்தான் வருவார் உணவருந்த வரமாட்டார். கேட்டால் “நீங்க ரெண்டு பேரும் வேலைக்கு போறீங்க உங்களைத் தொந்தரவு பண்ண விரும்பவில்லை” என்பார்.

வயிரவன் சுத்த சைவம் என்பதால் இன்று அசைவத்திற்கு லீவு விட முடிவு செய்தான் அன்பழகன். மனைவி கவிதா சைவம் ஆனால் கணவருக்கு பிடிக்கும் என்பதால் அசைவம் சமைத்து கொடுப்பாள்.. அசைவம் சமைக்க தனி பாத்திரம் வைத்திருப்பாள் கவிதா.

வயிரவன் வருவதால் வீட்டை ஒழுங்குபடுத்தினாள் கவிதா. அவர்தான் எம்பிஏ முடித்த கவிதாவை அன்புக்கு திருமணம் செய்து வைத்தார். அதனால் அவரை கவிதாவுக்கு நன்கு தெரியும்.

அவரின் கடைசி மகனுக்கு கல்யாணம் வைத்திருப்பதாக அன்புவின் அப்பா போனில் கூறியது ஞாபகத்திற்கு வந்தது.

அன்பு, “கல்யாணப் பத்திரிக்கை கொடுக்கத்தான் வயிரவ ஐயா வர்றாருனு நினைக்கிறேன்” என்று கவிதாவிடம் கூறினான்.

வயிரவன் ஊராட்சி மன்றத் தலைவராக இரு முறை பதவி வகித்தவர். சிறு பிள்ளைகளைக் கூட மரியாதையாக அழைக்கும் வழக்கம் உள்ளவர். சாதி பேதம் பார்க்காதவர்.

அன்பு படிக்கும் காலத்தில் பகுத்தறிவுபற்றி நண்பர்களிடம் விவாதிப்பவன், தன் கிராமத்தில் சாதி பாகுபாடு இருப்பதைப் பார்த்து பொங்கியெழுவான்.

ஆனால் வயிரவன் ஐயா போன்றவர்கள் சாதி பாகுபாடு இல்லாமல் மரியாதை தருவதால் இவர்கள் ஊரில் புரட்சி பற்றி பேசினால் அவன் சாதிக்காரர்களே கிண்டல் செய்வார்கள், இதனால் அன்பு எப்போதும் தன் புரட்சி,பகுத்தறிவுக் கொள்கைகளைக் கல்லுாரியோடு நிறுத்தி விடுவான்.

பள்ளி இறுதியாண்டுத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்ததால் மேலே படிக்க அன்பு ஆசைப்பட்டான்,ஆனால் அவனுடைய அப்பா வசதிக்குறைவு காரணமாக மேலே படிக்க வைக்க யோசித்தார்.

இந்நிலையில் தான் வயிரவன் தலையிட்டு அன்பு மேல் படிப்பு படிக்க உதவினார். பின்னாளில் யாருடைய தயவும் இல்லாமல் ஸ்காலர்ஷிப் மூலம் படித்தான்.

கல்லுாரியில் சேரும் முன் சாதி பற்றி பெயரளவில் தான் அன்புக்குத் தெரியும். இவர்கள் ஊரில் சாதிப்பாகுபாடு இருந்தது, ஆனால் பெரிய அளவில் இல்லாததால் அதைப்பற்றி அவன் அறிந்திருக்கவில்லை.

கல்லுாரிக்குள் நுழைந்த பின்பு அன்பை சிலர் அணுகினர். உன் அப்ளிகேஷனில் சாதி பற்றி அறிந்தோம்.நாம் எல்லாம் ஒன்று சேர்ந்து போராடவேண்டும் என்று எழுச்சி மிக்க வசனங்கள் பேசி அன்பை மெதுவாக தன்வசப்படுத்தினர்.

