தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டெல்லாம் இல்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்து விட்டது என்றும், நிலக்கரி கொள்முதல், மின்வாரிய ஊழியர்கள் பணியிடமாற்றத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
யாரோ எழுதிக் கொடுத்த அறிக்கையை எதிர்க்கட்சி தலைவர் வெளியிட்டுள்ளதாக அவர் சாடினார். மத்திய தொகுப்பில் இருந்து 3000 மெகாவாட் மின்சாரம் குறைந்து விட்ட நிலையில் திடீரென்று காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்ததால் சில இடங்களில் அரைமணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதாக அமைச்சர் விளக்கம் அளித்தார்.
நிலக்கரி கொள்முதல்,மின்வாரிய ஊழியர்கள் பணிமாற்றத்தில் முறைகேடு என்று ஸ்டாலின் புகாரை திட்டவட்டமாக மறுத்தார். மின்சார வாரியம் வெளிப்படையான முறையில் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பை ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து 3 ஆயிரம் கோடி ரூபாயாக குறைத்துள்ளதாக அவர் கூறினார். ஒரு சாமானியனின் ஆட்சி நடைபெற்று வருவதை எதிர்க்கட்சி தலைவரால் ஏற்றுக் கொள்ள முடியாததால் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
Minister Thangamani Explained about Power shortage