மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு : ஜூலை 1 முதல் கலந்தாய்வு..


தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 1ல் முதற்கட்ட கலந்தாய்வு தொடங்க உள்ளது.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில், சென்னையைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். தர்மபுரியைச் சேர்ந்த ராஜ் செந்தூர் 656 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்திலும், சென்னை மாணவர் பிரவீண் 644 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்திலும் உள்ளனர். ஒரு திருநங்கையின் விண்ணப்பமும் ஏற்கப்பட்டுள்ளது. மொத்தம் 27417 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.

மருத்துவ படிப்புகளுக்கன முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.