முக்கிய செய்திகள்

பிரதமர் மோடி தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்க தயாரா?: ப.சிதம்பரம்..

குடியுரிமைச் சட்டம் தொடர்பான கேள்விகளுக்கு தொலைக்காட்சி விவாதத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க தயாரா? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரையில் பதிவிட்டதாவது,

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் (சிஏஏ), எவருடைய குடியுரிமையும் பறிக்கப்பட மாட்டாது. குடியுரிமை அளிப்பதற்காகத்தான் அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

ஆனால், சிஏஏ மற்றும் என்ஆர்சி உள்ளிட்டவை அமலாவதன் மூலம் பலரது குடியுரிமை பறிபோக வாய்ப்புள்ளது.

இதில், தன் மீது விமர்சனங்களை முன்வைக்கும் 5 நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் தொலைக்காட்சியில் கேள்வி, பதில் விவாதத்தில் பங்கேற்க பிரதமர் மோடி தயாரா?

இந்த விவாதத்தை மக்கள் நேரில் பார்த்த பின்னர் சிஏஏ தொடர்பான தங்களின் நிலைப்பாட்டை எடுக்கட்டும். இதற்கு பிரதமர் மோடி நிச்சயம் சாதகமான பதிலை அளிப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

ஏனென்றால் பிரதமர் எப்போதும் விமர்சனங்களையும், கேள்விகளையும் தவிர்த்து தனது நிலைப்பாட்டை மட்டுமே பேசி வருகிறார். இதனால், யாராலும் பிரதமரிடம் நேரடியாக விமர்சனங்களை முன்வைக்க இயலவில்லை.

ஆனால், நாங்கள் தினமும் ஊடகங்களைச் சந்தித்து அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.