மனிதன் என்பதற்கு மேலான கௌரவம் எதுவும் இல்லை என்றார் மார்க்ஸ். அத்தகைய மனித மாண்புக்கான அத்தனை சிறப்புகளையும் சிதைப்பதுதான் மதவாதத்தின் தன்மை என்பதற்கு வெளிப்படையான அடையாளங்கள்தான் நாட்டில் தற்போது அன்றாடம் நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் காட்சிகள். ஏதோ, இந்துத்துவ அரசியல் மீது நமக்கிருக்கும் கருத்து முரண்பாடு காரணமாக இப்படித் தோன்றுகிறதோ எனச் சிலருக்கு அய்யம் எழக் கூடும். ஆனால், ஐநா மனித உரிமை அமைப்பின் ஆணையர் (Zeid Ra’ad Al Hussein) ஜேத் ராஅத் ஹூசேன் தெரிவித்திருக்கும் கருத்து, நம்முடைய உணர்வு மிகவும் அசலானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்ற ஐநாவின் 36 ஆவது மனித உரிமை அமர்வின் தொடர்ச்சியாக, அதன் ஆணையர் அல் ஹூசேன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்தியாவின் தற்போதைய நிலைகுறித்து தெரிவித்திருக்கும் கருத்துகள் மிகவும் கடுமையானவை. “இந்தியாவைத் தோலுரித்திருக்கும் ஐநா மனித உரிமைகள் ஆணையம்” என தலைப்பிட்டு ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையே அந்தச் செய்தியினை வெளியிட்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்தியாவைப் பற்றி அப்படி என்னதான் சொல்லி இருக்கிறார் அல் ஹூசேன்…
இந்தியாவில் மதரீதியான மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான சகிப்பின்மை அதிகரித்து வருவதாக கூறி அந்த அறிக்கையில் தமது வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார் ஐநா மனித உரிமை ஆணையர் அல் ஹூசேன். அடிப்படையான மனித உரிமைகளுக்கு பெரும் அச்சுறுத்தல் நிலவுவதாகவும் அதில் அவர் அச்சப்பட்டிருக்கிறார்.
அவர் கருத்துகளுக்கான காரணங்களையும் அவர் முன்வைக்கத் தவறவில்லை.
கர்நாடகாவில் பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தனது கருத்துக்கான முதன்மை ஆதாரமாக சுட்டிக்காட்டி இருக்கிறார் அல் ஹூசேன். சுமார் 37 ஆண்டுகள் லங்கேஷ் என்ற விளிம்புநிலை மக்களுக்கான ஏட்டை, ஒரு விளம்பரம் கூட இல்லாமல் நடத்தி வரும் பத்திரிகைக் குடும்பத்தில் பிறந்தவர் லங்கேஷ் கௌரி. எழுத்தாளரும், கவிஞருமான லங்கேஷின் மகள். தந்தையின் வழியில் தொடர்ந்து நடைபோட்ட கௌரி, மதவாதிகள், ஆதிக்க வாதிகளின் குரூர முகத்தை தொடர்ச்சியாக தோலுரித்து வந்ததன் விளைவே, அவர் சுடப்பட்டதற்குக் காரணம் என்பதை, மனச்சாட்சியுள்ள எவரும் மறுக்கவில்லை. அந்த உண்மைதான் ஐநா மனித உரிமை அமைப்பின் மனசாட்சியையும் உலுக்கி இருக்கிறது.
