எம்ஜிஆரைப் போலவே இருக்கும் இவர் யார் தெரிகிறதா? : மனோலயன்

MGR’s Role Model Errol Flynn

_______________________________________________________________________________

 

errol flynn1எம்ஜிஆர் என்ற ஆளுமையின் சுவாரஸ்யம் தமிழ்ச் சூழலில் இன்னும் குறைந்து விடவில்லை. அது தீராத நதியாக அவ்வப்போது புதுப்புது வண்ணம் கொண்டு, தமிழ் மனப்பரப்பில் நுங்கும் நுரையுமாக கொப்பளித்து பெருக்கெடுத்தபடியேதான் இருக்கிறது.

 

mgr flynnஎம்ஜிஆர் மரணமடைந்த தருணத்தில் அவரது வாழ்க்கை பற்றிய தகவல்கள், ஒரு மாயாவி பற்றிய கதைகளைப் போல எங்கும் பேசப்பட்டது. தகவல்கள் கருத்துகளாகவும், கருத்துகள் கதைகளாகவும் மாறி மாறி உருக்கொண்டு, தமிழ்ச் சமூகத்தின் உளவியலை ஆட்டிப்படைத்தன. எம்ஜிஆர் கதை என்ற பெயரில் புத்தகம் கூட வந்ததாக நினைவு. பத்திரிகை உலகில் இருந்த அவரது விசுவாசிகளும், ரசிகர்களும் பேசப்பட்ட தகவல்கள் அனைத்தையும் புத்தகங்களாக்கினர். இரண்டு மூன்று திரைப்படங்கள் கூட எம்ஜிஆரின் மரணத்திற்குப் பிறகு, அவரது வாழ்க்கையைச் சித்தரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு வெளி வந்தன. இவை அனைத்திலும், எம்ஜிஆரது பூர்வீகம், இளமைக்காலம், திரையுலக வாழ்க்கை, அரசியல் பிரவேசம் என பேசப்பட்ட பொருள்களே திரும்பத் திரும்பப் பேசப்பட்டன. இருந்தாலும், அவரது ரசிகர்கள் சலிப்பின்றி அவற்றைப் படித்தும், பார்த்தும், எம்ஜிஆரின் நினைவுகளைத் தோண்டி எடுத்து நுகர்ந்தபடியே லாகிரியில் திளைத்தனர். இத்தனை கதாகாலட்சேப களேபரத்திற்கு இடையே, எம்ஜிஆருக்கும் ரோல் மாடலாக ஒருவர் இருந்தார் என்பதை மட்டும் யாரும் அதிகமாக பேசவில்லை. எம்ஜிஆர் மரணமடைந்த நேரத்தில் வெளியான புத்தகம் ஒன்றில் ஹாலிவுட் கதாநாயகனான “ஏரோல் ஃப்ளின்’ (Errol Flynn) னைத்தான் எம்ஜிஆர் தனது ரோல் மாடலாக வரித்துக் கொண்டிருந்தார் என, திரையுலக பிரபலம் ஒருவர் கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

 

errol flynn2எம்ஜிஆரின் பெரும் செல்வாக்குக்கு முக்கியமான காரணம், அவரது தோற்றம்தான். எம்ஜிஆர் இயல்பிலேயே சிவந்த நிறம் என்பதையும் தாண்டி பளிச்சிடும் சருமத்தைக் கொண்டவர். ரோஸ் வண்ணம் என்று அவரது தோலின் நிறத்தை வர்ணிப்பார்கள். ஆனால்… எம்ஜிஆரின் தோற்றப் பொலிவு என்பது அது மட்டுமே அல்ல. இயல்பு வாழ்க்கையில் ஒரு காலக்கட்டம் வரை அவர் பாகவதர் கிராப் வைத்திருந்தார். வழுக்கை அதிகமான போது காஷ்மீர் குல்லாயும், பின்னர் கருப்புக் கண்ணாடியும் அணியத் தொடங்கினார். இவற்றையெல்லாம் விட திரைப்படங்களில் அவர் தன்னை வடிவமைத்துக் கொண்ட விதம்தான், மக்களின் மனதில் அவரைப் பற்றிய சித்திரமாக இன்றுவரை பதிந்து விட்டது. அதில் mgr anniv 4முக்கியமானது அவரது அரும்பு மீசை. பெரும்பாலும் இது வரையப்பட்டதுதான் என்றாலும், ஒட்டு மீசையாகக் கூட அவர் பெரிய மீசையை வைத்துக் கொண்டதில்லை. அவரது சிகையலங்காரம் சீசன்களுக்கு தகுந்தாற் அவ்வப்போது மாற்றம் கொண்டாலும், மீசை மட்டும் அதே வரையப்பட்ட அரும்பு மீசைதான். பல்லாண்டு வாழ்க, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் போன்ற சில பிற்காலப்படங்களில் மட்டும், லேசாக திருகிவிட்டதைப் போல வரைந்திருப்பார். மாறுவேடங்களில் வருவதாக அமைக்கப்பட காட்சிகளில் மட்டும், முரட்டு மீசை, வித்தியாசமான தாடி, கருப்பு மச்சம் என தோற்றத்தில் சில வித்தியாசங்களைக் காட்டுவார்.errol flynn3

