மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.
மேகதாதுவில் அணைகட்ட அனுமதி கோரி வரைபடம் மற்றும் புள்ளிவிவரங்களோடு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கர்நாடக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
கடந்த 20ஆம் தேதி அனுப்பியுள்ள அந்த கடிதத்தில் பெங்களூருவைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான குடிநீருக்காகவும் மின் உற்பத்திக்காகவும் அணை கட்ட வேண்டியது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு வழங்கவேண்டிய 177.25 டி.எம்.சி தண்ணீர் போக மீதமுள்ள தண்ணீரை மேகதாது அணையில் சேமித்து வைக்க முடியும் என்றும்,
மேலும் 400 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் தயாரிக்க முடியும் என்றும் கர்நாடக அரசின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில்,மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க கூடாது என்றும்,
அதற்கான அறிவுறுத்தலை வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு பிரதமர் வழங்க வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கோரிய கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையம் நிராகரிக்க, மத்திய நீர் சக்தி அமைச்சகத்திற்கு பிரதமர் நேரடியாக தலையிட்டு அறிவுறுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தி இருக்கிறார்.
தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களின் ஒப்புதல் இன்றி மேகதாது திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் அளிக்க கூடாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.