மாற்றுக் களம்: போராளி மற்றும் பத்திரிகையாளர்

முன்னெப்போதையும்விட பெரியார் ஈ.வெ.ரா. பற்றி அதிகமாக விவாதித்துக் கொண்டிருக்கும் தருணம் இது.

தமிழின் முக்கிய எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் தொடர்ந்து ஆவணப்படுத்திவரும் ஒளிப்படக் கலைஞர் புதுவை இளவேனில்,

ஒளிப்பதிவு செய்து, தயாரித்து இயக்கியிருக்கும் ‘பெருந்தொண்டர்’ என்ற இந்த ஆவணப்படம், பெரியாரது மூத்த தொண்டர்களில் ஒருவரான ஒளிச்செங்கோ என்பவரின் வாழ்க்கை வழியாக, சுயமரியாதை இயக்கம் முன்னெடுத்த சமூகநீதிக்கான போராட்டங்களும் பரப்புரைகளும் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை வியத்தகு முறையில் நினைவூட்டுகிறது.

திருவாரூருக்கு மிக அருகில் இருக்கிறது சோழர்காலக் கோயிலைக் கொண்ட கிராமமான கண்கொடுத்தவனிதம். அங்கே வசிக்கிறார் 80 வயது ஒளிச்செங்கோ. எட்டு முழ வேட்டியும் தோளில் வெண் துண்டும் முறுக்கிய மீசையுமாக அறிமுகமாகிறார். அவர் பேசப் பேச, அது தன் வரலாறு என்பதைத் தாண்டி, அன்றைய தஞ்சை மண்ணுக்கு நம்மைக் கூட்டிச் செல்கிறது.

பால்யத்தின் வறுமையை மீறி பெரியாரின் பகுத்தறிவுப் பரப்புரைகள் தன்னை எப்படிப் பாதித்தன என்பதை எடுத்துக்கூறுகிறார். 9-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்த நேர்ந்தாலும் பெரியாரின் பேச்சுகளும் எழுத்துகளும் தன்னை ஒரு தீவிர வாசகனாக மாற்றியதை எடுத்துக்காட்டுகிறார். ஒரு கட்டத்தில் காங்கிரஸிலிருந்து வெளியேறி பெரியார் கண்ட திராவிடர் கழகத்தில் தொண்டராகிறார்.

1958-ல் மன்னார்குடியில் சாதி ஒழிப்பு, சுதந்திரத் தமிழ்நாடு மாநாடு நடந்தது. அதில் கலந்துகொண்டபோது பெரியாரை முதல்முறையாக நேரில் சந்தித்தது, பின்னர், 1967-ல் தனது பக்கத்துக் கிராமமான விடையபுரத்தில் நடந்த பத்துநாள் பகுத்தறிவுப் பயிற்சிப் பட்டறைக்கு வந்து தங்கி இளைஞர்களுக்கு அறிவூட்டிய பெரியாருக்கு உதவியாக இருந்து அவரைக் கவனித்துக்கொண்டது என தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த சமூக நீதி வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்ற தனது நினைவுகளை இவர் விவரிக்கும்போது அக்காலத் தஞ்சாவூரின் அரசியல் சமூக வாழ்க்கை இவருடைய சாட்சியத்தில் உயிர்கொண்டு திரையில் விரிகிறது.

மன்னார்குடி சாதி ஒழிப்பு மாநாட்டில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரையும் சந்தித்தார் இளைஞர் ஒளிச்செங்கோ. அப்போது அவருடைய தமிழ்ப்பற்றையும் எழுத்தாற்றலையும் கண்ட ஆதித்தனார், ‘மாலை முரசு’ பத்திரிகையின் தஞ்சைப் பதிப்பு தொடங்கப்பட்டபோது அதில் செய்தியாளராகப் பணிபுரியும் வாய்ப்பை வழங்கினார்.

பத்திரிகையாளராக வாழ்க்கையை அமைத்துக் கொண்டாலும் திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றது, திராவிடர் கழக விவசாயத் தொழிளார் சங்கம் வழியாக, பண்ணை அடிமைகளாக நடத்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் நின்று போராடியது, சிறைக்குச் செல்கையில் அங்கிருக்கும் நூல் நிலையத்தைப் பயன்படுத்தித் தன்னைத் தீவிர வாசகராக மாற்றிக்கொண்டு ஒரு கட்டுரையாளராகப் பரிமாணம் பெற்றது என நினைவுகளில் மூழ்கி, இவர் தரும் வரலாற்றுச் செய்திகள் 50 ஆண்டுகளுக்கு முந்தைய தஞ்சை மாவட்டத்தை நம் கண்முன் கொண்டுவருகின்றன.

“பெரியாரின் கொள்கைகளுக்கு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் அன்றைக்கும் எதிர்ப்பு இல்லை; இன்றைக்கும் எதிர்ப்பு இல்லை. காரணம் சுயமரியாதையுடன் எப்படி வாழ்வது என்பதை அவர்தான் உழைக்கும் மக்களுக்குக் கற்றுக்கொடுத்தார். என்றாலும், அவருடைய கொள்கை களுக்கான தேவை இன்றும் இருந்து கொண்டேதான் இருக்கிறது” என்கிறார் இந்தப் பெரியாரின் பெருந்தொண்டர்.

ஒரு செய்தியாளராக, அறிஞர் அண்ணா, தனது கிராமத்துக்கு அருகில் உள்ள என்கண் ஊரைச் சேர்ந்த நடிகை ஈ.வி.சரோஜா, தேர்தல் சுற்றுப்பயணத்துக்காக வருகை தந்தபோது நடிகர்கள் கே.வி.ராமசாமி, எம்.ஜி.ஆர்., தஞ்சையை அடுத்த சூரக்கோட்டையில் உள்ள தனது பூர்விக வீட்டுக்கு வரும்போதெல்லாம் சிவாஜி எனப் பல பிரபலங்களைத் தாம் பணிபுரிந்த பத்திரிகைக்காகச் சுவைபட பேட்டியெடுத்த அனுபவங்களைப் பகிர்ந்தாலும், ‘விடுதலை’ இதழில் இவர் எழுதிய கட்டுரைகள் பெருவாரியான வாசகர்களால் கொண்டாடப்பட்டிருக்கின்றன.

இந்த 80 வயதிலும் வயலில் இறங்கி உழைத்தாலும் இன்னும் வாசித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கும் இவரைப் போன்ற கொள்கைப் பிடிப்புமிக்கத் பெருந்தொண்டர்களால் அன்றைய தஞ்சாவூர் மாவட்டத்தில் சுயமரியாதை இயக்கம் எப்படி அழுந்த வேர் பிடித்தது என்பதை எடுத்துக்காட்டுகிறது இந்த ஆவணப்படம். இந்தப் படத்துக்கான எழுத்தையும் பின்னணிக் குரலையும் வழங்கியிருக்கும் திரவிய முருகன், படத்தொகுப்பு செய்திருக்கும் அச்சுதன் ஆகியோரின் பங்களிப்பும் பாராட்டும்படி இருக்கிறது.

நன்றி

இந்து தமிழ் நாளிதழ்

சென்னை பல்கலை துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடுதல் குழுவுக்கு தலைவராக ஜே.என்.யு துணை வேந்தர் : மு.க.ஸ்டாலின் கண்டனம்

உசிலம்பட்டியில் எருக்கம்பால் கொடுத்து பெண் குழந்தையைக் கொன்ற அவலம்..

Recent Posts