திமுக தலைவர் ஸ்டாலின் மிசாவில் கைதுசெய்யப்பட்டு, மோசமான சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்டாரா என்பதற்கான ஆதாரமே இல்லை என்று பலரும் பேசிக்கொள்வதாக இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது தெரிவித்திருந்தார் அமைச்சர் பாண்டியராஜன்.
கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பிலும் நன்மதிப்பைப் பெற்றிருப்பவர் அவர். மிசா காலகட்டத்தைப் பற்றிய ஷா கமிஷன் அறிக்கையையும், இஸ்மாயில் கமிஷன் அறிக்கையையும் கவனத்தில் கொள்ளாமலேயே அவர் தனது கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். அவர் என்னுடைய நண்பர். இது பற்றி தகவல் கேட்டிருந்தால் நானே கொடுத்திருப்பேன்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நெருக்கடிநிலை இரு கட்டமாகச் செயல்பட்டது. ஜூன் 1975 முதல் ஜனவரி 1976 வரை முதல் கட்டம். அப்போது, தமிழகத்தில் மு.கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி நடைபெற்றது.
அவரது அரசை மத்திய அரசு காரணமின்றிப் பதவி விலக்கியது இரண்டாம் கட்டம். அதாவது, பிப்ரவரி 1, 1976 முதல் மார்ச் 1977 வரை. அந்தக் காலகட்டத்தில் ஸ்டாலின் உட்பட திமுக தலைவர்கள் பலரும் கைதுசெய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டில் கருணாநிதி முதல்வராக இருந்த முதல் கட்டத்தில், இந்திரா காந்தி தான் நினைத்தவாறு எல்லோரையும் கைதுசெய்ய முடியவில்லை.
திமுக அரசை சட்டவிரோதமாகப் பதவி விலக்கிய பிறகு, கைதுப் படலம் அதிகமானது. ஷா கமிஷன் அறிக்கையின்படி தமிழ்நாட்டில் திமுகவும் திகவும்தான் அதிகமான தாக்குதலைச் சந்திக்க நேர்ந்தது.
419 திமுகவினரும், 35 திராவிடர் கழகத்தினரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அவர்கள் கைதுக்கு முகாந்திரமே இல்லை என்றும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மிசா தடுப்புக் காவல் உத்தரவு தெளிவற்றதாக இருந்ததாகவும் நீதிபதி ஷா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஷா கமிஷன் விசாரணையில் பெரிய அளவுக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பங்குகொள்ளவில்லை. ஏனெனில், ஷா கமிஷன் அமைப்பதற்கு முன்னாலேயே 12.5.1977 அன்றைய ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி உத்தரவின் பேரில் நீதிபதி இஸ்மாயில் கமிஷன் அமைக்கப்பட்டது.
அப்போது சென்னை மத்திய சிறையில் பிப்ரவரி 1976-ல் மிசா கைதிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை விசாரிப்பதற்காகவும் இதர காரணங்களுக்காகவும் அந்த கமிஷன் நியமிக்கப்பட்டது.
அந்த கமிஷனில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நான் ஆஜரானதால், சில உண்மைகள் எனக்கும் தெரியும் என்பதால் இவற்றைக் கூறுகிறேன்.
அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்ட இஸ்மாயில் கமிஷனின் முழு அறிக்கையின் நகல் என்னிடம் உள்ளது.
மத்திய சிறைக்கு நேரில் சென்றேன்
சிறைக் கைதிகள் தாக்கப்பட்ட தகவல் கிடைத்தவுடன், மனித உரிமை வழக்கறிஞர் என்ற முறையில் உடனடியாக மத்திய சிறைக்கு நேரில் சென்று பார்த்தேன்.
அதன் பிறகு, மனித உரிமை ஆர்வலர்கள் ஆளுநரிடம் மனு அளித்ததால் இஸ்மாயில் கமிஷன் நியமனம் செய்யப்பட்டது.
