முக்கிய செய்திகள்

‘மருது சகோதரர்களுக்கு சுவர் போல எனக்கு ட்விட்டர்’ : கமல்ஹாசன் ..


நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கியது முதல், கட்சிப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். திரைப்படங்கள், பிக் பாஸ் எனச் சென்றாலும், அவ்வப்போது மக்களைச் சந்தித்தும் வருகிறார். கடந்த வாரம் டெல்லி சென்றிருந்த கமல், தேர்தல் ஆணையத்தில் தனது கட்சியைப் பதிவு செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், நேற்று காலையில் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், “ட்விட்டரில் நேரடியாக உங்களின் கேள்விகளுக்கு விடையளிக்க உள்ளேன். கேள்வி கேட்கிறவர்கள், #AskKamalhaasan என்ற ஹேஷ்டேக் மூலம் தங்களது கேள்வியைக் கேட்கலாம்” எனப் பதிவிட்டிருந்தார் .

அதன்படி நேற்று மாலை ட்விட்டரில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு கமல் பதிலளித்தார். ட்விட்டரில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளைத் தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி கமலிடம் கேட்க அதற்கு கமல் பதிலளித்தார்.

முதல் கேள்வியாக ட்விட்டர் குறித்தும், அதில் வலம் வரும் இளம் தலைமுறையினருக்கு என்ன அறிவுரை வழங்குவீர்கள் என கேட்க, “குறிப்பிட்ட வயது வரை நான் அறிவுரைகளை ஏற்பவனாக இல்லை. அதனால் அறிவுரைகளை நான் வழங்குவது சரியானதாக இருக்குமா என்பதும் தெரியவில்லை. செய்யக்கூடாது என யாராவது சொன்னால் அதைத்தான் செய்யத் தோன்றும். எல்லாவற்றையும் புரிந்துகொள்ளும் காலம் எல்லோருக்கும் வரும்” என்றார்.