மெட்ரோ ரெயில் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்..

சென்னையில் மெட்ரோ ரெயில் நிர்வாகத்துக்கு எதிராக செயல்பட்டதாக 7 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த டிசம்பர் மாதம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கு ஊழியர்கள் அளித்த விளக்கத்தை மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து 7 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அவர்கள் நிர்வாக இயக்குனரை சந்தித்து முறையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாக இயக்குனரை சந்தித்து ஊழியர்கள் முறையிடவில்லை.

இதற்கிடையே, மெட்ரோ ரெயில் நிர்வாக ஊழியர்கள் நேற்று கோயம்பேட்டில் உள்ள தலைமை நிர்வாக அலுவலகம் வந்தனர். அங்கு அலுவலகத்துக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று மேலும் 3 ஊழியர்களை இடைநீக்கம் செய்வதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்ததால் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நீடிக்கும் என அஞ்சப்பட்டது.

இந்நிலையில், தொழிலாளர் நல ஆணையர், மெட்ரோ ரெயில் நிர்வாகத்தினர் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பலன் ஏற்பட்டது. மெட்ரோ ரெயில் ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்றிரவு வாபஸ் பெறப்பட்டது.