முக்கிய செய்திகள்

ஜெ.மு – ஜெ.பி: நிரப்பக் கூடாத வெற்றிடம்: மேனா.உலகநாதன்

 

 

செப்டம்பர் 22, 2016

 

தமிழக மக்கள் மறக்க முடியாத பல தேதிகளில் இதுவும் ஒன்று. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இதே நாள் இரவில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் தமிழக அரசியலில் அரங்கேறி வரும் நிகழ்வுகள்… இல்லை… இல்லை கூத்துகள் கொஞ்சநஞ்சமல்ல.jaya wish

 

கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் இருந்த படியே மீனம்பாக்கம் வரை நீட்டிக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைத்ததுதான் ஜெயலலிதா பங்கேற்ற கடைசி நிகழ்வு. அதுதான் அவர் பங்கேற்கும் இறுதி நிகழ்வாக இருக்கப் போகிறது என்பது அப்போது யாருக்கும் தெரியாது. நிச்சயமாக அவருக்கும் கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கெடுவாய்ப்பாக அதுவே அவரது கடைசி நிகழ்ச்சியாக அமைந்து விட்டது. அதற்குப்பின், இந்த ஓராண்டுக்குள் தமிழக அரசியலில், குறிப்பாக அதிமுகவில், கடந்த 30 ஆண்டுகளாகப் பார்த்தே இருக்க முடியாத காட்சிகளெல்லாம் அரங்கேறி, அன்றாடம் அதிர்வலைகளை எழுப்பியபடியே, தற்போதும் தொடர்கின்றன. அந்த வகையில், ஜெயலலிதாவுக்கு முன், ஜெயலலிதாவுக்கு பின் என தமிழக அரசியலின் நிலையை, ஒரு பருந்துக் கண்ணோட்ட நகர்வுடன் பகுத்தாய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

 

உலகப்புகழ் பெற்ற ஓவியமான மோனாலிசாவின் புன்னகையைப் போலவே ஜெயலிலதாவின் புன்னகையும் கூட, அதிகாரத்தின் புதிர்களும், அந்தரங்கத்தின் தோண்டத் தீராத மர்மப் புதையல்களையும் கொண்டதுதான்…! ஜெயலலிதாவின் வசீகரத்தை, ஒரு ஜனநாயக பயங்கரம் என்றே சித்தரிக்கலாம்… வசீகரத்தின் வழியாக, எதிர்க்க முடியாத வலிமையைப் பெறும் வித்தையை, எம்ஜிஆரிடம் இருந்து மிகத் தெளிவாகவே கற்றுவைத்திருந்தார் ஜெயலலிதா. அதனால்தான், 1987ல் எம்ஜிஆர் மறைந்த இரண்டு ஆண்டுகளிலேயே அதிமுகவையும், அதன் இரட்டைஇலைச் சின்னத்தையும் கைப்பற்றி, அவற்றைத் தனது அடையாளமாகவும் அவரால் நிலைநிறுத்திக் கொள்ள முடிந்தது. அதிமுகவில் தற்போது இருப்பவர்களை விட பல மடங்கு வலிமையும், சூழ்ச்சியும் கொண்ட விலாங்குமீன் தலைவர்கள் அப்போது இருந்தனர். திராவிட இயக்கத்தினரால் நாவலர் எனப் போற்றப்பட்ட நெடுஞ்செழியன், எம்ஜிஆரின் வாழ்நாள் வலதுகரமான ஆர்எம்.வீரப்பன், எஸ்.டி.சோமசுந்தரம், திருநாவுக்கரசு(சர்), கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சசந்திரன் என அந்தப் பழம்பெரும் பட்டியல் நீளமானது… அத்தனை தலைகளையும் உருட்டிவிட்டு, அரியாசனத்தில் அமர்ந்த ஜெயலலிதாவின் வலிமையை, குறைவாக மதிப்பிட்டதுதான் கலைஞர் கருணாநிதி செய்த மிகப்பெரிய வரலாற்றுத் தவறு!

