நீட் தேர்வு விவகாரத்தால் மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்படுவதாக மருத்துவக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில், தமிழில் வழங்கப்பட்ட வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக மொழிப்பெயர்க்கப்பட்டிருந்தது. இதனால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 மதிப்பெண்கள், வீதம் 196 மதிப்பெண்கள் வழங்கவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும், மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வைநிறுத்தி வைக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க அகில இந்திய அளவில் மருத்துவப்படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்படுவதாக மருத்துவக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் 16ம் தேதி தனியார் கல்லூரிகளில் நடைபெறவிருந்த கலந்தாய்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரையில் கலந்தாய்வு நடக்காது என்றும் புதிதாக தரவரிசைப்பட்டியலை தயார் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.