” பால் கலப்படம் என வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை” : பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை..

`பால் கலப்படம் குறித்து அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் எச்சரித்துள்ளது.

இது சம்பந்தமாக, அந்தச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பால் கலப்படம்குறித்து அடிப்படை ஆதாரமற்ற, தவறான தகவல்களைச் சமூக வலைதளங்களில் பகிர்வதன்மூலம் பால் விற்பனை தமிழகத்தில் கடுமையாகப் பாதிக்கப்படும்.

பால் உற்பத்தியாளர்களிடமிருந்து உற்பத்தியாகும் பாலை கொள்முதல் செய்ய மறுக்கும்நிலைக்கு அரசு மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் தள்ளப்படும்.

இதன் காரணமாக, பால் உற்பத்தியாளர்களான விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி, அவர்கள் தங்களின் கறவை மாடுகளை இறைச்சிக்காக அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதிக்கு அனுப்பும் சூழலும் ஏற்பட்டு, பால் உற்பத்தியாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும்நிலை ஏற்படும். எனவே, பால் கலப்படம்குறித்து ஆதாரமற்ற தகவல்களை எவரும் பகிர வேண்டாம்.

பொன்னுசாமிஅண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்குள் விற்பனைக்கு வரும் பிற மாநில அரசு மற்றும் தனியார் பால் நிறுவனங்கள், தமிழக அரசின் ஆவின் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களின் பாலின் தரம் குறித்து சந்தேகம் எழுப்புவோர், அந்நிறுவனங்களின் பாலை உரிய ஆய்வகங்களில் ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் தரத்தை உறுதிசெய்த பிறகு, அதன் விவரங்களை சமூக வலைதளங்களில் பகிருமாறும், ஊடகங்களில் வெளியிடுமாறும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

பால் கலப்படம் தொடர்பாக வதந்திகள் பரப்புவோர்மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யக் கோரி, எங்கள் சங்கத்தின் சார்பில் ஓரிரு நாள்களில் காவல்துறையில் புகார் அளிப்பதோடு, உயர் நீதிமன்றத்தில் விரைவில் வழக்குத் தொடரவும் இருக்கிறோம்.

மேலும், ஆண்டுக்கு சுமார் 150 கோடி டன் பால் உற்பத்திசெய்து, பால் உற்பத்தியில் உலக அரங்கில் இந்தியா அசைக்க முடியாத முதலிடத்தில் இருக்கிறது. இதைத் தகர்க்கும் நோக்கில் பால் கலப்படம்குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகிறதோ? அதில் சர்வதேச சதி இருக்கிறதோ? என்கிற சந்தேகம் எங்களுக்கு எழுகிறது.

எனவே, பால் கலப்படம்குறித்து தவறான தகவல்களைத் தொடர்ந்து பரப்புவோர்குறித்து மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகக் கண்காணித்து, அவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள், தரமான பால் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.