 

தம்பி வா தலைமை ஏற்க வா என்று அண்ணாவால் அழைக்கப்பட்ட நெடுஞ்செழியனை, ‘உதிர்ந்த மயிர்’ எனக் கூறிய போதே, எத்தனை பெரிய மனிதரையும் உதாசீனப் படுத்தத் தயங்காதவர் ஜெயலலிதா என்ற தனது ஆணவம் சார்ந்த அடையாளத்தை, அரசியல் புள்ளிகள் அனவைருக்கும் அவர் உணர்த்தி விட்டார். ஜெயலலிதாவின் இத்தகைய அதிரடியான பேச்சும் போக்கும்தான், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதிவரை, அதிமுகவில் அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை, அனைவரையுமே முகமும், குரலும் அற்ற அடிமைகளாக கட்டிப்போட்டிருந்தது. ஜெயலலிதா இருக்கும் போது, ஓ.பன்னீர்செல்வத்தின் குரலைத் தவிர வேறுயாருடைய குரலையாவது நாம் கேட்டதுண்டா…. சசிகலாவின் குரலும், பேச்சும் எப்படி இருக்கும் என்று காட்டுவதற்காக நமது ஊடகங்கள் காட்டிய பரபரப்பும், போட்டியுமே, ஜெயலிலதாவின் கட்டுப்பாட்டில் இருந்த அதிமுக குறித்த புரிதலுக்கு போதிய சான்று!

 

ஆக, வசீகரம் என்பதை விட வலிமை என்பதே காலப்போக்கில் ஜெயலலிதாவின் அரசியல் அடையாளமாக பரிணமித்து நின்றது. கூடுதல் குண அடையாளமாக பிடிவாதமும் சேர்த்தே சித்தரிக்கப்பட்டது. 1991ல் அவர் ஆட்சியில் அமர்ந்த பின்னர், இதுபோன்ற அவரது குணச்சாயல்கள் அழுத்தமாக வெளிப்படத் தொடங்கின.

 

ஜெயலலிதாவின் அரசியல் வரலாற்றில், அவர் மீது வைக்கப்படும் எதிர்மறையான விமர்சனங்களுக்கு பஞ்சமில்லை. ஆடம்பரத் திருமணமாகட்டும், அதிரடி கைதுகளாகட்டும், முரண்பட்டு பேசுவதாகட்டும் எல்லாமே ஜெயலலிதாவின் வெளிப்படையான தவறுகள். தாம் செய்வது எத்தகைய தவறு என்பதை உணராமலேயே அவர் பல செயல்களைச் செய்திருக்கிறார் என்பதற்கு, அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஓர் அழுத்தமான உதாரணம். ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த தொடக்க காலம் என்பதால், பின்னாளில் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதைக் கணிக்காமலேயே அவர் சில மோசமான தவறுகளைச் செய்துள்ளார். அவரது ஆயுட்காலம் முழுக்க அந்தத் தவறுகள் அவரைத் துறத்தத் தவறவில்லை. அதேநேரத்தில், அவரது பிடிவாத குணத்தால், மத்திய அரசின் ஆதிக்க வலையில் இருந்து தமிழகம் பல்வேறு பிரச்னைகளில் தப்பித்து வந்திருப்பதையும் மறுப்பதற்கில்லை. அவரது மரணத்திற்குப் பின்னரே அந்த உண்மையை நாம் பல தருணங்களில் முடிகிறது.

 

1994ஆம் ஆண்டு காவிரிப் பிரச்னைக்காக முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டே ஜெயலலிதா மேற்கொண்ட உண்ணாவிரதம், முதன் முதலாக அவரது மற்றொரு முகத்தை மக்களுக்கு காட்ட உதவியது எனலாம். மாநில நலன் சார்ந்து வெளிப்படையாக களத்தில் இறங்கி அவர் நடத்திய போராட்டம் அது. அதே காவிரி விவகாரத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வைத்ததற்காகவும் அவர் சட்டரீதியான போராட்டங்களைப் பின்னாளில் முன்னெடுத்தார்.

 

அவரது அரசியல் வாழ்க்கையின் இறுதிக் காலக்கட்டத்தில், தமிழக நலன் சார்ந்த பல பிரச்னைகளில் மத்திய அரசிடம் விட்டுக் கொடுக்காமல் போராடி வந்திருப்பதையும் நாம் அறிய முடிகிறது.

