மெரினா எழுச்சி – அரசியல் துறவு பயன் தருமா? : செம்பரிதி

merina-protest-chemparithi-article

_________________________________________________________________

 

ஜனவரி 24ம் தேதி இரவு.

 

கடந்த சில நாட்களாக கடல் அலைகளுக்கு போட்டியாக ஆர்ப்பரித்து எழுந்து நின்ற இளைஞர் பெருந்திரளின் சிறு துளியாக இருள் கவிந்த மெரினாவில் சிலர் மட்டும்…

போர் ஓய்ந்த பின்னரும் களத்தில் இருந்து வெளியேற விரும்பாத சில வீரர்களைப் போல… முகத்திலும், அகத்திலும் வெறுமை ததும்ப அங்கிருந்து அகன்றனர்.

 

Chennai: Youngsters and students participate in a protest to lift the ban on Jallikattu and impose ban on PETA, at Kamarajar Salai, Marina Beach in Chennai on Thursday. PTI Photo by R Senthil Kumar (PTI1_19_2017_000257B)ரேட்டிங்கிற்கான வாய்ப்பு இனி இல்லை என்பதாலோ, என்னவோ அதற்கு முன்னர் மெரினாவில் திரண்டிருந்த ஊடகப்படையும் அங்கிருந்து காணாமல் போயிருந்தது. ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததற்கான ஆணையைக் காட்டினால் மட்டுமே கலைந்து செல்வோம் என்பது அவர்களது கடைசிக் கட்டக் கோரிக்கையாக இருந்தது. இறுதியாக காவல்துறை உயரதிகாரி (மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன்) கூறிய சமாதானத்தை ஏற்று அங்கிருந்து கலைந்தனர். 8 நாட்களுக்கு முன்னர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தொடங்கிய போராட்டம், அப்போதுதான் முடிவுக்கு வந்ததாக சில நாளேடுகள் மட்டும் செய்தி வெளியிட்டிருந்தன. கடைசி,, கடைசியாக கூடி நின்றவர்கள் அப்துல் கலாமின் படத்தை பதாகையாக உயர்த்திப் பிடித்திருந்ததை நாளேடுகளில் வெளியான செய்தியில் பார்க்க முடிந்தது.

 

கடைசியாக கலைந்து செல்ல இரண்டு மணி நேரம் அவகாசம் கோரிய குற்றத்திற்காக, அதுவரை ‘நண்பர்களாக’ நின்றிருந்த காவல்துறையினர், திடீரென கொடும் பகைவர்களாக மாறித் தாக்குதல் நடத்திய குரூரத்தின் நிழல் அவர்களது முகங்களில் அழுத்தமாகவே படிந்திருந்தது. அவர்களது முகங்களில் படிந்திருந்த கலக்கத்தின் நிழல் எப்போது அகலும் என்று தெரியாது. காவல்துறை மீது படிந்துள்ள களங்கத்தின் நிழலும்தான். அறவழியில் போராடிய இளைஞர்களை, அதற்கு நேரெதிராகச் சித்தரிப்பதற்காக காவல்துறையே களமிறங்கி நடத்திய நாடகங்கள் அனைத்தும், ஊடகங்களைவிட சமூக ஊடகங்களில் அதிகமாக அம்பலப்பட்டுவிட்டன. காவல்துறையின் அத்தகைய நடவடிக்கை குறித்து, அதிர்ச்சியோ, ஆதங்கமோ அடையத் தேவையில்லை. காலனி ஆதிக்க காலத்தில் இருந்தே, இந்திய அரசாட்சி அமைப்பில், காவல்துறை இப்படித்தான் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அதிகார மையத்தின்  ஆயுதமாக பயன்படும் காவல்துறை நீதிகோரி போராடும் எளிய மக்கள் பக்கம் நிற்கும் என நம்புவது நமது பேதைமையே! காவல்துறையிடம் மக்கள் கருணையை எதிர்பார்ப்பதற்கும், கசாப்புக் கடைக்காரரிடம் ஆடுகள் கருணையை எதிர்பார்ப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை.

 

இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பின்னர், தமிழகத்தில் ஏற்பட்ட பெரும் எழுச்சி இதுதான் என ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்து கூறப்படுகிறது. இது  பேரெழுச்சி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்தி எதிர்ப்புப் போராட்டத்துடன் இதனை ஒப்பிடுவது சரிதானா?

