திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இருந்து ரன்வீர்ஷாவால் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் கல் தூண்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கூறினார்.
திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகளில் பல மாற்றப்பட்டு போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.
இதேபோல் விளமல் பதஞ்சலி மனோகரர் ஆலயத்தின் குடமுழுக்கு விழாவின் போது ஆலயத்திற்கு 12 ஐம்பொன் சிலைகள் கொடுக்கப்பட்டதாகவும், அவற்றில் 8 சிலைகள் மட்டுமே மீண்டும் ஒப்படைக்கப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது.
இதனையடுத்து பாதுகாப்பு மையத்தில் உள்ள சிலைகளின் உண்மைத்தன்மை குறித்து சிலைகடத்தல் தடுப்பு ஏ.டி.எஸ்.பி. ராஜாராமன் தலைமையிலான போலீசார், தொல்லியல் துறையினருடன் இணைந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்த ஆய்வு 2 நாட்கள் நடைபெறும் என்றும், சிலைகளின் உயரம், எடை, அகலம், சிலைகளின் வடிவமைப்பு ஆகியவை கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.
இந்த ஆய்வுப் பணிகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன். மாணிக்கவேல் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுவரை 87 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன என்றும் தொடர்ந்து காப்பகத்தில் உள்ள அனைத்து சிலைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் கூறினார்.
மேலும் இக்கோவிலில் உள்ள கல் தூண்களை ரன்வீர்ஷா கடத்தியதாக புகார்கள் வந்துள்ளதாகவும் அது குறித்தும் விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.