 

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த உணவு பாதுகாப்புச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வந்தார் ஜெயலிலதா. அந்தத் திட்டத்தை பாஜக அரசு நடைமுறைப் படுத்த முயன்ற போதும், அதே பிடிவாதத்துடன் ஏற்க மறுத்தார். ஏற்கனவே தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் திடட்டத்தில் இணையத் தேவையில்லை என்பது அவரது நிலைப்பாடாக இருந்தது. கடைசிக் கட்டமாக, தமிழக அரசு கூறும் திருத்தங்களைச் செய்தால் மட்டுமே அதை ஏற்க முடியும் எனத் தெரிவித்தார். ஆனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மாதத்திலேயே (நவம்பர் 1, 2016) உணவுப் பாதுகாப்புத் திட்டம் தமிழகத்தில் அமல் படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மற்றொன்று உதய் மின்திட்டம். இந்தத் திட்டத்தையும் ஜெயலிலதா கடுமையாக எதிர்த்து வந்தார். தற்போது ரயில்வே துறை அமைச்சராக இருக்கும் பியூஷ் கோயல், அப்போது மத்திய மின்சாரத்துறையின் அமைச்சராக இருந்தார். மின்துறையில் நலிவடைந்த மாநிலங்களை கைத்தூக்கி விட கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு அப்போது கூறியதை மறுத்த ஜெயலலிதா, ‘உதய் திட்டம் அமல்படுத்தினால் தனியார் வங்கிகளும், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களும் தான் பலன் பெறுவார்கள். மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்’ என்று வெளிப்படையாக விளாசினார். அதுமட்டுமல்ல உதய் திட்டம் அமல்படுத்தப்பட்டால் பெட்ரோல், டீசலுக்கு விலை நிர்ணயிப்பது போல் மின் கட்டணமும் 3 மாதத்திற்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படும்.  நஷ்டத்தில் இருக்கும் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு மேலும் நிதிச்சுமை ஏற்படும். அந்த கடன் தீர மத்திய அரசு உதவி செய்யாது என்றெல்லாம் கூறி, அதை ஏற்க மறுத்து வந்தார். ஆனால், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடுத்த மாதமே, டெல்லி சென்ற (அக்டோபர் 21, 2016) அமைச்சர் தங்கமணி அதற்கும் மத்திய அரசிடம் ஒப்புதல் அளித்து விட்டு வந்தார்.

 

அடுத்தது மருத்துவப் படிப்புக்கான தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு – நீட்! இதில் திமுக தலைவர் கருணாநிதியைப் போலவே, ஜெயலலிதாவும் கடுமையான எதிர்ப்பைக் காட்டி வந்தார். தற்போது அதுவும் அனிதாவின் உயிருடன் சேர்ந்தே பறிபோனது.

 

மாநிலத்தின் வரி வருவாயைப் பாதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவான ஜிஎஸ்டியையும் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்து வந்தார். அதையும் டெல்லி சென்று அடிபணிந்து ஏற்றுக் கொண்டது தற்போதைய அதிமுக பரிவாரம்.

 

மாநிலத்தை மழுங்கடிப்பதற்கான இன்னும் சில திட்டங்களையும் செயல்படுத்த மத்திய அரசு காத்திருக்கிறது…

 

தமிழகத்தின் சமூக நீதி கொள்கைக்கு எதிரான, இட ஒதுக்கீட்டை கேள்விகுறியாக்கும்  பல்கலைக் கழகங்களை ‘உலகத்தர பல்லைகலைக் கழகங்களாக’ தரம்  உயர்த்தும் திட்டம், அவற்றில் ஒன்று. தற்போதைய கோமாளிகள் ஆட்சி தொடர்ந்தால், அதையும் கேட்காமலேயே மத்திய அரசிடம் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வந்துவிடுவார்கள்.