 

அதே போல, நிற்பது, நடப்பது, வாள் சுழற்றுவது என எல்லாவற்றிலும் தனக்கென தனி பாணியை வகுத்துக் கொண்டு, அதில் வெற்றியும் பெற்றார். இவை அனைத்தையுமே அப்போதைய ஆலிவுட் நாயகனான எரோல் ஃப்ளின்னைப் பார்த்துத்தான் இமிட்டேட் செய்திருக்கிறார் என்பது, எம்ஜிஆரை நெருக்கமாக அறிந்த சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருந்திருக்கிறது. குறிப்பாக வாள் சுழற்றுவதில் வல்லவரான எம்ஜிஆர், அதற்கான ஸ்டெப்பிங் ஸ்டைல், சுழற்றும் லாவகம், புன்னகை மாறாத முகத்துடனேயே எதிரியுடன் மோதுவது போன்ற தனித்துவங்களை, எரோல் ஃப்ளின்னைப் பார்த்தே வடிவமைத்துக் கொண்டிருக்கிறார். எரோல் ஃப்ளினின் புகைப்படங்கள், பழைய படங்கள் ஆகியவற்றைப் பார்க்கும் போது இதைப் புரிந்து கொள்ள முடிகிறது. காதல் காட்சி, அரசவையின் நடுவே ஆவேசமாக பேசுதல், என அனைத்திலும் எம்ஜிஆரின் உடல் மொழியை, எரோல் ஃப்ளினிடம் அப்படியே பார்க்க முடிகிறது. எரோல் ஃப்ளினை, எம்ஜிஆர் அணுஅணுவாக ரசித்திருக்கிறார் என்பதையும் நாம் அனுமானிக்க முடிகிறது. தமிழக மக்களின் மன உலகை, அழியாத சித்திரமாய் இன்றுவரை ஆக்கிரமித்திருக்கும் எம்ஜிஆருக்கே மாதிரியாக இருந்த எரோல் ஃப்ளின் என்ற அந்த மாபெரும் கலைஞனைப் பற்றி அறிந்து கொள்ள எவருக்கும் ஆவல் ஏற்படுவது இயல்புதானே!Errol flynn4

 

சரி… யார் இந்த எரோல் ஃப்ளின்?

 

எம்ஜிஆரின் வாழ்க்கையைப் போலவே, ஏரோல் ஃப்ளினின் வாழ்க்கையும், சுவாரஸ்யமான தகவல்களும் திருப்பங்களும் கொண்டதாகவே இருக்கிறது.

 

1909-ஆம் ஆண்டு, ஜூன் மாதம்-20 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் தாஸ்மேனியா பகுதியில் உள்ள ஹோபோர்ட் நகரில்தான் எரோல் ஃப்ளின் பிறந்துள்ளார். அவரது தந்தை, தியோடர் தாம்ஸன் ஃப்ளின், பெல்ஃபாஸ்ட்டில் இருந்த குயீன்ஸ் கல்லூரியிலும், பின்னர் தாஸ்மேனியா பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராக பணியாற்றி உள்ளார். ஆனால், எரோல் ஃப்ளினின் வாழ்க்கை அத்தனை சீரான நீரோட்டமாக அமையவில்லை. லண்டனில் உள்ள பள்ளியில் படித்த ப்ளின், ஆஸ்திரேலியாவில் ஷோர் ஸ்கூலில் படிப்பைத் தொடர்கிறார். அந்தப் பள்ளியில் இருந்து திருட்டுக் குற்றத்திற்காக வெளியேற்றப்படும் ஃப்ளின், அதன் பின் படிப்பைத் தொடரவில்லை. சிட்னியிலும், பப்புவா நியூ குனியாவிலும் இருந்த கப்பல் நிறுவனங்களில் பணியாற்றி வந்துள்ளார். பணத்தைக் கையாடியதாக அங்கிருந்தும் வேலையை விட்டு நீக்கப்படும் ஃப்ளின், பல்வேறு errol6வகையில் அலைக்கழிகிறார். எரோல் ஃப்ளினின் தந்தை இயல்பாகவே கடல்சார் ஆய்வாளர் என்பதால், ஃப்ளின்னுக்கும் அந்த ஈடுபாடு இருந்திருக்கிறது. பின்னாளில் தன் வாழ்க்கையைப் பற்றி எழுதிய புத்தகங்களில், தனது தாயின் குடும்பத்தைப் பற்றி “கடலோடிகள்” என ஃப்ளின் குறிப்பிட்டுள்ளார். இதனால், அடிக்கடி படகுகள் மூலம் கடலுக்கு செல்லும் பழக்கம் ஃப்ளின்னுக்கும் இருந்திருக்கிறது. அப்படி சென்ற போது ஏற்பட்ட ஒரு படகுவிபத்தைப் பற்றி வெளியான செய்தியில் எரோல் ஃப்ளினின் படமும் இடம்பெற்றிருந்திருக்கிறது. 17 ஆம் நூற்ராண்டில் பவுன்டி என்ற பிரம்மாண்ட கப்பலில் ஏற்பட்ட கலகத்தை அடிப்படையாக வைத்து, தி வேக் ஆப் தி பவுன்டி (The wake of the Bounty) என்ற படத்தை இயக்க திட்டமிட்டுக் கொண்டிருந்த ஆலிவுட் இயக்குநர் சார்லஸ் சாவெல் கண்ணில், பத்திரிகையில் வெளியான எரோல் ஃப்ளின்னின் இந்தப் படம் பட்டிருக்கிறது. 1933ல் வெளியான தி வேக் ஆப் த பவுன்டி படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு ஃப்ளினுக்குக் கிடைக்கிறது. இதுதான் ஃப்ளினின் வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், ஆலிவுட்டில் கால்பதித்து கவனத்தைப் பெற, எரோல் ஃப்ளினுக்கு இந்தப் படம் உதவுகிறது.errol8