 

இந்தி எதிர்ப்புப் போராட்டம், தெளிவான அரசியல் முழக்கத்துடனும், கூர்மையான தன்னினப் பார்வையுடனும் முன்னெடுக்கப்பட்டதாகும். அதனை நெறிப்படுத்தி, அரசியலாக்குவதற்கு அண்ணாவைப் போன்ற ஆழ்ந்தகன்ற அறிவுசால் அரசியல் தலைவர்களும் இருந்தனர். அதே நேரத்தில், அரசு அதிகாரம் முற்றிலும் எதிராக நின்று போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது பெரும் போரையே தொடுத்தது. துப்பாக்கிச் சூடு, உயிர்ப்பலி என ரத்தக்கறை படிந்த வரலாறு அது. ஆம். திராவிட இயக்கம் முன்னெடுத்த பிரம்மாண்டமான தேசிய இனப் போராட்டம்தான் இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பதில் அய்யமில்லை.

 

ஆனால், ஜல்லிக்கட்டு என்ற ஏறுதழுவலுக்கான இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர் திரள், கருத்து ரீதியாக ஒருமைப்பட்ட கூட்டமல்ல. வெவ்வேறு கருத்துள்ளவர்கள், வேறுபட்ட அரசியலைக் கொண்டவர்கள், அரசியலே வேண்டாம் என்று சொல்வோர் என பல தளங்களைச் சேர்ந்தவர்களும் இதில் ஒன்றாகச் சேர்ந்திருந்தனர். ஓர்மையான அரசியல் தலைமை என்று எதுவும் இல்லை. அது தேவையில்லை என்றும் இளைஞர்கள் கூறிவிட்டனர். இது ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டுமன்று, தமிழர்களின் உரிமைக்கான, பண்பாட்டு அடையாளத்துக்கான போராட்டம் என பலராலும் கொண்டாடப்பட்டது. காவல்துறையைச் சேர்ந்த சிலரும் சேர்ந்து கண்ணீர் மல்கிய காட்சிகளையும் பார்க்க முடிந்தது. (தடியடியின் போது அத்தகைய காவலர்கள் என்ன செய்திருப்பார்கள்?) ஏறத்தாழ 5 நாட்கள் ஏகோபித்த ஆதரவுடன், மெரினாவில் ஒரு கொண்டாட்டத்தைப் போல அது நடந்து கொண்டிருந்தது. அவசரச்சட்டம் பிறப்பிப்பதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன. மெல்ல, மெல்ல ‘காவல் நண்பர்களின்’ முகம் இறுகியது. 7ஆம் நாள் பேரவைச் சிறப்புக் கூட்டத்தில் சட்டமியற்றப்பட இருந்த நிலையில்தான், மெரினா போராட்டக்காரர்கள் மீது, அந்தத்தாக்குதல் தொடுக்கப்பட்டது.

 

போராட்டத்தின் கடைசி இரண்டு நாட்களில் அரங்கேறிய காட்சிகள்தான், சில அழுத்தமான அரசியல் உண்மைகளை உணர்த்தியது.

 

குறிப்பாக ஹிப்பாப் தமிழா ஆதி . போராட்டக் களத்தில் அதுவரை தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்ட இந்த ‘அரசியலற்ற’ இளைஞர், திடீரென கூட்டத்தில் சமூக விரோத சக்திகள் புகுந்துவிட்டதாக ஆவேசம் கொண்டார். ஊடகங்கள் அவரைத் துரத்தின. அவரும் போராட்டத்திற்காக தாம் செய்த பல தியாகங்களையும், கடைசியில் தேச விரோதிகள் சிலர் உள்ளே புகுந்த ‘வேதனை’களையும் மணிக்கணக்காக கொட்டித் தீர்த்தார். முதலில் ஆதியைக் கொண்டாடிய இளைஞர்கள், அவரது இந்த திடீர் பல்டியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அடுத்ததாக தங்கள் மீது தொடுக்கப்பட இருக்கும் தாக்குதலுக்கான எச்சரிக்கை மணிதான் ஹிப்பாப் தமிழா ஆதியின் ‘உல்டா ஆவேசம்’ என்பதை தமிழ் இளைஞர்கள் உணரத் தவறிவிட்டார்கள். மற்றொருவர் லாரன்ஸ். போராட்டக்காரர்களுக்கு உதவியதாகவும், அவர்களுடனேயே இருந்ததாலும் திரையுலகைச் சேர்ந்த லாரன்சை இளைஞர்கள் ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. இவர்கள் இருவருமே கடைசி இரண்டு நாட்கள் கூடியிருந்தவர்களைச் சமூக விரோதிகள் எனச் சித்தரிப்பதிலேயே கவனமாக இருந்தனர்.

 

முதல் வெற்றியைப் பெற்றுவிட்ட பெருமிதத்துடன் போராட்டத்தை ஒரு புள்ளியில் முடித்துக் கொள்ளலாம் என அரசியல் அனுபவம் மிக்க சிலர் கூறிய அறிவுரைகளை, அவர்கள்  அரசியல் அறிவு உள்ளவர்கள் என்பதாலேயே இளைஞர்கள் கண்டுகொள்ளவில்லை. விளைவுகளின் விபரீதம் தான் போராட்டத்தின் இறுதி நாட்களில் அரங்கேறிய அனைத்துக் காட்சிகளும்.