அன்புவும் சாதியை எதிர்த்துப் போராடத் துணிந்தான். சில கூட்டங்களுக்குப் பிறகு அவர்கள் அன்புவிற்கு அசைன்மென்ட் கொடுத்தார்கள். அது என்னவென்றால் பிற சாதிப்பெண்ணை காதலித்துத் திருமணம் செய்ய வேண்டும் என்றார்கள்.

அப்போது தான் சாதி ஒழியும் என்றார்கள். குடும்ப சூழ்நிலை, தாம் பயின்று நல்ல வேலை கிடைத்து சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றினாலும், அவர்கள் கூறிய அசைன்மென்டே சிறந்தது எனத் தோன்றியது.

இந்நிலையில் பள்ளியில் படிக்கும் போதே அன்புவின் கிராமத்தில் உள்ள மாற்று சாதிப் பெண் மிகவும் நெருங்கி நல்ல நட்புடன் பழகியதால் அவளைக் காதலித்துத் திருமணம் செய்து புரட்சி செய்யலாம் என அவனுக்கு தோன்றியது.

மெல்ல அந்த பெண்ணிடம் தன் காதலைத் தெரிவித்தான் ஆரம்பத்தில் அந்தப் பெண் மறுத்தாலும் அன்புவின் பேச்சும்,நல்ல குணமும் அவள் மனதில் காதலை வளர்த்தது..

காதல்,புரட்சி, போராட்டம் என அன்புவின் படிப்பில் கவனக்குறைவு ஏற்பட்டது. அன்புவுக்கு அது உறுத்தினாலும்,வயதும் காதலும் அதை புறந்தள்ளியது.

அன்பு அவனுடைய சாதி இளைஞர்கள் மத்தியில் கதாநாயகனாகத் தோன்றினான்.அன்புவின் செயல்களில் மாற்றம் கண்ட தந்தை அவனைக் கண்காணிக்கத் தொடங்கினார். அன்புவின் காதல் விவகாரம் தெரிய வந்ததும் பதறினார்.

நன்கு படித்து குடும்பச் சூழ்நிலையை மாற்றுவான் என நினைத்தால், மகன் தவறான பாதையில் செல்கிறானே என வருந்தினார்.

மகனிடம் எதுவும் கேட்காமல் நேராக வயிரவன் இடம் சென்று விபரத்தைக் கூறினார். வயிரவன் அமைதியாக அன்புவின் தகப்பனாரிடம் பொறுமையாகத்தான் இதை எதிர்கொள்ள வேண்டும், அன்புவிடம் பேசிப் பார்க்கிறேன் என்றார்.

அன்புவை தன் தோட்டத்திற்கு அழைத்துத் தனியாகப் பேசினார். அப்போது அவர் அன்புவிடம் படிப்பு பற்றி விசாரித்தார். நீ நல்ல பணிக்குச் செல்ல வேண்டும். நீ படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்றார்.

இந்த வயதில் காதல் வருவது இயற்கையே,உனக்கு இன்னும் காலம் உள்ளது. படித்து நல்ல நிலைக்குச் சென்று இது போல் காதலித்துத் திருமணம் செய்தால் உன் குடும்பம் மகிழ்வதுடன் பொருளாதாரரீதியாகவும் வளம் பெறும்.

உன் திறமை பருவ வயது ஈர்ப்பால் வீணாகிப் போகக் கூடாது என்றார். நான் இப்போது உனக்கு அறிவுரை கூறவில்லை உன் வளர்ச்சி மேல் உள்ள அக்கறையால் கூறுகிறேன் என்றார்.

வயிரவன் பேசும் போது அன்பு மனதில் ஒரு எரிமலையே வெடித்தது போல் கோபம் கொப்பளித்தது. அடக்கினான். இவரும் தன் சாதி வெறியால் தான் பேசுகிறார் என்று நினைத்தான். அதன் வெளிப்பாடாக அவரிடம் ஏதும் பேசாமல் வெளியேறினான்..