 

errol7பின்னர் நார்தாம்டன் நிறுவனத்தின் நாடகங்களில் தொடர்ந்து நடிக்க ஃப்ளின்னுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது. 1934 ஆம் ஆண்டு, நிறுவனத்தின் பெண் காரியதரிசி ஒருவரை, மேடையில் இருந்து தூக்கி வீசிய ஃப்ளின், அந்நிறுவனத்தில் இருந்தும் நீக்கப்படுகிறார். எனினும், நார்தாம்டன் நிறுவனத்தில் தான், எரோல் ஃப்ளின்னுக்கு, தன்னை ஒரு முழு நடிகனாக வடிவமைத்துக் கொள்வதற்கான வாய்ப்பும், பயிற்சியும் கிடைக்கிறது. பின்னாளில் எரோல் ஃப்ளின் பிலிம் ஹவுஸ் என, தங்களுடைய ஸ்டுடியோவின் ஒரு பகுதிக்கு நார்தாம்டன் நிறுவனம் பெயர் சூட்டுமளவுக்கு, அந்த உறவு நினைவு கூரப்படுகிறது.

 

errol9ஒரு வழியாக 1935ஆம் ஆண்டு வெளியான தி கேஸ் ஆப் த ப்ரைடு (The case of the Curious Bride) என்ற படத்தில் ஒரு சிறு பாத்திரம் கிடைக்கிறது. ஏறத்தாழ எம்ஜிஆரும் இதே காலக்கட்டத்தில் தான், தமிழ்த் திரையுலகில் போராடி நுழைகிறார். 1936ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்ற படத்தில் ஒரு இன்ஸ்பெக்டர் வேடத்தின் மூலமாகத்தானே எம்ஜிஆர் தன் திரை வாழ்வைத் தொடங்கினார். அவரது மானசீக குருவான எரோல் ஃப்ளினும் அதே காலக்கட்டத்தில் தான் தனது திரையுலகின் முக்கியப் பிரவேசத்தை தொடங்கி இருக்கிறார்.

 

1935ஆம் ஆண்டு, வார்னர்ஸ் பிரதர்ஸ் தயாரித்த கேப்டன் ப்ளட் என்ற படத்திற்கு பின்னர், எரோல் errol7ஃப்ளின் ஆலிவுட்டின் அட்வெஞ்சர் நாயகனாக உருவெடுத்தார். 1938 ஆம் ஆண்டு வெளியான தி அட்வெஞ்சர்ஸ் ஆப் ராபின் ஹூட் படத்திற்குப் பிறகு எரோல் ஃப்ளின் புகழின் உச்சிக்கு செல்கிறார். 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி மாரடைப்பால் தமது 50 ஆவது வயதில் உயிர் பிரியும் வரை, திரையுலகின் புகழ் உச்சியிலேயே இருந்திருக்கிறார். கியூப புரட்சியின் போது, ஃபிடல் காஸ்ட்ரோ ஆதரவாளர்களுடன் போராட்டங்களில் பங்கேற்றதாகவும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. அப்போது அரசுப் படையினர் நடத்திய தாக்குதலில் ஃப்ளின் காயமடைந்திருக்கிறார். மூன்றுமுறை திருமணமான எரோல் ஃப்ளின், இறக்கும் தருவாயில் மூன்றாவது மனைவியைப் பிரிந்தே இருந்திருக்கிறார்.

 

ஆக, எரோல் ஃப்ளின்னை தமது மானசீக ரோல் மாடலாக எம்ஜிஆர் கருதியதற்கு நிறைய அக, புறக் காரணங்களும், நியாயங்களும் இருக்கத்தான் செய்கின்றன!

 

___________________________________________________________________________