 
ஜெயலலிதா கடுமையாக எதிர்த்து வந்த அதிகம் பேசப்படாத மத்திய அரசின் மற்றொரு கபளீகரத்திட்டம், ரயில்வே துறையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்.  தமிழகத்தில் நடைபெறும் ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு நிலமும் தந்து,  திட்ட மதிப்பீட்டில் பாதி நிதியும் தர வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம்.  அதாவது ‘நீ அரிசி கொண்டு வா; நான் உமி கொண்டு வருகிறேன். நாம் இரண்டு  பேரும் ஊதி, ஊதி தின்னலாம்’ என்கிறது மத்திய அரசு. ஆனால் ‘நிலத்தின் மதிப்பீட்டை  திட்ட மதிப்பீட்டில்  சேர்த்து கணக்கிட  வேண்டும் என்பது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் நிபந்தனையாக இருந்தது. மத்திய அரசு ஒப்புக் கொள்ளவில்லை. ரயில்வே துறை தொடர்ந்து கடிதம் எழுதியும், ஜெயலலிதா அதனை கண்டு கொள்ளவில்லை, இந்தத் திட்டத்திலும் ஜெயலலிதா காட்டிய உறுதியை தற்போதைய தமிழக அரசு காட்டவில்லை.

 

ஆக, ஜெயலலிதாவை ஓர் அரசியல் விபத்தாக தொடக்க காலத்தில் இருந்தே பார்த்து வருபவர்கள் கூட, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது தமிழக உரிமைகள் சார்ந்து அவர் காட்டி வந்த உறுதியை மனதுக்குள் பாராட்டவே செய்தார்கள்.

 

எனினும், ஜெயலலிதாவின் பெரும்பாலான அரசியல் தவறுகள் அவரை முழுமையாக ஏற்றுக்கொள்வதில், அழுத்தமான மனத்தடையை ஏற்படுத்துவது இயல்பானது, தவிர்க்க முடியாததும் கூட.

 

மற்றொரு புறம்…. ஜெயலிலாதா இருக்கும் போது, உதட்டிழிப்பைத் தவிர, ஒருவார்த்தை கூட உதிர்க்க இயலாத, உயிருள்ள பொம்மைகளைப் போல பொதுவெளியில் வலம் வந்து கொண்டிருந்த அதிமுக அமைச்சர்களும், பிரபலங்களும், தற்போது பேசிப்பேசியே மக்களைக் குழப்பி வருகின்றனர். ஜெயலலிதா மரணத்திற்குப் பின் அவரது கட்சியளவில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் முக்கியமானதாக பிரலாபிக்கப்படுகிறது.

 

ஆனால், சர்வாதிகார நிலவறைக்குள் நீண்டகாலமாக அடைபட்டுக் கிடந்து விட்டு, திடீரென சுதந்திர வெளிச்சத்தைப் பார்த்தவுடன் துள்ளிக்குதித்து ஆர்ப்பரிக்கும் அடிமைகளின் உற்சாகத்தைத் தவிர, அதில் ரசிப்பதற்கும், மதிப்பதற்குமான அம்சங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. முட்டாள்கள் ஆள்பவர்களாக இருப்பதைவிடவும் அடிமைகளாக இருப்பதுதானே நாட்டுக்கு நல்லது!

 

அரசியலில் ஜெயலலிதா எனும் ஆளுமை விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்பப் போவது யார் என்று வேறு பலரும் புலம்புகின்றனர்.

 

சர்வாதிகளின் மறைவு, அதிர்வுகளை மட்டுமின்றி, தோற்ற அளவில் ஒரு விதமான வெற்றிடத்தையும் ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால், அது ஆரோக்கியமான சிந்தனைகளும், ஆளுமைகளும் வளர்வதற்கு காலம் அளிக்கும் இடைவெளியே தவிர, வெற்றிடமல்ல.

 

தவிர, சர்வாதிகாரத்தின் வெற்றிடத்தை அவசியம் நிரப்பத்தான் வேண்டுமா என்ன?

 

நன்றி: patirikai.com – ல் வெளிவந்த கட்டுரை

 

Memories Of Sep-22, 2016: Is the replacement of the hollow place of Jayalalitha is a compulsory need?

___________________________________________________________________