தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி எழுதிய “திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்” நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நூலை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார். நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
நூலை வெளியட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் போது
திராவிட முன்னேற்றக் கழகம் என்பது. ஓர் அறிவியக்கம் என்பதன் அடையாளம் தான் இந்த நிகழ்ச்சி! கழகத்தைச் சேர்ந்தவர்கள், சிந்தனைத் தெளிவு கொண்ட அறிவாளிகள் என்பதன் அடையாளம் பொன்முடி அவர்கள்! அப்படிப்பட்டவர், இந்த ‘திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்’ என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆய்வு நூலை நமக்குத் தந்திருக்கிறார். கழகப் பொதுக்கூட்டங்களை மாலை நேரக் கல்லூரிகள் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார். அப்படிப்பட்ட மாலை நேரக் கல்லூரியாக திராவிட வகுப்பாக இந்தக் கூட்டம் நடந்துக்கொண்டு இருக்கிறது! இந்த வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கும் பொன்முடி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்! பாராட்டுகள்
பேராசிரியர் தெய்வசிகாமணியை பொன்முடியாக ஆக்கியவர் தலைவர் கலைஞர்! கலைஞரால் பட்டை தீட்டப்பட்டவர் பொன்முடி: அதனால்தான் தன்னுடைய செயல்பாடுகளால் மின்னுகிறார்! நம்முடைய பொன்முடி அவர்களைப் பற்றி தலைவர் கலைஞரின் ‘பஞ்ச் லைன்’-ல் சொல்லவேண்டும் என்றால் “ஆழ்கடலில் கண்டெடுத்த நன்முத்து பொன்முடி” “அறிவுமுடிதான் பொன்முடி”! இதைவிட வேறு சிறந்த பாராட்டு அவருக்கு தேவையா? திராவிட இயக்கத் தீரர்களைத் தந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் Product அவர்! மூன்று எம்.ஏ. பட்டம் முடித்து, பி.எச்.டி. செய்து, முனைவர் ஆனவர். கல்லூரி பேராசிரியராக மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பது போன்றே, சமூகத்தை பண்படுத்த தாய்க்கழகமான திராவிடர் கழகத்தின் பகுத்தறிவாளர் கழகம் மூலமாக வகுப்பெடுப்பார். அன்றைய காலகட்டத்தில், திருச்சி செல்வேந்திரன் பொன்முடி சபாபதி மோகன். இந்த மூவரணி முழங்காத மேடையும் இல்லை; இவர்களின் குரல் ஒலிக்காத ஊரும் இல்லை! இப்படி ஒரு கொள்கை வீரர் – அல்லும் பகலும் உழைத்தால், அவருக்கு தலைவர் கலைஞரின் அங்கீகாரம் கிடைக்காமல் போகுமா?
1989-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தலைவர் கலைஞர் அவர்கள் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். இதுவரைக்கும் எட்டு தேர்தலில் போட்டியிட்டு, ஆறு முறை வெற்றி பெற்று, நான்காவது முறையாக அமைச்சராக மக்கள் பணி ஆற்றி வருகிறார். தம்பி உதயநிதி சொன்னாரே. ஆமாம். என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத மாநாடு என்றால், அது, 2003-ல் நடந்த விழுப்புரம் மாநாடு! நான் மாநாட்டிற்கு தலைமைவகித்த முதல் மாநாடு. எனக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்த நம்முடைய பொன்முடிக்கு இந்த நேரத்தில் என்னுடைய இதயபூர்வமான நன்றியை, வணக்கத்தை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.