முக்கிய செய்திகள்

பிரதமர் மோடி இன்று 2 நாள் பயணமாக நேபாளம் சென்றார் –


பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று நேபாளம் சென்றுள்ளார். அங்கு நீர் மின்நிலைய கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப்பயணமாக இன்று நேபாளம் புறப்பட்டுச் சென்றார். நேபாள நாட்டு பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். இந்தியாவில் இருந்து புறப்பட்டு, நேபாளத்தின் வரலாற்று சிறப்பு மிக்க நகரமான ஜனக்பூருக்கே நேரடியாக பிரதமர் மோடி செல்கிறார். அங்கிருந்து முக்திநாத் புறப்படும் மோடி, அதற்கு முன்பாக சிறப்பு வழிபாட்டிலும் ஈடுபடுகிறார்.

முக்திநாத்தில் இருந்து காத்மாண்டு செல்லும் பிரதமர் மோடி, இருநாட்டு உறவுகள் குறித்து அந்நாட்டு ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரி, துணை ஜனாதிபதி நந்த பகதூர் புன், பிரதமர் ஒலி உள்ளிட்ட தலைவர்களுடன் பேச உள்ளார்.

மூன்று ஆண்டுகளில், பிரதமர் மோடி நேபாளம் பயணம் மேற்கொள்வது இது மூன்றாவது முறையாகும். இந்த சுற்றுப்பயணத்தின்போது ஜனக்பூரில் இருந்து அயோத்திக்கு நேரடி பேருந்து சேவையை தொடங்கி வைக்கிறார். ஷர்மா ஒலியுடன் இணைந்து 900 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய நீர் மின் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.