மேகேதாட்டு அணையை தேசிய சிக்கலாக்கும் கர்நாடகத்தின் சதியை முறியடிக்க வேண்டும்: ராமதாஸ்…

மேகேதாட்டு அணையை தேசிய சிக்கலாக்கும் கர்நாடகத்தின் சதியை முறியடிக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டின் பக்கம் இருக்கும் அனைத்து நியாயத்தையும் மறைத்து விட்டு,

மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணையைக் கட்ட வேண்டும் என்ற தமது கனவை நனவாக்கிக் கொள்ள கர்நாடக அரசு துடித்துக் கொண்டிருக்கிறது.

அதற்காக மேகேதாட்டு விவகாரத்தை தேசிய பிரச்சினையாக மாற்றி, அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள சதித்திட்டம் வகுத்திருக்கிறது.

அத்திட்டத்தின் முதல் கட்டமாக டெல்லியில் உள்ள தேசிய ஊடகங்களின் செய்தியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செல்வாக்குள்ள மனிதர்களை

பிப்ரவரி 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை கர்நாடகத்தில் உள்ள காவிரிப் பாசனப் பகுதிகளுக்கு சுற்றுலாவாக அழைத்துச் செல்ல குமாரசாமி அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை டெல்லியில் உள்ள கர்நாடக அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கர்நாடகத்தின் சார்பில் செய்தியாளர்களும், செல்வாக்குள்ள மனிதர்களும் அழைத்துச் செல்லப்படும் போது அவர்களுக்கு காவிரி பிரச்சினையில் கர்நாடகத் தரப்பின் நியாயம் மட்டுமே தெரிவிக்கப்படும்.

காவிரி நீரில் கர்நாடகத்தின் பங்கை அம்மாநிலத்தின் குடிநீர் தேவைக்காகவும், மின்சார உற்பத்திக்காகவும் பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு முட்டுக்கட்டை போடுவது போன்ற தோற்றத்தை ஊடகங்களிடம் கர்நாடக அரசு ஏற்படுத்தும்.

அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய அரசில் உள்ள ஆதரவு அதிகாரிகள் மூலமாகவும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து காரியம் சாதிப்பது தான் கர்நாடகத்தின் திட்டமாகும்.

கர்நாடகத்தின் இந்த சதித் திட்டம் மிகவும் ஆபத்தானது. காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தான் அரசு எத்தகைய உத்தியைக் கடைபிடிக்கிறதோ,

அதே உத்தியைத் தான் மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகமும் கடைபிடிக்கிறது. காஷ்மீர் சிக்கலில் மூன்றாவது தரப்பு தலையிடக்கூடாது என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு.

ஆனால், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஐநா பொது அவை உள்ளிட்ட உலக அரங்குகளில் இச்சிக்கலை எழுப்புவதன் மூலமும்,

பன்னாட்டு பத்திரிகைகளில் காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக செய்தி வெளியிட வைப்பதன் மூலமும் காஷ்மீர் சிக்கலை பன்னாட்டு சிக்கலாக மாற்றி, உலக நாடுகளை தலையிட வைப்பது தான் பாகிஸ்தானின் திட்டமாகும்.

மேகேதாட்டு சிக்கலை தேசிய அளவில் செய்தியாக்குவதன் மூலம் மற்ற மாநிலங்களையும், தலைவர்களையும் தமக்கு ஆதரவாகப் பேச வைப்பதே கர்நாடகத்தின் நோக்கம். இதற்கும், பாகிஸ்தான் அணுகுமுறைக்கும் வித்தியாசம் இல்லை.

உண்மையில் காவிரி பிரச்சினையில் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது கர்நாடகம் அல்ல; தமிழ்நாடு தான். கடந்த 7 ஆண்டுகளின் 14 பருவங்களில் 4 சம்பா பருவங்களில் மட்டும் தான் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக சாகுபடி நடந்திருக்கிறது.

3 சம்பா பருவங்களும், அனைத்து குறுவைப் பருவங்களும் வறட்சியின் காரணமாக தோல்வியடைந்துள்ளன.

அதேநேரத்தில் இருக்கும் தண்ணீரை கர்நாடகம் பயன்படுத்திக் கொள்வதால் அந்த மாநிலத்தில் ஒரு பருவத்தில் கூட சாகுபடி பாதிக்கப்படவில்லை.

மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் அதனால் தமிழகத்துக்கு தான் அதிக நன்மை கிடைக்கும் என்ற பொய்ப்பிரச்சாரத்தை கர்நாடகம் தொடர்ந்து செய்து வருகிறது.

இதில் எள் முனையளவும் உண்மையில்லை. கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 104.59 டிஎம்சி ஆகும். 67.14 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகேதாட்டு அணையும் கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 171.73 டிஎம்சியாக அதிகரிக்கும்.

மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் காவிரியில் கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது என்பது உறுதி. காவிரி நீரை நம்பித் தான் 12 மாவட்டங்களில் பாசனம் நடைபெறுகிறது;

5 கோடி மக்கள் குடிநீருக்காக காவிரியைத் தான் நம்பியிருக்கின்றனர். மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் 12 மாவட்டங்கள் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமலும், 5 கோடி பேர் குடிநீர் இல்லாமலும் கடுமையாக பாதிக்கப்படுவர்.

இந்த உண்மைகள் அனைத்தும் தேசிய ஊடகங்கள் வழியாக மத்திய அரசுக்கும், அனைத்து மாநில அரசுகளுக்கும் தெரிவிக்கப்பட வேண்டும்.

இதன்மூலம் தான் கர்நாடகத்தின் சதியை முறியடிக்க இயலும். எனவே, அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

மற்றொருபுறம் மேகேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புகளின்படி தான் மத்திய அரசு செயல்பட வேண்டுமே தவிர, அழுத்தங்களுக்கு பணியக்கூடாது” என வலியுறுத்துகிறேன்.

மக்களவைத் தேர்தல்: பிப்.,4 முதல் விருப்ப மனு அதிமுக அறிவிப்பு..

இளையராஜா-75 நிகழ்ச்சிக்கு தடைகோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்..

Recent Posts