தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப் படவில்லை: தர்மேந்திர பிரதான் விளக்கம்..


தமிழகத்தில் மீத்தேன்,ஹைட்ரோ கார்பன் மற்றும் ஷேல் காஸ் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் போராட்டங்கள் நடத்தினர்.

இதுபோலவே, கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய் குழாய் பதிக்கும் பணி நடந்தபோது, தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அந்த திட்டத்துக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்தன. இதனால், மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகின்றன.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக எழுப்பட்ட கேள்விக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:

‘‘தமிழகத்தின் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் மற்றும் ஷேல் காஸ் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. எந்த திட்டமும் தமிழக அரசு மற்றும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற பிறகே நடைமுறைப்படுத்தப்படும். கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி திட்டங்களால் சுற்றுச்சூழல் மாசு எதுவும் ஏற்படவில்லை. அங்கு புதிய திட்டம் எதுவும் தொடங்கப்படவில்லை. நாடுமுழுவதும் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி மட்டுமே வழங்கப்பட்டது. ஒப்புதலுக்கு பிறகே அந்த திட்டங்கள் செயல்பாட்டிற்கு வரும்’’ எனக்கூறினார்.