கலைஞர் சிலை திறப்பு விழா: அண்ணா அறிவாலய வடிவில் தயாராகிறது பிரம்மாண்ட மேடை

கலைஞர் சிலை திறப்பு விழாவை ஒட்டி நடைபெறும் பொதுக்கூட்ட மேடை அண்ணா அறிவாலய வடிவில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கலைஞரின் திருவுருவச் சிலை வரும் 16-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பொதுச் செயலாளர் க.அன்பழகன் முன்னிலையில், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கிறார்.

இதை முன்னிட்டு இடவசதி மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்திடும் வகையில், தலைமைக் கழகத்தால் ‘சிறப்பு அழைப்பாளர்’களாக அழைக்கப்பட்டுள்ள முன்னணியினர் மட்டுமே, அண்ணா அறிவாலய வளாகத்தில் நடைபெற உள்ள கலைஞர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலைஞர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி, பொதுக்கூட்டம் நடைபெறும் ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் நேரடி ஒளிபரப்பு செய்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் சிலை திறந்து வைத்தவுடன், சோனியா காந்தி, மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் வாழ்த்துரை வழங்க உள்ள ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் நேரடியாக பொதுக்கூட்டம் நடைபெறும் திடலுக்கு வருகை தந்தவுடன், பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் தொடங்கும்.

எனவே, கழக நிர்வாகிகள் தோழர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தருவதை தவிர்த்து, பொதுக்கூட்டம் நடைபெறும் ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு வருகைதர வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராயப்பேட்டையில் சோனியா காந்தி பேசும் பொதுக்கூட்ட மேடை அண்ணா அறிவாலய வடிவமைப்பில் தயாராகி வருகிறது.

தென் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ, மேடை அமைக்கும் பணியை கவனித்து வருகிறார்.

இந்த மேடை வெளியில் தயாரிக்கப்பட்டு ராயப்பேட்டை மைதானத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

புத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி

மத்திய பிரதேச முதலமைச்சராக கமல்நாத் தேர்வு: எம்எல்ஏக்கள் கூட்டத்திற்குப் பின் அறிவிப்பு

Recent Posts