காஷ்மீரில் 40 துணை பாதுகாப்பு படையினரை பலிகொண்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு, பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதை தொடர்ந்து ஐ.நா.வில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக்கோரி அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன. கடந்த 4 முறை இந்தியா கொண்டுவந்த தீர்மானம் அனைத்தையும் சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டது.
ஆனால், அண்மையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக்கோரி தீர்மானம் நிறைவேறியது. அதனை தொடர்ந்து மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.
இதன் மூலம் மசூத் அசார் எந்த ஒரு நாட்டுக்கும் தப்பி செல்ல முடியாத வகையில் தடை கொண்டு வரப்பட்டது. அதனுடன் சர்வதேச நாடுகளில் இருக்கும் மசூத் அசாரின் சொத்துகள் மற்றும் அவரது வங்கிக்கணக்குகள் அனைத்தும் முடக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கடந்த 2009ம் ஆண்டு காங்கிரஸ் முயற்சியை தொடங்கியது. 10 வருடங்களுக்கு பின் இது நிறைவேறியுள்ளது.
ஒரு திரைப்படத்திற்கு செல்கிறோம். அதன் கடைசி காட்சியையே நாம் பார்க்கிறோம் எனில் அதற்கு முந்தைய காட்சிகள் என்னாவது? அதுபோன்று பிரதமர் மோடி கதையின் கடைசி காட்சி பற்றியே பேசுகிறார் என கூறியுள்ளார்.
ஹபீஸ் சயீத் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட யார் காரணம்? லக்வியை நீங்கள் மறந்து விட்டீர்ளா? காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபொழுது 2 பேர் சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டனர். மசூத் அசார் ஒன்றும் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட முதல் ஆளில்லை என்றும் கூறியுள்ளார்.