தன் சாதி அமைப்பின் சார்பில் தங்கள் பகுதியில் கொடியைப் பறக்கவிட்டான். அடிக்கடி போராட்டங்களுக்கு சென்று வந்தான்.இந் நிலையில் சாதி அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தியபோது அது வன்முறையாக மாறிவிட்டது. காவல் துறை வழக்கு பதிவு செய்தது.

தன் சாதியத் தலைவருக்காக சிறை செல்வதை பெருமையாக நினைத்தான் அன்பு. வன்முறை வழக்கில் இவன் பெயரும் இருந்தது.

கல்லுாரியிலிருந்து இவனது தந்தைக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் தங்கள் மகன் படிப்பில் கவனம் செலுத்தாமல் வெளிப்பிரச்சனைகளில் கவனம் செலுத்தி ஒரு வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளான். .

இச்செயல் எங்கள் கல்லுாரிக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதால் அவரைக் கல்லுாரியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப் பட்டிருந்தது.

தந்தை துடிதுடித்துப் போனார். தன் மகன் படித்து நல்ல உத்தியோகத்திற்கு வந்து தன் குடும்பத்தை காப்பாற்றுவான் என நினைத்த அவருக்கு இச் செய்தி இடியாக இறங்கியது.

கடிதத்துடன் வயிரவன் வீட்டிற்கு சென்று அவரிடம் கடிதத்தைக் கொடுத்தார். படித்துப் பார்த்த வயிரவன் அன்புவின் அப்பாவிடம் கவலைப்படாதே .. விசாரிப்போம் என்றார். நாளை காலை வந்து விடு 6 மணி காருக்குப் போய் கல்லுாரி முதல்வரை அவரது வீட்டில் சந்தித்துப் பேசுவோம் என்றார்.

கடிதம் வந்த விபரம் பற்றி அன்புவிடம் அவனது தகப்பனார் ஏதும் கூறவில்லை.ஆனால் அப்பாவின் பதற்றம் கவலை தோய்ந்த முகம் அவனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. கல்லுாரியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் தெரிந்துவிட்டதோ,.

வன்முறையில் ஈடுபட்டோர் பெயரில் தனது பெயரும் காவல் துறையில் இருப்பது தெரிந்துவிட்டதோ, காதல் விவகாரத்தில் யாரும் கண்டித்திருப்பார்களோ எனப் பலவாறு யோசித்தான்.

காலை 5 மணிக்கெல்லாம் அப்பா கிளம்பிப் போனது அவனுக்குத் தெரியவில்லை. வயிரவனுடன் நேராகக் கல்லுாரி முதல்வர் வீட்டுக்குச் சென்று அவரிடம் நிலைமையை எடுத்துக் கூறினார்.

முதல்வர் காவல் துறையில் அன்பழகன் மீதான வழக்கை வாபஸ் பெற்று வாருங்கள் எனத் தெரிவித்தார். காவல் ஆய்வாளரையும் சந்தித்துப் பேசி அன்பழகன் மீதான வழக்கை திரும்பப் பெற்று வரும் போது.

அன்பழகனின் தகப்பனார் ,வயிரவனிடம் அன்பழகன் இனிமேல் இங்கு படிக்க வேண்டாம், வேறு கல்லுாரியில் சேர்த்து படிக்க வைக்க இயலுமா என்றார்.

அவரின் யோசனை சரியென்று தோன்றியதால் வயிரவன் மீண்டும் கல்லுாரி முதல்வரை சந்தித்துப் பேசி சென்னையில் உள்ள கல்லுாரிக்கு மாற்றினார்கள்.

வீட்டிற்கு வந்த அன்பழகனின் தந்தை மகனை அழைத்து கண்ணீர் விட்டபடி மகனிடம் வேறு கல்லுாரிக்குப் படிக்கச் செல்லுமாறு வேண்டினார். அன்பழகன் கொதித்து எழுந்தான் சாதி வெறி பிடித்த வயிரவன் உங்களை ஏமாற்றி என்னை ஊரை விட்டுத் துரத்த நினைக்கிறார் என்றான்.

