மெர்குரி : திரை விமர்சனம்..

மெர்குரி : திரை விமர்சனம்..


மிகுந்த எதிர்பார்ப்புக்கு நடுவில் முதல் படமாக கார்த்திக் சுப்புராஜின் மெர்குரி வெளியாகியிருக்கிறது.

பிட்ஸா, ஜிகர்தண்டா, இறைவி என சில கமர்சியல் படங்களால் பெயர் பெற்ற இவரின் மெர்குரி மீண்டும் அதே இடத்தை தக்கவைக்குமா? எதை வெளிச்சமிடுகிறது இந்த மெர்குரி என பார்க்கலாம்.

கதைக்களம்
பிரபு தேவா ஒரு கிடார் இசை கலைஞர். மலைக்காட்டில் அவர் தன் மனைவி ரம்யா நம்பீசனுடன் வாழ்கிறார். ஒருநாள் வெளியே சென்ற இவர் வீடு திரும்பவே இல்லை. கண்பார்வையற்ற கணவருக்கு என்ன நடந்தது என தெரியாமல் அதே சிந்தனையில் வாழ்கிறார் ரம்யா.

மேயாத மான் இந்துஜாவுக்கு தீபன், ஷசாங்க், அனீஷ், கஜராஜ் என 4 நண்பர்கள். ஒன்றாக ஒரு தனி வீட்டில் மலைப்பகுதியில் வாழும் இவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

ஒருநாள் அனைவரும் காரில் வெளியே செல்லும் போது எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சிக்குகிறார்கள். வழியே ஒரு சடலம் கிடக்கிறது. என்ன நடந்தது என இவர்களுக்கே தெரியவில்லை.

பயந்து போய் அந்த சடலத்தை மறைவான இடத்தில் புதைக்க நினைக்கிறார்கள். மீண்டும் வீடு திரும்பும் போது ஏதோ தவறவிட்ட பொருளை தேடி கண்டுபிடிக்க மீண்டும் அதே இடத்திற்கு செல்கிறார்கள்.

பொருள் கிடைத்தது. ஆனால் புதைத்த சடலத்தை காணவில்லை. காரில் தனியே உட்கார்ந்திருந்த இந்துஜாவையும் காணவில்லை. அவளை தேடி ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத ஃபேக்டரிக்கு அந்த 4 நண்பர்களும் செல்கிறார்கள்.

அங்கு எதிர்பாராத வகையில் மிகவும் அதிரவைக்கும் அமானுஷ்யத்தை அவர்கள் காண்கிறார்கள். ஆனால் அந்த இடத்தில் அவர்கள் அனைவரும் ஒவ்வொரு ஆளாக மர்மான முறையில் இறந்து கிடக்கிறார்கள்.

கடைசியில் இவர்களை தேடி உள்ளே வந்த இந்துவும் அதே ஆபத்தில் சிக்குகிறார்? உயிர் பிழைத்தாரா இவர்? எப்படி அந்த 4 பேரும் இறந்தார்கள் எப்படி இறந்தார்கள்? கொன்றது யார், ஏன்? இதுவே கதையின் மீதி..

படத்தை பற்றிய அலசல்
பிரபு தேவா கதையில் முக்கிய ஒரு நபர். இவரை வைத்து இக்கதையே இருக்கிறது என்று சொல்லலாம். எப்போதுமே தனக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் திறமையை காட்டும் இவர் இங்கேயும் அதை தவறவிடவில்லை. நன்றாக இருந்த இவர் எப்படி கண்பார்வை இழந்தார் என்பதற்கே ஒரு பின்னணி இருக்கிறது.

ரம்யா நம்பீசன்க்கு ஒரு கேமியோ ரோல் மட்டுமே. படம் முழுக்க அனைவருமே பேசாமல் தான் இருப்பார்கள். இதனால் இவருக்கான முக்கியதுவமும் குறைவு. நேரமும் மிக மிகக்குறைவு.

மேயாதமான் படத்தில் செம குத்தாட்டம் போட்ட இந்துவுக்கு இந்த படத்தில் சாஃப்ட் ஆன ரோல் தான். பேசாமலேயே தன் உணர்வுகளை உடல் மொழி அசைவுகளால் ஜாடை செய்கிறார்.

தீபன், ஷசாங்க், அனீஷ், கஜராஜ் என நண்பர்கள் நால்வரும் வாய் பேசாது இருந்தாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கேரக்டர் இருக்கிறது. ஆனால் தைரியமாக ஆபத்தை கையாள்கிறார்கள்.

படத்தின் டையலாக்குகள் எதுவும் இல்லை. ஆனால் படம் முழுக்க பின்னணி இசையே, மெர்குரியை பளிச்சென வெளிச்சம் மிடவைக்கிறது. முழு கதையும் ஃபேக்டரிக்குள் முடிந்து விடுகிறது.

ஆனாலும் கடைசி நேரத்தில் உலகில் பல இடங்களை மக்களை உலுக்கி எடுத்த முக்கிய சம்பவத்தை இயக்குனர் பதிவு செய்கிறார். தொடரும் ஆபத்துகளுக்கிடையில் இன்னும் எத்தனையை நாம் சந்திக்கப்போகிறோமோ?

பிளஸ்
டயலாக்குகளே இல்லாமல் படம் பார்க்கும் போது சினிமாவின் தொடக்கம் போல இனம் புரியாத ஃபீல்.

பேச நினைப்பதை பொறுமையாக ஆக்‌ஷன் மூலம் காட்டி கதையோடு அனைவரும் கலந்தது சிறப்பு.

பிரபு தேவா ம்ம்ம்.. படத்தில் சீரியஸான சென்சேஷன்..

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம்..

மைனஸ்
ஆழமான கதைகளைகொடுக்கும் இயக்குனர் கார்த்திக்கின் படங்களில் இது மிகவும் சிம்பிள்..

ஒரு சில இடங்களில் ஆங்கில படம் பார்த்ததுபோல ஃபிளாஷ் அடித்தது.

மொத்தத்தில் மெர்குரி பேசாமல் பேசவைக்கும் படம். வித்திசாயமான முயற்சி என்றாலும் கார்த்திக் ரசிகர்களின் முழுமையான எதிர்பார்ப்பை இன்னும் பூர்த்தி செய்திருக்கலாம்.