எளிய மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த கௌரி லங்கேஷ் படுகொலைக்கு எதிரான போராட்டங்களையும், கருத்துரிமையைப் பாதுகாப்பதற்காக எழும் குரல்களையும் தாம் நெஞ்சார ஆதரித்து உற்சாகப்படுத்த விரும்புவதாக அல் ஹூசேன் நெகிழ்ச்சியுடன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கௌரி லங்கேஷ் படுகொலை என்பது சமகால இந்தியாவின் போக்கை குறியீடாக உணர்த்தும் ஓர் அடையாளம்தான். அதே மாநிலத்தில் கல்பர்கி என்ற முற்போக்கு சிந்தனையாளர் கொல்லப்பட்ட போதே இத்தகைய அறிவுலகப் படுகொலைகளை, மதவாதிகள் தொடங்கி விட்டனர். பல்வேறு சாதனைகளுக்காக தாங்கள் பெற்ற விருதுகளையே பல சிந்தனையாளர்களும், எழுத்தாளர்களும், கலைஞர்களும் திருப்பி அளிக்க முன்வந்த போதும் கூட, மத்தியில் ஆட்சி நடத்தும் மதவாத அரசு அதற்காக வெட்கப்படவில்லை. அதன் தாக்கமும் அதிர்வும் தான், ஐநா மன்றம் வரைக்கும் தற்போது எதிரொலித்துள்ளது.
அதுமட்டுமல்ல, மியான்மர் (பர்மா) நாட்டில் இருந்து தங்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் கொடுமையான வன்முறைகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பச்சிளங்குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என குடும்பம், குடும்பமாக வெளியேறித் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள் விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நிலைப்பாடு குறித்தும் அல் ஹூசேன் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். சுமார் 40 ஆயிரம் ரோஹிங்யா முஸ்லிம்கள் மேற்கு வங்கம் உட்பட பல பகுதிகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களில் 16 ஆயிரம் பேருக்கு ஐநா அகதிகளுக்கான அடையாள அட்டைகளையும் வழங்கி உள்ளது. ஆனால், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்ற காரணத்தைக் காட்டி, அவர்களை மியான்மருக்கே திருப்பி அனுப்பி வைக்க பாஜக அரசு முடிவு செய்துள்ளது. அகதிகளுக்கான சர்வதேச பிரகடனத்தில் இந்தியா ஒப்பமிடவில்லை என்பதால், ரோஹிங்யா முஸ்லிம்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என்ற விளக்கத்தை வேறு அளித்திருக்கின்றனர் நமது மோடி வகையறாக்கள். அகதிகளுக்கான பிரகடனத்தில் கையொப்பம் இடாவிட்டாலும், மனித நேயத்தின் அடிப்படையில் தஞ்சமடையும் ஏதிலி மக்களுக்கு கருணை காட்டுவதை, எல்லா நாடுகளுமே ராஜரீகப் பண்பாக கடைப்பிடித்து வருவதை சுட்டிக்காட்டி இருக்கிறார் ஐநாவின் மனிதஉரிமை ஆணையர் அல் ஹூசேன். அதுவும், ரோஹிங்யா முஸ்லிம்கள் என்ற மிக எளிமையான அந்த இன மக்களின் பரிதாபத்திற்குரிய நிலையைப் பார்த்த பிறகும், இத்தகைய சட்ட நியாயங்கள் பேசுவதை யாரால் தான் சரியென்று ஏற்க முடியும்?
ஐநா மனித உரிமை அமைப்பு சொல்லித்தான் மைய அரசின் மதவாதப் போக்கும், அதன் உன்மத்தமும் நமக்கு உறைக்கிறது என்பதில்லை. சர்வதேச அரங்கில் சமாதானத்தின் அடையாளமாக பார்க்கப்பட்ட இந்தியாவின் கொள்வதற்கான வாய்ப்பாகவே இதைப் பார்க்க வேண்டி இருக்கிறது.
மதம், பண்பாடு, மொழி என அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக அரசின் மூர்க்கத்தனமான போக்குக்கு எதிராக சர்வதேச அளவில் எழுந்துள்ள முதல் கண்டனக் குரல் என்ற வகையில், ஐநா மனித உரிமை ஆணையரின் இந்த அறிக்கை மிக முக்கியமானது.
Mena Ulaganathan Writes About UN Statement On India’s intolerance
____________________________________________________________________________