அவர் சாதிப் பெண்ணை விரும்புவதால் என்னைத் துரத்த உங்களை வைத்து விளையாடுகிறார் எனக் கடுமையாக வயிரவனை வறுத்தெடுத்தான்.

ஒரு வழியாக தந்தையின் கண்ணீர் அவனை வேறு கல்லுாரிக்கு மாறிச் செல்ல வைத்தது. சென்னையில் பிரபல கல்லுாரியில் முதல்வரின் சிபாரிசால் இடம் கிடைத்ததை அறிந்தான். கல்லுாரியில் சேர்ந்த சில நாட்களில் தன் பயணம் வெகு துாரம் செல்ல வேண்டியுள்ளது என்பதை உணர்ந்தான்.

படிப்பில் கவனம் செலுத்தி கல்லுாரி தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றான் கல்லுாரி முதல்வர் முதல் அனைவரின் பாராட்டைப் பெற்றான். ஸ்காலர்ஷிப் கிடைத்ததால் தகப்பனாரின் பாரத்தை பாதியாக குறைத்தது போல் இருந்தது.

அந்த கல்லுாரியிலேயே பட்டமேற்படிப்பு,பின்னர் முனைவர் பட்டம் பெற்று பிரபல அரசு கல்லுாரியில் விரிவுரையாளராக பணி கிடைத்தது.

இக்காலங்களில் தனது கிராமத்திற்கு ஓரிரு முறை சென்றான். அதுவும் தங்கைகள் திருமணத்திற்காக சென்றது தான்..

கல்வி மூலமே பொருளாதாரத்தை உயர்த்தி சமநிலையை பெற முடியும் என்பதற்கு தானே சாட்சியானான்.
இந்த தருணத்தில் தனது தகப்பனாரிடம் அடிக்கடி வயிரவன் பற்றி கேட்டுக் கொள்வான்..

ஒருநாள் சென்னையில் உள்ள வீட்டிற்கு வயிரவனுடன் தகப்பனார் வந்தார்.அவரிடம் அவனால் பேசவே முடியவில்லை கண்கள் கலங்கின . அவர் அவனைக் கட்டியணைத்து அன்பு நீ சாதித்து விட்டாய் இனி உன் குடும்பத்திற்கு மட்டுமல்ல ஊருக்கே பெருமை என்றார்..

ஐயா நான் உங்களிடம் பல முறை எதிர்மறையாக நடந்து கொண்டதற்கு மன்னித்து விடுங்கள் என்றான். அப்போது அவர் அன்பு நீ ஒரு பேராசிரியர் , உன் வளர்ச்சி எனக்கு பெருமையாகவுள்ளது என்றார்.

பின்னர் அவனிடம் இருவரும் திருமணம் பற்றி கூறினர். ஆரம்பத்தில் மறுத்தான். பின்னர் சம்மதம் தெரிவித்தான்.
பெண் பார்க்க அன்று மாலையே அம்பத்துார் சென்றனர்.

பெண்ணின் தகப்பனார் வயிரவன் ஐயாவின் நண்பர் என்பதால் அவனைப் பற்றி எதுவும் கூறத் தேவையிருக்கவில்லை. கவிதாவைப் பார்த்தான் அவளும் கல்லுாரியின் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்தாள்.

அவனும்,கவிதாவும் பேசினார்கள்.பிடித்திருந்தது.திருமணம் நடந்தது. இன்று இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் .இருக்கிறார்கள்.

அதோடு அவன் நின்றுவிடவில்லை தங்கள் ஊரில் 5 குழந்தைகளுக்கான படிப்பு செலவை செய்து வருகிறான்.
தம் சமூகம் முன்னேற வேண்டுமானால் கல்வியே சிறந்த வழி..

என தனது மனவோட்டத்தை நிறுத்தினான். அப்போது “என்னங்க இன்னுமா துாங்குறீங்க எந்திரிங்க ” என்று அதட்டினாள் கவிதா .

எழுந்து வந்து நினைவுகளோடு வீட்டை சுத்தம் செய்யத் தொடங்கினான் அன்பு..