பத்திரிகையாளர் சோலை 2010-ல் வெளியிட்ட ‘ஸ்டாலின் மூத்த பத்திரிகையாளர் பார்வையில்’ என்ற புத்தகத்தில் ‘கண்ணீர் காவியம்’ என்ற தலைப்பில் (பக்கம் 125) ஸ்டாலின் கூறுவதாக இவ்வாறு எழுதியிருந்தார்:
“சிறையில் இருந்த மார்க்சிஸ்ட் தோழர்களைச் சந்திக்க ஒரு வழக்கறிஞர் வந்தார். மிசா சட்டம் அனுமதிக்கும் எந்த வசதியும் இல்லாது அனைவரும் அவதிப்படுவதை அறிந்தார்.
அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வெற்றிதான். அந்த வழக்கறிஞர்தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு.
பின்னர், மிசா கைதிகளுக்கு லுங்கியும் சோப்பும் அனுமதிக்கப்பட்டன. டிரான்சிஸ்டர் ரேடியோ வைத்துக்கொள்வதற்கும் தடையில்லை.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி கலைஞர் அனுப்பிய உதவித்தொகை தங்கள் வீடு தேடிச்செல்வதை அறிந்த மிசா கைதிகள் பூரித்துப்போயினர். பட்ட துயரங்களெல்லாம் பஞ்சாய்ப் பறந்துபோயின.”
இனி, இஸ்மாயில் கமிஷன் அறிக்கையிலிருந்து சில பகுதிகள்: கமிஷன் முன்னால் 17.7.1977 அன்று மு.க.ஸ்டாலின் மனுதாரர்களின் இரண்டாவது சாட்சியாக விசாரிக்கப்பட்டார்.
கமிஷன் அறிக்கையில் பக்கம் 40-ல் அன்றைய சிறைக் கண்காணிப்பாளர் (வித்யாசாகர்) 4.3.76 தேதியிட்ட கடிதத்தைத் தலைமைச் செயலாளருக்கு அனுப்பியதில் உள்ள சாராம்சம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில், 3.3.76 அன்று திமுக தலைவர் கருணாநிதி, மிசா கைதியாக இருந்த மு.க.ஸ்டாலினை மத்திய சிறையில் நேர்காணல் கண்டதாகவும்,
அப்போது அவர்களுக்கிடையே நடைபெற்ற உரையாடலில் ஸ்டாலின் தன்னை யாரும் அடித்ததாகக் கூறவில்லை என்றும் எழுதியிருந்தார்.
எம்ஜிஆரும் ஏற்றுக்கொண்ட அறிக்கை
இதுகுறித்து நீதிபதி இஸ்மாயில் தனது அறிக்கையில் அவரது சாட்சியம் நம்ப முடியவில்லை என்றும், அப்படியே அடிபட்டிருந்தால் அன்றைய காலகட்டத்தில் யாரும் சிறை அதிகாரிகள் முன்னிலையில் தாங்கள் அடிபட்டதைப் பற்றி சொல்லியிருக்க முடியாது என்றும்,
ஒருவேளை சொல்ல முயன்றிருந்தால் சிறை அதிகாரிகள், உறவினர் நேர்காணலைத் தடுத்திருப்பார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். கைதிகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதைத் தவிர, மோசமாக நடத்தப்பட்டதையும் திமுகவினரைக் கட்சியிலிருந்து ராஜினாமா செய்ய பலவந்தப்படுத்தப்பட்டதையும் குறிப்பிட்ட நீதிபதி இஸ்மாயில், சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்குப் பரிந்துரைத்திருந்தார்.
அவர் அறிக்கை சமர்ப்பித்த காலகட்டத்தில் எம்ஜிஆர் தலைமையில் மாநில அரசு செயல்பட்டது. கமிஷனின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசு, அரசாணை 379 (15.2.1978) உத்தரவை வெளியிட்டது.
எம்ஜிஆர் தலைமையிலான அஇஅதிமுக அரசானது நீதிபதி இஸ்மாயில் அறிக்கையை ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்றத்திலும் உறுதி அளித்தது. நண்பர் பாண்டியராஜன் இதுபோன்ற ஆதாரம் இல்லாத தகவல்களை இனிமேல் வெளியிடக் கூடாது என்பது என் விருப்பம்.
– கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்
நன்றி
.இந்து தமிழ்திசை நாளிதழ்