 

அப்படியானால், போராட்டத்தை அரசியல் இலக்கற்று எடுத்துச் சென்ற இளைஞர்ளின் அறியாமைதான் இதற்கெல்லாம் காரணமா?

 

நிச்சயமாக இல்லை. இத்தனை பெரிய எழுச்சியின் போது களத்தை இழந்து நின்ற அரசியல் கட்சிகள்தான் முக்கியப்பொறுப்பாளிகள். அரசியல் உனக்குத் தேவையில்லை, அரசியல் பேசாதீர் என வீடுகளிலும், முக்குக்கு முக்கும் எச்சரித்த புத்தி(இல்லாத)ஜீவிகளும் இதற்கு மற்றொரு காரணம்.

 

தமிழக அரசியலில் தமிழ், தமிழர் உரிமை என்ற முழக்கங்களுக்கும், உணர்வுக்கும் வித்திட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தால் இளைஞர்களை நெருங்க முடியாமல் போனதற்கு, திராவிட முன்னேற்றக் கழகமேதான் பொறுப்பு. ஒருகாலத்தில் இளைஞர்களாலும், மாணவர்களாலும் உருவாக்கப்பட்டு, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திமுக, தற்போது இளையதலைமுறையிடமிருந்து வெகு தூரத்தில் விலகி நிற்கிறது. கடந்த சிலபத்து ஆண்டுகளாக சாதி, மத உணர்வுகளால் உட்செரிக்கப்பட்ட இளைஞர் கூட்டத்தை மீட்டெடுக்க, தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு திமுக எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை.

 

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலேயே அரசியல் அறங்கள் குறித்து கவலை கொள்ளாத அதிமுகவுக்கு இனியா அத்தகைய அக்கறையெல்லாம் ஏற்பட்டு விடப் போகிறது. அது வீண் பேச்சு.

 

இடதுசாரிகளும், இன்ன பிற இயக்கங்களும் தாங்கள் இருக்கிறோம் என்பதை உணர்த்தவே பெரும்பாடு பட்டுக் கொண்டிருக்கின்றன.

 

இப்படி ஒரு அரசியல் வெறுமை நிரம்பிய நிலையில்தான், இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா மறைவால் அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டு விட்டதாக பலரும் புலம்பினார்கள். ஆட்களின் மரணத்தால் ஏற்படும் வெற்றிடம் வேறு… அரசியல் வெற்றிடம் வேறு. இப்போது ஏற்பட்டிருப்பது அரசியல் வெற்றிடம். இதை தமிழகத்தில் எம்.ஜி.ஆரே தொடங்கி வைத்துவிட்டார். கருத்துகளையும், தத்துவங்களையும் முன்வைத்து அரசியல் களமாடும் அறிவார்ந்த தலைவர்கள் இளையதலைமுறையினர் மத்தியில் உருவாகவே இல்லை. அதை உருவாக்க அரசியல் தலைவர்கள் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவும் வில்லை. அதன் விளைவுதான் லட்சக் கணக்கான இளைஞர்கள் மோடியை ட்விட்டரில், ஃபேஸ்புக்கில் பின்பற்றி பிரதமராக்கியதும், அப்துல் கலாம், சகாயம் போன்ற சமூக, அரசியலுக்கு சற்றும் தொடர்பில்லாத முகங்களை இளைஞர்கள் கொண்டாடிக் குப்புற விழுவதுமாகும். அரசியல் அகற்றம் செய்யப்பட்ட சமூகத்தின் பிறழ்வு நிலை வெளிப்பாடு எனவும் இந்த எழுச்சியைப் பார்க்கலாம்.

 

எனவே, இளைஞர்களின் தன்னெழுச்சியைப் பாராட்டுவதோடு தம்முடைய கடமை முடிந்துவிட்டதாக, அரசியல், சமூக சிந்தனையாளர்கள் அமைதியாகி விடக் கூடாது. அவர்களுடன் விவாதித்து, அரசியல் சிந்தனைகளைத் துளிர்க்கச் செய்து, உண்மையான அரசியலின் பக்கம் அவர்களது கவனத்தைத் திருப்ப வேண்டும். கண்மூடித் தனமான அரசியல் துறவால், நிலவும் அமைப்பில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்ற அழுத்தமான உண்மையை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாத, அரசியல் தீர்க்கத்தைப் பெறாத ஒரு சமூகம், தன்னுரிமைகள் அனைத்தையும் தானாகவே இழந்துவிடும் என்பதுதான் கசப்பான உண்மை.

 

__________________________________________________________________