மெட்ரோ ரயில் சேவை நாளை தொடக்கம் : வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் : முதல் நாள் இலவசம்..

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் முழுமையாக நிறைவு பெற்றது. இதுவரை டிஎம்எஸ் முதல் விமான நிலையம் வரை இருந்த சேவை

தற்போது வண்ணாரப்பேட்டையிலிருந்து டிஎம்எஸ் வரையிலான பணிகளும் நிறைவுபெற்றதால் நாளை பொதுமக்கள் சேவைக்காக தொடங்க உள்ளது. முதல் நாள் அனைவரும் இலவசமாகப் பயணம் செய்யலாம்.

சென்னை போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பொதுமக்களின் போக்குவரத்துப் பயன்பாட்டிற்காக மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்க திட்ட அறிக்கை 2007-08-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.

இதில் உள்ள ஸ்டேஷன்கள் விவரம்:

வண்ணாரப்பேட்டை – மண்ணடி – சென்னை கோட்டை – சென்னை சென்ட்ரல் – அரசு வளாகம் –

எல்.ஐ.சி – ஆயிரம் விளக்கு – அண்ணா மேம்பாலம் – தேனாம்பேட்டை – நந்தனம் – சைதாப்பேட்டை – கிண்டி – ஆலந்தூர் – மீனம்பாக்கம் – சென்னை பன்னாட்டு விமான நிலையம்.

இரண்டாவது தொகுப்பு சென்னை சென்ட்ரலிலிருந்து கோயம்பேடு வழியாக பரங்கிமலையில் முடிகிறது. இதன் மொத்த நீளம்: 21.961 கி.மீ. (இதில் 9.7 கி.மீ. தரைக்கடியில் செல்கிறது)

இதில் உள்ள ஸ்டேஷன்கள் விவரம்:

சென்னை சென்ட்ரல் – சென்னை எழும்பூர் – வேப்பேரி – ஷெனாய் நகர் – அண்ணா நகர் – திருமங்கலம் – அரும்பாக்கம் –

சென்னை புறநகர் பேருந்து நிலையம் – வடபழனி – அசோக் நகர் – ஈக்காட்டுத்தாங்கல் – ஆலந்தூர் – பரங்கி மலை.

இந்நிலையில் டிஎம்எஸ் முதல் விமான நிலையம்வரை பணிகள் முடிந்து ஏற்கெனவே இயங்கி வருகிறது.

அதேபோன்று வேப்பேரி முதல் பரங்கிமலை வரை பணிகள் முடிந்து மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது. இந்நிலையில் மீதமுள்ள 10 கி.மீ. பணியும் நிறைவு பெற்றது.

இதையடுத்து வண்ணாரப்பேட்டையிலிருந்து விமான நிலையம் வரை பயணம் செய்யலாம். அனைத்து வழித்தடங்களும் தயாரான நிலையில்

இதற்கான சேவையை திருப்பூர் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து காணொலிக் காட்சிமூலம் நாளை மாலை 3.15 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இதையொட்டி நாளை பயணிகள் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று கட்டணம் அதிகம் என்று பொதுமக்கள் கூறியதால் மொத்தக்கட்டணம் 70 ரூபாயிலிருந்து ரூ.10 குறைத்து ரூ.60 ஆக வசூலிக்கப்பட உள்ளது.